full screen background image

கொளஞ்சி – சினிமா விமர்சனம்

கொளஞ்சி – சினிமா விமர்சனம்

White Shadows நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.நவீன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சமுத்திரக்கனியும், சங்கவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராஜாஜ், நைனா சர்வார், ரஜினி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி இவர்களுடன் கிருபாகரன், நசாத் என்ற இரண்டு சிறுவர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விஜயன் முனுசாமி, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், இசை – நடராஜன் சங்கரன், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா, வசனம் – எம்.நவீன், தனராம் சரவணன், ஒலி சிறப்பு – கே.பிரேம்குமார், நிர்வாகத் தயாரிப்பு – சதீஷ் சாமிநாதன், நூதன் ஆஷிக், லைன் புரொடியூஸர் – பரஞ்சோதி, சண்டை இயக்கம் – விக்கி, புகைப்படங்கள் – விக்கி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், விளம்பர வடிவமைப்பு – DOT X MEDIA SOULTIONS.

2016-ம் ஆண்டு பூஜை போடப்பட்டு அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று சென்சார் செய்யப்பட்ட இத்திரைப்படம், மூன்றாண்டு கால காத்திருப்புக்குப் பின் இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

அக்மார்க் சமுத்திரக்கனியின் படம்தான் இது. அவரை வைத்து சமூகக் கருத்துக்களைத்தான் சொல்ல முடியும் என்பதை தப்பாமல் சொல்லியிருக்கும் படம் இது.

கொளஞ்சி என்ற 13 வயது சிறுவனின் கதைதான் இத்திரைப்படம். அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்படாமல், சொல் பேச்சுக் கேட்காமல்.. படிப்பும் ஏறாமல்.. பள்ளியிலும் ரவுசுத்தனம் செய்து கொண்டு.. தான் சுதந்திரமாக யார் பேச்சையும் கேட்காமல் வாழ வேண்டும் என்கிற கொள்கையுடைய ஒரு சிறுவனின் தறி கெட்ட வாழ்க்கையினால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், சிதறல்களும்தான் இந்தப் படத்தின் கதை.

சமுத்திரக்கனியும், சங்கவியும் தம்பதிகள். இவர்களுக்கு கொளஞ்சி என்ற 13 வயதில் ஒரு மகனும், 8 வயதில் இன்னொரு மகனும் இருக்கிறார்கள். இவர்களின் உறவினர்களும் இதே ஊரில்தான் வசித்து வருகிறார்கள்.

கொளஞ்சி யார் பேச்சையும் கேட்காமல் தினமும் ஒரு ஏழரையை இழுத்துக் கொண்டு வருவதால் கோபப்படும் சமுத்திரக்கனி தினமும் அவரைக் கண்டிக்கிறார். தண்டிக்கிறார். இதனால் தன்னுடைய அப்பாவை முற்றிலும் வெறுக்கிறான் கொளஞ்சி.

அம்மா சங்கவி இதையெல்லாம் புரிந்த கொள்ளும் மனநிலையில் இல்லை. அவருக்கோ பையன் மீது கொள்ளை பாசம். இதனால் சமுத்திரக்கனியுடன்தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் தம்பி மீது அதீத பாசத்தைக் காட்டுகிறாரே அப்பா என்கிற பொறாமையில் கொளஞ்சி செய்யும் ஒரு செயல்.. அந்தக் குடும்பத்தையே இரண்டாகப் பிரிக்கிறது.

இந்தச் சம்பவத்தினால் ஏற்படும் சண்டையின்போது, கோபத்தில் சங்கவியை கை நீட்டி அடித்து விடுகிறார் கனி. இதனால் கோபப்படும் அவர் கொளஞ்சியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போய்விடுகிறார். கனியும், இரண்டாவது மகனும் மட்டும் தனித்துவிடப்படுகிறார்கள்.

பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தோல்வியடைந்த வருத்தம்கூட இல்லாமல் அம்மாவுடன் மாமா வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்கிறான் கொளஞ்சி. சங்கவியோ “கணவர் சமுத்திரக்கனியே வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டால்தான் திரும்பச் செல்வேன்..” என்று உறுதியாய் நிற்கிறார். கனியோ, “அடித்தது தவறுதான்.. ஆனால் நான் கணவன்தானே.. இது அவள் வீடுதானே.. வர வேண்டியதுதானே..?” என்று அமைதி காக்கிறார்.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா..? கொளஞ்சியின் படிப்பு என்ன ஆனது..? அவனது சேட்டைகள் அடங்கியதா..? இல்லையா..? என்பதெல்லாம் படத்தின் மீதமான திரைக்கதை.

கொளஞ்சியாக நடித்திருக்கும் சிறுவன் கிருபாகரன்தான் படத்தின் மையப் புள்ளி. சேட்டைகளின் அடையாளமாகத் திகழும் அளவுக்கு இவன் செய்யும் பல குறும்புகள்தான் படத்தை நகர்த்துகின்றன.

ஐஸ் வண்டிக்காரரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ஐஸ் கேட்பது,, பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியைக்கு இன்னொரு ஆசிரியர் கொடுத்ததாகச் சொல்லி பொய்யான காதல் கடிதத்தைக் கொடுப்பது.. கிரிக்கெட் விளையாடும்போது ரவுடித்தனம் செய்வது.. ராஜாஜின் காதலுக்கு தூது சென்று காதலை துவக்கி வைப்பது என்று பலவித சேட்டைகளையும் அனாயசமாக செய்திருக்கிறான் கிருபாகரன்.

விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிட வைக்க “சூடு வைச்சிருவேன்” என்று மிரட்டும் அத்தையிடமிருந்து அந்தக் கன்னக்கோலை கண்ணிமைக்கும் நேரத்தில் தம்பியின் கையில் பதிய வைத்து தனது கொடூர மனதைக் காட்டும்போதுதான் கொளஞ்சியின் எக்ஸ்ட்ரீம் லெவல் குணம் தெரிகிறது.

இதேபோல் குச்சித் தண்டு விளையாட்டின்போது அப்பாவின் மீதே அடிப்பதுபோல பாவ்லா காட்டி அவரை அவமானப்படுத்தும்போது நமக்கே ஓடிப் போய் நாலு சாத்து சாத்தலாம் போல தோன்றுகிறது. இந்த அளவுக்கு டெர்ரர் காட்டும் அளவுக்கு கொளஞ்சியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வளர்த்திருக்கிறார் இயக்குநர்.

இவனுடைய தோஸ்த்தாக வரும் நசாத் என்னும் குட்டிப் பையன் பேசும் பேச்சும், சேட்டையும் பல இடங்களில் ரகளையைக் கூட்டுகிறது. பேச்சுக்குப் பேச்சு ஆங்கில வார்த்தை கலப்பினத்தில் நசாத் பேசும் வசனங்கள் ‘நச்’ என்று இருக்கிறது.

சமுத்திரக்கனி பெரியாரிஸ்ட்டாக கருப்புச் சட்டை அணிந்தவராக இருந்தும், பையனை வளர்ப்பது எப்படி என்பது பற்றிய உண்மையை படத்தின் இறுதியில்தான் அறிந்து கொள்வதாக வைத்திருப்பது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு முரணாக இருக்கிறது.

இதேபோல் “கல்யாணத்தின்போது தாலி கட்டுவதை மிகவும் கட்டாயப்படுத்தி செய்ய வைத்ததாகச்” சொல்கிறார் சங்கவி. இப்படி முற்போக்கு சிந்தனையாளராக இருக்கும் சமுத்திரக்கனி, சங்கவியை கை நீட்டி அடித்துவிட்டு குற்றவுணர்ச்சியே இல்லாமல் ‘மனைவியே திரும்பி வரட்டும்’ என்று வீம்பாக இருப்பதாகக் காட்டியிருப்பது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சம் சேதாரம் செய்திருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் சாதி, சாமி, பெரியார் பற்றியெல்லாம் சமுத்திரக்கனி லெக்சர் கொடுப்பது சரியாகத்தான் இருக்கிறது என்றாலும் மறைமுகமாகவே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதால், தியேட்டர் ரசிகர்களில் பாதிப் பேருக்கு புரிய வாய்ப்பில்லை.

மகனைக் கண்டித்து வளர்க்க நினைக்கும் அப்பாவாகவும், ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருக்க விரும்பும்வகையிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

சங்கவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். பையன் மீதான பாசத்தில் அவன் செய்யும் சேட்டைகளை நியாயப்படுத்தி, சின்னப் பையன்.. அப்படித்தான் இருப்பான் என்றே சொல்லி சமாளிக்கும் அக்மார்க் சராசரி தாயார்களைதான் படத்திலும் சங்கவி காட்டியிருக்கிறார்.

தன்னுடைய தாயாரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனி வந்து அழைத்தால்தான் போவேன் என்று சொல்லி உறுதி காட்டுவதும்.. “பிடிக்கலைன்னா சொல்லிருங்க. நான் வேற எங்கயாச்சும் போயிர்றேன்…” என்று அண்ணன், அண்ணியிடம் கோபப்படுவதிலும் தனது சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் சங்கவி.

இன்னொரு பக்கம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் ராஜாஜும், நைனா சார்வாரும் படத்தில் கமர்ஷியல் காட்சிகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கொளஞ்சியின் மூர்க்கத்தனம் இவர்களையும் பிரிக்கப் பார்க்கிறது என்பதைக் காட்ட இந்தக் கதையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நைனா சர்வாரின் முகமே அந்தக் கிராமத்தில் இருந்து அன்னியமாகவே தெரிகிறது. வேறு தமிழச்சிகளே திரையுலகத்தில் இல்லையா இயக்குநரே..? ராஜாஜூக்கு சிறப்பான வேடம். நிறைவாகவே குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

மேலும், கனியின் குடும்பத்தை வம்பிழுக்கும் ஊர் நாட்டாமையான ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சங்கவியின் அண்ணன் என்று படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களும், அந்தக் கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் படத்தில் எப்போதும் சமூகத்திற்குத் தேவையான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அதுவே பல இடங்களில் வசனமாகவும் பேசப்பட்டிருக்கிறது.

“உண்மையான நம்ம சாமியை ஊருக்கு வெளியே வெச்சிட்டு… நம்ம சாமி நம்ம சாமின்னு… நீங்க சொல்றது எல்லாம் வட நாட்டில் இருந்து வந்த சாமிகள்தான்யா..!”

“தமிழன் எப்போதும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் ‘தமிழன்’.. ‘தமிழன்’னு சொல்றான். ஆனால் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் ‘அந்த சாதிக்காரன்’.. ‘இந்த சாதிக்காரன்’னு பேசுறான்..!”

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பெயருக்கு பின்னால் யாரும் சாதிப் பெயரைப் போட்டுக்குறது இல்லை.. ஏன் தெரியுமா..? இங்கதான் பெரியார்ன்னு ஒரு மனுஷன் பிறந்தாரு..!”

“என்ன வேலப்பா.. காவி வேட்டியில் கறை பட்டிருக்கு.. பார்க்கலையா.. ஒண்ணு அதைக் கழட்டிப் போடு.. இல்லைன்னா துவைச்சுப் போடு…”

இப்படி சில, பல வசனங்கள் தமிழகத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன.

விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சுற்றுப்புறத்தை அழகாகக் காட்டியிருக்கிறது. ஆனால் சில காட்சிகளில் ஒளியின் போதாமை தெரிகிறது. பாடல் காட்சிகளிலும், சில காட்சிகளிலும் இயற்கை எழிலை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நடராஜன் சங்கரனின் இசையில் ‘ஏய் ரோசா’, ‘பேர் அண்ட் லவ்லி’, ‘தமிழன்டா’ என்ற மூன்று பாடல்கள் ஒலிக்கின்றன. இதில் ‘தமிழன்டா’ பாடலை சென்ட்ராயன் மூலமாக வலிந்து திணிக்கப்பட்டதைப் போல இருந்தாலும், இதுவும் இப்போதைய தமிழக அரசியலுக்குத் தேவையாகத்தான் இருக்கிறது.

திடீரென்று கொளஞ்சி மனம் மாறுவதும், நல்ல பிள்ளையாக உருமாறுவதும்.. அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுத் திருந்துவதும் சினிமாத்தனமாகவே இருக்கிறது. இதற்கான வலுவான திரைக்கதையும், காட்சிகளும் இல்லாமல் போய்விட்டது. இதனாலேயே கிளைமாக்ஸ் காட்சி மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லை என்பதுதான் உண்மை.

சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் சின்னப் பையன்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை நமக்கு ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க வந்திருக்கும் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்..!  

 

Our Score