‘எந்திரன்’ படத்தின் கதை மீது உரிமை கோரிய வழக்கில், இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் அளிக்காததால் மனுதாரரின் தரப்பு ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸவர்யா ராய் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய ‘எந்திரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. பல பெரிய, புகழ் பெற்ற படங்களுக்கு நேரும் ‘அந்தக் கதை என்னுடையது’ என்கிற சிக்கலில் இந்த ‘எந்திரனும்’ சிக்கிக் கொண்டது.
அந்த நேரத்தில் ஆரூர் தமிழ்நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அதில், “நான் ‘இனிய உதயம்’ என்ற மாத இதழில், 1996–ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் கதையொன்றை எழுதினேன். அதில் ராபின் என்ற ஆராய்ச்சியாளர், ‘சூப்பர் பவர் ரோபோட்டை’ உருவாக்குகிறார். மனிதனை போல் தோற்றம் அளிக்கும் இந்த ரோபோட் மனிதர்களின் செயல்களில் 95 சதவீதம் செய்யும் திறமை கொண்டது. பின்னர், ‘திக் திக் தீபிகா’ என்ற தலைப்பில் நாவலாகவும் இந்த கதை வெளியானது.
இந்தக் கதையை அப்படியே ‘எந்திரன்’ என்ற பெயரில் இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக என்னிடம் எந்த அனுமதியையும் அவர் பெறவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பார்த்த என்னுடைய உறவினர்கள், என்னுடைய ‘ஜூகிபா’ கதையை அப்படியே ‘எந்திரன்’ படமாக எடுத்துள்ளதாக கூறினார்கள். இதையடுத்து இந்த படத்தை பார்த்து அது என்னுடைய கதைதான் என்பதை உறுதி செய்தேன்.
எனவே, ‘எந்திரன்’ படத்தின் கதை உரிமையாளர் என்றும், காப்புரிமை கொண்டவர் என்றும் என்னை அறிவிக்க வேண்டும். என்னுடைய ‘ஜூகிபா’ கதையை கொண்டு ‘எந்திரன்’ படக் கதையை உருவாக்கியுள்ளதாக அறிவிக்க வேண்டும். எனக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாயை வழங்க இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.
பல வருட காத்திருப்புக்குப் பின்னர் இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினர் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதனால் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் எதிர்த் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும். மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய ‘மாஸ்டர்’ கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் இதனைப் பதிவு செய்யவேண்டும்…” என்று உத்தரவிட்டார்.
படக் குழுவினருக்குள் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் காரணமாகவே அவரவர் சார்பான வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது தீர்ப்பு வேறுவிதமாக போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த்த் தீர்ப்பு இடைக்கால தடை வாங்கவோ அல்லது மீண்டும் விசாரணை நடத்தும்படியோ கேட்டு ‘எந்திரன்’ படக் குழுவினர் விரைவில் கோர்ட் படியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்கவுள்ள நிலையில் இப்படியொரு சர்ச்சையா..?