full screen background image

வடசென்னையின் அடுத்த படம் ‘ஆக்கம்’..!

வடசென்னையின் அடுத்த படம் ‘ஆக்கம்’..!

இப்பத்தான் ‘மெட்ராஸ்’ என்ற வடசென்னையின் முகத்தைக் காட்டும் படத்தை கொண்டு வந்தார்கள். இப்போது அடுத்த படமும் ரெடி..

இயக்குநர் மு.களஞ்சியத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஞானசம்பந்தம் இயக்கும் முதல் படம் ‘ஆக்கம்’.

aakkam-poster

“இது வட சென்னையின் இன்னொரு பக்கத்தைக் காட்டும்.. ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. அவன் எப்படி, எந்த சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே அவன் வாழ்க்கையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதைத்தான் இந்தப் படத்தில் திரைக்கதையாக்கியிருக்கிறேன்…” என்கிறார் இயக்குநர் ஞானசம்பந்தம்.

ஆதிலட்சுமி பிலிம்ஸ் சார்பில் E. செல்வம், E. ராஜா இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோவாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். சில மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் வைதேகி தமிழுக்கு இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். மேலும் பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு –G.A. சிவசுந்தர், எடிட்டிங் –L.V.K. தாசன், சண்டை பயிற்சி – ராஜசேகர், நடனம் –ஷோபி, சாந்தி அரவிந்த், சங்கர், கலை – மயில் கிருஷ்ணன்.

படத்தின் கதை பற்றி பேசிய இயக்குநர், “சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துச்சு. அதைத்தான் இந்தப் படத்துல கதையா சொல்லியிருக்கேன். படத்துல காதலும் இருக்கு. ஆனால் அதுதான் மெயின் கதை இல்ல. ஹீரோயின் வைதேகி, ஹீரோ சதிஸ் ராகவனை ஒருதலையா காதலிப்பாங்க. ஆனால் ஹீரோ எல்லா பெண்களையும் பார்க்கிற பார்வையே வேற. அவன் அவளை காதலோட பார்க்கவே மாட்டான். அப்புறம் என்ன பார்வை..? என்ன கோணம்கிறதுதான் படம்..!

எப்படியிருந்தாலும் ஒண்ணு மட்டும் உறுதி.. எங்க படம் காதலையெல்லாம் தாண்டி நீங்க நினைச்சு கூட பார்க்காத வேறொரு விஷயத்தைச் சொல்கிறது. ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர்னு வட சென்னை ஏரியாக்களில் மட்டுமே இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கோம்..” என்றார்.

எல்லாத்தையும் சொல்லிட்டு இயக்குநர் கடைசியா சொன்ன ஒரு விஷயம்தான் நமக்கு வயித்துல புளியைக் கரைக்குது. “இந்தப் படத்துல பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார். ஜெயிலுக்குள்ளயே பெரிய ரவுடியா இருப்பார்.. அவரோட ரசிகர்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்…” என்றார்.

அது சரி.. அவர்தான் நிறைய ஜெயில்களை பார்த்தவராச்சே..! உண்மையாகவே நடிச்சிருப்பாரே..?!

Our Score