நடிகர் சங்கத் தேர்தல், அரசியல் தேர்தல் களத்திற்குக் கொஞ்சம் குறைவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நாட்களில், வாக்குச் சேகரிப்பை முடித்துவிடலாமே என்றெண்ணி விஷால் தரப்பினர் மறுபடியும் தங்களது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவங்கிவிட்டார்கள்.
நடிகர்கள் விஷால், நாசர், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் சேலம், நாமக்கல், திருச்சி, நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து ஆதரவு திரட்ட, சென்னையில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டு சென்றனர்.
இந்த நேரத்தில் இவர்களை பயமுறுத்தும் நோக்கிலோ, பணிய வைக்கும் நோக்கிலோ புதிய சட்டச் சிக்கல்களில் இவர்களை மாட்டி வைக்கும் வேலைகளும் மும்முரமாக நடந்து வருவதாக விஷால் தரப்பினர் கூறுகின்றனர்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் தரப்பினர் தங்களை மிரட்டி ஆதரவு கேட்பதாகவும், கொலை மிரட்டல் விட்டுள்ளதாகவும் புகார் கொடுத்திருப்பது பிரச்சினை வேறு எங்கோ போய்க் கொண்டிருப்பதை உணர்த்தியிருக்கிறது.
எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துவிட்டு நாமக்கல் நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நிருபர்களிடம் பேசும்போது, “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் நடத்தக் கூடாது என, வழக்கு தொடர்ந்த விஷால், மாவட்டந்தோறும் சென்று, நாடக நடிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்துக்கு வரும் விஷால், இங்கேயிருக்கும் எங்களது நாமக்கல் நாடக நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி, ஓட்டு கேட்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால், விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். விஷால் எந்தப் பதவிக்கு போட்டியிடுகிறாரோ, அதே பதவிக்கு, ராதாரவி என்னை நிறுத்தினால், விஷாலை எதிர்த்து நான் போட்டியிடத் தயார்..” என்றார்.
இந்த புகார் குறித்து பேசிய நடிகர் நாசர், “நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, நினைத்துதான் நாங்களும் செயல்படுகிறோம்; சங்கத்தை உடைக்கும் எண்ணம் எங்களுக்குத் துளியும் கிடையாது. நாடக நடிகர்கள் நலனுக்காக, சரத்குமார் தலைமையிலான நிர்வாகம் சில திட்டங்களை அறிவித்தது. ஆனால் அவர்கள் அவை எதையும் செயல்படுத்தவில்லை. அவை, முழுவதும் பயன் அளிக்கக்கூடிய திட்டமாகவும் இல்லை.
நாடக நடிகர்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்கி, நல்லபடியாக செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான், நாடக நடிகர்களின் ஆதரவை பெற முயன்று வருகிறோம்; நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. அப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் எங்களில் யாருக்கும் இல்லை; எங்களுடைய சக கலைஞனை நாங்கள் எப்படி மிரட்டுவோம்..?
போலீஸ் எஸ்.பி.,யிடம், ஒருவர் புகார் கொடுக்கும் அளவுக்கு ஒருவர் சென்றிருக்கிறார் என்றால், நிச்சயம் தானாக சென்றிருக்க மாட்டார். எதிர்த் தரப்பினரின் துாண்டுதலில்தான் சென்றிருக்க வேண்டும். அந்த புகார் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அதற்காக நாங்கள் எதற்கும் பயப்படுபவர்கள் அல்ல; எதுவாக இருந்தாலும், எதிர்கொள்வோம். நாளை நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தினரை சந்திக்க நேரில் செல்கிறோம். அப்போது, உண்மை நிலை தெரியும்…” என்றார்.
இந்த சங்கத் தேர்தல் கிளைமாக்ஸில் டாடா சுமோ, பஜோரா ஜீப்புகள் பறக்குமோ என்கிற பயம் இப்போதே அனைவருக்கும் வந்துவிட்டது..!