எஸ்.ஏ. புரொடெக்சன்ஸ் சார்பில் கே.அமீர்ஜான் தயாரிக்கும் படம் ‘குரங்கு கைல பூமாலை’.
இந்தப் படத்தில் ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக சாந்தினி மற்றும் நிஷா, சரவண சுப்பையா, கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
மாயன் ஒளிப்பதிவு செய்ய சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். சாய் குருநாத் இசையமைத்திருக்கிறார். பாடல்களை பாலு நாராயணன், மோகன்ராஜன், குரு. அய்யாத்துரை, என். இதயா ஆகியோர் எழுதியிருக்கின்றனர். குரு.அய்யாத்துரை, நீல்சன், வல்லவன் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.கிருஷ்ணன்.
படம் பற்றி பேசிய இயக்குநர் கிருஷ்ணன், “தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை ஏமாற்றியதால், மனம் போனபோக்கில் வாழும் ஒருவன், தன் வலையில் சிக்கும் எல்லாப் பெண்களையும் காதலிப்பது போல் நடித்து தன் ஆசைக்கு பயன்படுத்திக் கொள்கிறான்.
மற்றொருவனோ ஒரே பெண்ணை தீவிரமாகக் காதலித்து அவளையே திருமணம் செய்ய நினைக்கிறான்.
முறை மாமன் ஒருவன் தன் முறை பெண்ணை திருமணம் செய்தே தீருவேன் என்று அடாவடி பண்ணுகிறான்.
இன்னொருவன் தனக்கு திருமணமே வேண்டாம், ஆனால் தன்னோட டைம் பாஸ்க்கு தினமும் ஒரு புதிய பெண் வேண்டும் என்று தேடி அலைகிறான்.
இந்த நான்கு பேர்களிடம் பல இடங்களில் சிக்கி தவிக்கும் ஒரே கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் நாயகி.
இப்படி இவர்களிடம் சிக்கி தவிக்கும் இந்த பெண்ணின் நிலைமை என்ன..? இதுபோல விதவிதமான மனநிலை கொண்ட இந்த ஆண்களின் உண்மைத்தனம்தான் என்ன..? இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தருவதுதான் இந்த ‘குரங்கு கைல பூமாலை’ திரைப்படம்..” என்றார்.












