full screen background image

ஆலமரம் – சினிமா விமர்சனம்

ஆலமரம் – சினிமா விமர்சனம்

பேய்ப் படம் என்று சொல்லித்தான் துவக்கத்தில் பயமுறுத்தினார்கள். ஆனால் கடைசியில் இதுவொரு அக்மார்க் காதல் திரைப்படமாக உள்ளது..! கொஞ்சம் சுவாரஸ்யமானதும்கூட..!

திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்த கோவில் வாய்ந்த ஊர் அது. அதே சமயம் அதே ஊருக்குள் கருத்தப் பாண்டி என்னும் ஒரு பேய் வாழும் ஆலமரம் ஒன்றும் ஊர்க்காரர்களின் கதைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அதே ஊரில் வசிக்கும் நாட்டுப்புறக் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ ஹேமந்த். தனது விதவை அக்காளுடன், அவரின் பெண் குழந்தைகளுடன் இருக்கிறார்.. நேரம் கிடைக்கும்போது கூத்துக் கட்டுவார் ஹீரோ..

அந்த்த் திருமண தோஷம் பரிகாரம் செய்ய வேண்டி அதே ஊருக்கு குடி வருகிறார் ஹீரோயின் அவந்திகா மோகன். ஹீரோவின் பக்கத்து வீட்டிலேயே குடியேறுகிறார். இருவரும் ஒரு நல்ல முகூர்த்த நாளில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள.. வேறென்ன சினிமா பாணியில் காதல் தீயாய் பற்றிக் கொள்கிறது..

அந்தச் சின்ன ஊரில் காதலர்கள் மறைவாய் பேசிக் கொள்ள ஓரிடமும் இல்லாத நிலையில் ஹீரோவின் பிரெண்ட் சடையன்தான் இந்த கருத்தப் பாண்டி குடியிருக்கும் ஆலமரத்தை கை காட்டுகிறான் காதலர்களுக்கு..! ஊர்ச்சனம் எட்டிக் கூட பார்க்காத அந்த ஆமலரத்தைச் சுற்றி, சுற்றி வந்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் காதலர்கள்..

இந்த நேரத்தில் அதே ஊரில் இருக்கும் இரண்டு அலப்பறை பணக்காரர்களும் ஹீரோயினை பார்த்து ஜொள்ளுவிடுகிறார்கள்.  ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பணத்தை இறைக்கும் பழக்கமுள்ள, இவர்களுக்கு ஹீரோயின் மேல் ஆசை வர.. ஹீரோவின் பிரெண்ட்டு சடையனிடம் இதற்காக நூல் விடுகிறார்கள். பணத்தைக் கொடுத்தால் ஹீரோயினை தான் செட்டப் செய்துவிடுவதாக கூறி அவர்களிடமிருந்து ஏராளமாக பணத்தைப் பறிக்கிறான் சடையன்.

இந்தக் காதல் ஒரு பக்கம் இருக்க.. தாய், தந்தையில்லாத ஹீரோயினை இதுவரையில் வளர்த்து வந்த வயதான மாமாவுக்கு திடீரென்று கல்யாண ஆசை வந்துவிட.. தானே ஹீரோயினை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார்.

அடுத்த காட்சியிலேயே தான் சின்ன வயதில் அதே மாமாவின் முதுகில் தொங்கி விளையாடியதை ஹீரோயின் கண்ணீரோடு எடுத்துரைக்க.. வயதான மாமாவும் மனம் மாறி ‘பாசமலர்’ சிவாஜியாக துடிதுடித்து ‘உன்னை உன் காதலனோடேயே சேர்த்து வைக்கிறேன்’ என்கிறார்.

ஹீரோயினின் கல்யாணப் பேச்சுக்களை கேள்விப்பட்ட இரண்டு மைனர்களும் சடையனை ஆள் வைத்துத் தூக்க திட்டமிட.. அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறான் சடையன்.. இன்னொரு பக்கம் நாளைக்கு கல்யாணத்தை வைச்சுக்கிட்டு இந்த சடையன் எங்க போனான்னு தேடி ஹீரோவும் அவனைத் தேடுகிறான்.. இனி என்ன ஆனது என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.. நிச்சயமாக இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் நீங்கள் எதிர்பாராதது. இது மட்டும் உறுதி.

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த பேய் காட்சிகளெல்லாம் ஓகேதான்.. அதையே மெயின்டெயின் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் பாதியிலேயே கழண்டு கொண்டு காதலைத் திணித்ததிலேயே படத்தை ஆழ்ந்து ரசிக்க முடியவில்லை.. ஆட்டுக்குட்டியை ஸ்வாகா செய்யும் மரக்கிளைகள்.. பக்கத்து பக்கத்து ஊர்களில் யாருக்கேனும் சாமி பிடித்துவிட்டால் இந்த ஊர் கருத்தப் பாண்டிதான் பிடித்திருக்கிறான் என்று நினைத்து இங்கே கொண்டு வந்து விடும் கிராமத்து அப்பாவி மக்கள்.. அதில் ஒரு கதையை மட்டுமே இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பேய் பிடித்த பெண்ணிடம்.. “நீ வேண்ணா ஊருக்கு தொலைவா இருக்குற அந்த ஆலமரத்துல போய் உக்காந்துக்க.. இந்தப் பொண்ணை மட்டும் விட்ரு.. பாவம்..” என்று கெஞ்சிக் கூத்தாடி பேயை ஆலமரத்துக்கு டிரான்ஸ்பர் செய்கிறாராம் பூசாரி.  இதுவரையிலும்கூட சரியாகக் கொண்டு வந்தவர்கள், இதற்கு மேல் பேயை எப்படி ஊருக்குள் கொண்டு வருவது என்பது தெரியாமல் டிராக்கை மாற்றிவிட்டார்கள் போலும்..

நாயகன் ஹேமந்த் புதுமுகம்.. மேக்கப் தெளிவாக தெரிகிறது. இவ்வளவு அலட்சியமாகவா ஒளிப்பதிவு செய்வது..?  நடிப்பில் கொஞ்சம், கொஞ்சம் தேறியிருக்கிறார்.. பாடல் காட்சிகளில் நடனத்தை அழகாக ஆடியிருக்கிறார். இது மட்டும் போதாதே பிரதர்..? அடுத்தடுத்த படங்களில் முன்னேறுங்கள்..

ஹீரோயின் அவந்திகா மோகன். வழக்கம்போல மலையாள வரவு.  முகம் பளிச்சென்று இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது.. நடிப்பில் குறை வைக்கவில்லை.. அந்த பெரியவரிடம் தனது பால்ய காலத்து கதையைச் சொல்லும்போதும், கிளைமாக்ஸில் சடையனை கண்டுபிடிக்கும்போதும் நடிப்பை காட்டியிருக்கிறார்.. மற்றபடி வேறு ஏதாவது நல்ல கேரக்டர்கள் கிடைத்து முன்னேறினால் உண்டு..

சடையன் கேரக்டரில் நடித்தவர்தான் அதிகம் கவனத்திற்குள்ளாகியிருக்கிறார். ஆனாலும் அவருக்குள்ளும் ஒரு சேது ஒளிந்திருக்கிறான் என்பதை அறிய முடியாமல் போய்விட்டதே. இந்த ஒரு விஷயத்துக்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!

1985-ம் காலத்து காமெடி போல, அந்த இரண்டு மைனர்களை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.. இதெல்லாம் இந்தக் காலத்துல தேவையா..? எடுபடுமா..?

ஒளிப்பதிவு உதய்சங்கர்.. டிஜிட்டலில் எடுத்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் அழகுடன் எடுத்திருக்கலாம். பாடல் காட்சிகளைத் தவிர மற்றவற்றில் ஒளிப்பதிவு தனியாகத் தெரியவில்லை.. ராஜீவனின் இசை குறிப்பிடத்தக்கது. முதல் பாடலில் கிராமத்து பின்னணியில் நாட்டுப் புறக் கலையை பாடல் வரிகளில் கொண்டு வந்து கொட்டியிருப்பது அழகு. அந்தப் பாடலை கேட்கவும் அழகாக இருந்தது. டூயட்டுகளும் படத்திற்கொரு ரம்மியத்தைக் கொடுத்திருக்கின்றன. பேய் பயமுறுத்தலுக்கு அதிகம் உழைக்க வேண்டியது பின்னணி இசைதான். இதில் ஓரிடத்தில் மட்டுமே லேசாக பயமுறுத்த பின்னணி இசை உதவியிருக்கிறது. அவ்வளவுதான்..!

வெறுமனே ஆள் நடமாட்டம் இல்லாத ஆலமரம் என்று காட்டுவதற்கு ஒரு பேய்க்கதை.. இதற்கொரு ஓப்பனிங்.. ‘ஆலமரம்’ என்ற டைட்டில்.. திரில்லிங் டிரெயிலரெல்லாம் போட்டுவிட்டு கடைசியில் வழக்கமான காதல் பலகையில் நம்மையும் மாட்டிவிட்டார்கள்..

கிளைமாக்ஸ்வரைக்கும் பார்த்தால் மட்டுமே படம் பிடிக்கும்..!

Our Score