full screen background image

குபீர் – சினிமா விமர்சனம்

குபீர் – சினிமா விமர்சனம்

‘கதையில்லாமல் சினிமா எடுக்க முடியாது.. சதையில்லாமலும் சினிமா எடுக்க முடியாது..’ என்ற தற்கால தமிழ்ச் சினிமாவின் இரண்டு அடித்தள பார்முலாக்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்..!

அந்தக் கல்லூரியில் ஒன்றாக படித்து முடித்து, ஒன்றாகவே சென்னைக்கு வந்து ஐ.டி. துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஐந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திரைப்படம் தயாரித்து இந்தக் கோடம்பாக்கத்தையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று நினைத்து,, கைவசமிருந்த கணினி பொட்டியை தட்டும் வேலையே தூக்கியெறிந்துவிட்டு, மேக்கப் பொட்டி தட்டும் வேலைக்கு வந்திருக்கிறார்கள். இதுதான் அவர்களது முதல் சினிமா.. ஸாரி.. காவியம்..

வேறு வேறு தொழிலில் இருக்கும் 5 நண்பர்கள் வீக் எண்ட்டை கொண்டாடும் விதமாக அன்று இரவு ஒரு நண்பனின் வீட்டில் பாட்டிலும், கையுமாக அமர்கிறார்கள். ஒரு பெக் உள்ளே போனவுடனேயே நாட்டில் பாதி பேர் முதல்வராகவும், பிரதமராகவும் ஆகிவிடுவார்கள். ஆனால் இந்த இளைஞர்களோ விக்கிபீடியா, விக்கிலீக்ஸ் நிறுவனங்களாக மாறி தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு இலவசமாக பொது அறிவை புகுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.. இந்தப் படத்தை பார்க்கும் அப்பாவி பொதுஜனங்கள் நிச்சயமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டுதான் வீடு திரும்புவார்கள்.

ஹிந்தி மொழி திணிப்பில் தங்களது பேச்சைத் துவக்கியவர்கள் கடைசியில் ஹிட்லரில் வந்து முடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போதைய இளைஞர்கள் ஹிந்தி மொழியை கற்காமல்விட்டதற்கு காரணம் நம்ம ‘தாத்தா’தான் என்று தைரியமாக வசனத்தை பேசும்போதே நமக்கு ஜெர்க்கென்றானது.. என்னடா இவ்ளோ தைரியமாக பேசுகிறார்களே என்று.. கடைசியில் அத்தனையையும் கசக்கிப் பிழிந்துவிட்டுத்தான் எண்ட் கார்டு போட்டிருக்கிறார்கள்.

இந்த ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் என்கிற விஷயத்தில்கூட முதலில் போராட்டத்தைத் துவக்கியவர்கள் எந்தக் கட்சியையும் சாராத கல்லூரி மாணவர்கள்தான் என்கிற உண்மையை மட்டும் இவர்கள் அறியாமல் போய்விட்டார்கள்.. எடுத்த எடுப்பிலேயே தி.மு.க.தான் இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தைத் துவக்கியது என்று சொல்லிவிட்டார்கள். இந்த அளவுக்கு தமிழகத்தில் உண்மை நிலவரம் பரவியிருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

முதலில் கல்லூரி மாணவர்கள் துவக்கிய போராட்டத்தை தி.மு.க. தனது கையில் எடுத்துக் கொண்டு தானே முன்னின்று களத்தில் குதிக்க.. இது தி.மு.க. நடத்திய போராட்டமாகவே வரலாற்றில் மாறிவிட்டது.. இதுதான் உண்மை..

பரவாயில்லை.. இதோடு விட்டார்களா..? இடையிடையே அவ்வப்போது பல்வேறு தமிழ்ப் படங்களில் இருந்து பாடல்கள் ஒலிக்க.. விதவிதமாக ஆடிப் பாடுகிறார்கள்.. நடனமாடியிருக்கிறார்கள். மறுபடியும் கட்டிங் அடிக்கிறார்கள். திரும்பவும் ஏதாவது பேசுகிறார்கள். மறுபடியும் கட்டிங்.. மறுபடியும் டான்ஸ்.. மீண்டும் பேச்சு.. அப்பா.. இந்தப் படத்தின் டயலாக் பேப்பர்கள்தான் சமீப கால படங்களில் அதிகமான பக்கங்களை கொண்டதாக இருக்குமென்று நம்புகிறோம்..

தி.மு.க., அ.தி.மு.க., கலைஞர், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., ராஜாஜி, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, சேகுவேரா, பிரபாகரன், லஞ்சம், ஊழல், அமெரிக்கா, ரஷ்யா, கொரியப் போர், ஜப்பான் சீன போர்.. இரண்டாம் உலகப் போர், ஹிட்லர்.. யூதர்கள்.. இஸ்ரேல்.. குடும்பம், குழந்தை, குட்டி என்றெல்லாம் வெறும் வசனத்தாலேயே பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.!

இரண்டு விஷயங்கள் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. கூடன்குளம் அணு மின் நிலையத்தைப் பற்றிப் பேசும்போது, “இத்தனை கோடி ரூபாயை செலவு செய்து பிளான்ட் போட்டாச்சு.. மின்சாரம் உற்பத்தியானால் தமிழகத்தின் மின்வெட்டே இருக்காது.. பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் வளரும்…” என்பதை அழுத்திச் சொல்லியிருக்கும் இவர்கள்.. அந்த கூடன்குளத்தை சுற்றியிருக்கும் 10 லட்சம் மக்களின் நிலைமை பற்றி, அதிகம் கண்டுகொள்ளாத நிலையிலேயே வசனம் பேசி முடித்திருப்பது வருத்தமாக உள்ளது.

இன்னொன்று.. இந்தக் கால கல்லூரி பெண்களை பற்றி ஓட்டு, ஓட்டென்று ஓட்டியிருக்கிறார்கள்.. அவர்கள் அப்படி.. இவர்கள் இப்படியென்று கலாய்ப்பதெல்லாம் சரிதான்.. இதேபோல ஆண்கள் செய்யும் ரவுடித்தனத்தையும் சேர்த்து சொல்லியிருந்தால் பேலன்ஸ் செய்திருக்கலாம். படத்தில் இந்தக் கதையையும் ஒன் சைடாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.. ‘பெண்ணுரிமை காவலர்கள்’ மட்டும் இந்தப் படத்தை பார்க்காமல் இருக்க வேண்டும்..! இல்லையெனில் கதை கந்தல்தான்..!

இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி..? இந்த இளைஞர்களுக்கும் நல்லது போதிக்க யாராச்சும் வேணாமா..? வருகிறார் வீட்டு ஓனர். அவரும் வந்து ஒரு கட்டிங்கை குடித்துவிட்டு.. “தம்பிகளா.. சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு குழந்தை, குட்டின்னு வாழ்க்கைல செட்டிலாகப் பாருங்கப்பா…” என்று அட்வைஸை வாரி வழங்கிவிட்டு போகிறார்.

திரும்பவும் கட்டிங்கை போட்டுவிட்டு தமிழ்ச் சினிமாவின் பிதாமக தற்போதைய நடிகர்களையும் கொத்து புரோட்டா போட்டிருக்கிறார்கள். அஜீத்தின் ‘நான்தான் ராஜா’ படத்தையும் விஜய்யின் ’புதிய கீதை’ படத்தையும் வாரித் தள்ளியிருக்கிறார்கள். மொக்கை படங்கள் கிண்டலுக்குள்ளாகும்தான்.. ஆனாலும் தல மற்றும் இளைய தளபதியின் இப்போதைய உச்ச நிலையையும் சொல்லியிருக்கலாம்தான்..!

பிரபாகரனையும், சே குவேராவையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்கள். இதில் பிரபாகரனின் பேச்சுக்கு தியேட்டரில் நிச்சயம் கை தட்டல்கள் கிடைக்கும்.. “வர்றவன், போறவனெல்லாம் நான்தான் அடுத்த சே குவேரான்றானே..!” என்ற இவர்களது கவலைக்கு நமது பாராட்டுக்கள்..!

தமிழுக்கு மாற்று சினிமாக்கள் தேவைதான். ஆனால் அவைகள் தமிழ் மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும், துறை சார்ந்தும் ஒரு திரைப்படமாக பார்க்க வைக்கும் அளவுக்கு இருந்தால் அதுவே போதும். இப்படி ஏட்டிக்குப் போட்டியாக, நாங்களும் படமெடுக்கிறோம் பாருங்கள்.. என்று சொல்லி இரண்டு மணி நேர பட்டிமன்றம் போல படத்தினை எடுத்துக் காண்பித்தால் நாம் இதனை என்னவென்று சொல்வது..? எப்படி விமர்சிப்பது..? கலைஞர்களை எப்படி அடையாளப்படுத்தி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது..?

புதியவரான திலீப் என்பவர்தான் படத்தை இயக்கியிருக்கிறார். குறைவில்லாத இயக்கம். இடையிடையே வரும் பாடல் தேர்வும், நடனமும்கூட கவனத்தை ஈர்க்கிறது.. காட்சிக்கு காட்சி ஒரே வீடாக இருந்தாலும் லொகேஷன்களை மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவெல்லாம் ச்சும்மா.. நாங்க காட்டுறதுதான் ஒளிப்பதிவு என்று சொல்லி.. நடிகர்களின் நிழல் சுவற்றில் விழுவதைக்கூட தைரியமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல் டயலாக் டெலிவரியை அனைவருமே கச்சிதமாகத்தான் வீசியிருக்கிறார்கள்.. ஆனால் ஒரு சில இடங்களில் வசனங்கள் வரம்பு மீறி போயிருப்பதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்..

எது, எதையெல்லாம் மறைத்து பேச வேண்டுமோ அதெல்லாம்தான் இக்காலத்து இளைஞர்களிடையே பேமஸ் என்றெல்லாம் நினைத்து பேசுவது விதண்டாவாதம். ‘அபான வாயு’வை வைத்து இதற்கு முன் பல படங்களில் பேச்சுக்கள் வந்தாலும் 2 பக்கங்கள் இருக்கும் அளவுக்கு வசனங்கள் இருப்பது இந்தப் படத்தில் மட்டும்தான்.. இதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம். எரிச்சலை கூட்டியிருக்கிறது..!

ஆசைக்கு இந்த ஒரு படம் எடுத்தாச்சு.. இதோட இந்த மாற்று முயற்சிக்கு மங்களம் பாடிவிட்டு ‘ஆரண்ய காண்டம்’ போலகூட வேண்டாம்.. அட்லீஸ்ட் ‘சதுரங்க வேட்டை’ போலவாவது புதிய படைப்பை படைத்தால் நிச்சயம் கோடம்பாக்கத்தில் இவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும்..!

சிந்தித்து செயல்படுங்கள் தோழர்களே..!

குறிப்பு-1 : சென்சார் போர்டு எப்படி எந்த ‘கட்’டும் சொல்லாமல் இந்தப் படத்திற்கு சர்டிபிகேட் கொடுத்தது என்று தெரியவில்லை..

குறிப்பு-2 : படத்தில் தாத்தா கருணாநிதியை பற்றி பேசித் தள்ளியவர்கள், தப்பித் தவறிகூட ஜெயலலிதாவை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புத்திசாலி புள்ளைக.. பொழச்சுக்குவாங்க..!

Our Score