full screen background image

ஜாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்கும்..“- ‘செந்தமிழன்’ சீமான் பேச்சு

ஜாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்கும்..“- ‘செந்தமிழன்’ சீமான் பேச்சு

‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘முந்திரிக் காடு.’

இந்த படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். மற்றும் ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன்  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து – இயக்கம் – மு.களஞ்சியம், இசை – ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாசன், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், பாடல்கள் – கவி பாஸ்கர், இளைய கம்பன், நிழற்படம் – தஞ்சை ரமேஷ்,
மூலக்கதை – எழுத்தாளர் இமையம், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, வரைகலை – பவன்குமார், தயாரிப்பு – ஆதி திரைக்களம்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

IMG_1379

விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது, “அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் ‘முந்திரிக்காடு’ படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட குழு மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன்  சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்ததுதான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்…” என்றார்

nallakannu

ஐயா நல்லக்கண்ணு பேசும்போது, “நான் களஞ்சியத்தைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் படத்தைப் பற்றிக் கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறைய போட்டியிருக்கிறது. நாங்களும் கொள்கை ரீதியாக நாடகங்களெல்லாம் போட்டோம். சீமான், சசி, ராஜு முருகன் எல்லாம் இந்தக் கதைக்கு நெருக்கமானவர்கள்.

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கிறது. சினிமா என்பது பார்க்க மட்டும்தானா.. அதிலிருந்தும் பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் படம் சீக்கிரம் வெளியாக வேண்டும். இந்தப் படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப் படம் வெளிவந்த பின் ஆணவக் கொலைகள் குறைய வேண்டும்…” என்றார்.

IMG_1405

இசையமைப்பாளர் A.K.பிரியன் பேசும்போது, “நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் எதாவது ஒன்றை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கு இயக்குநர் களஞ்சியம் அங்கிள் மூலமாக நிறைய அனுபவம் கிடைத்தது. பெரும்பாலும் லைவ் – இன்ஸ்ட்ருமெண்ட் யூஸ்  பண்ண எந்தத் தயாரிப்பாளரும் சம்மதிப்பதில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து கொடுத்தார். பாடல்கள்தான் இந்தப் படத்தின் ஜீவன். அதைச் சரியாக கொண்டு வர இயக்குநர் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார். பாடலாசியர்கள் மற்றும் பாடகர்கள் மிகச் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் பேக்ரவுண்ட் மியூசிக் இரண்டும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார்.

raju murugan

இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “எழுத்தாளர் இமயம் எழுதிய ‘பெத்தவன்’ நாவலை மு.களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் என்று தெரிந்ததும் பொறாமையாக இருந்தது.

பல புரட்சிகளுக்கு வித்திட்ட மண் முந்திரிக்காடு. சில இயக்குநர்கள் தன் சினிமாக்களை தன் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி இருப்பார்கள். தோழர் மு.களஞ்சியம் அவர்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

இந்தப் படம் கொஞ்சம் தாமதாக வந்தாலும் நல்லா கூர்தீட்டி கொண்டு வரப்பட்டுள்ளது. நான் இந்தப் படத்தைப் பார்த்து வியந்தேன். நிச்சயமாக இந்தப் படம் சாதியத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாக விளங்கும் என்று நம்புகிறேன்.

சாதிய எதிர்ப்பு என்பதை நம் குடும்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள்கூட சாதிக்கு எதிராக களம் இறங்க வேண்டும். குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டும். இந்தப் படம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் நாயகன் புகழ் மிக நல்ல பிள்ளை. அவன் ஒரு நல்ல நடிகனாக வருவான். சீமான் அண்ணன் அவர்கள் தம்பி புகழுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும்.. யார், யாரோ சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது நம் தம்பிக்கும் அவர் ஒரு பட்டம் கொடுக்கலாமே. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்..” என்றார்.

c.mahendiran

கம்யூனிஸ்ட் தலைவரான சி.மகேந்திரன் பேசும்போது, “தோழர் இமையம் அவர்கள் எழுதியதை நான் ‘நாவலா இல்லை.. சிறுகதையா..?’ என்று கேட்டேன். அவர் அதை ‘நெடுங்கதை’ என்றார். ‘பெத்தவன்’  சிறுகதையை மு.களஞ்சியம் தவிர வேறு யாராலும் எடுத்திருக்க முடியாது என்பதை படத்தைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.

பிரசவ வலி என்பது ஒவ்வொரு படைப்பாளிக்கும் உண்டு. பெத்தவன் நாவலை படமாக்கிய களஞ்சியத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. ஜாதிய கொடுமைகளை எதிர்த்து நின்று போராடியவர்களின் பின்னணியில் வந்தவர் மு.களஞ்சியம்.

தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் தலித் இளைஞர்கள் மேல் சாதி எனச் சொல்லப்படும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தாலே கொன்றுவிடுவார்கள். ஒரே நேரத்தில் ஒரு மாட்டையும் கொல்வார்கள் தலித் இளைஞனையும் கொல்வார்கள். கொன்ற இளைஞனை அந்த மாட்டின் வயிற்றுக்குள் வைப்பார்கள். இப்படியான கொடூரங்களைப் பார்த்து வந்தவர் மு.களஞ்சியம்.

அதனால்தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு படைப்பு வருகிறது. சீமான் அவர்கள் இப்போது ஒரு அரசியலை முன்னெடுக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். மிகப் பெரிய புரட்சிக்கு ஒரு திரைப்படம் காரணமாக இருந்த வரலாறு உண்டு. அதுபோல் தமிழ்நாட்டில் இந்த முந்திரிக்காடு படம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

ஒரு படைப்பு மூலமாக ஒரு குடும்பத்தை இணைத்தது போல பல திறமையாளர்களை இப்படத்தில் இணைத்து இருக்கிறார். அவருக்கு அதற்காக என் நன்றி.

ஒரு தந்தைக்கு இருக்கும் முக்கியமான கடமை, தன் மகனின் முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பது.  அந்த வகையில் என் மகன் புகழ் ஒரு நல்ல நடிகராக வந்துள்ளார் என்று நம்புகிறேன்…” என்றார்.

director seemaan

செந்தமிழன் சீமான் பேசும்போது, “என் தம்பி மு.களஞ்சியத்தின் கனவுப் படைப்பாக இந்த ‘முந்திரிக்காடு’ படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன். பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கிறது.

இமையம் அவர்களின் எழுத்தை நம்பித்தான் தம்பி களஞ்சியம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கிறார் களஞ்சியம்.  புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த தோழர் சி.மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன்.

இங்கு ‘எழுச்சி’, ‘புரட்சி’ என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு ‘எழுச்சி நாயகன்’ என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன்.. காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த ‘முந்திரிக்காடு’ படம் ‘பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு விழாவில் ஒரு நடிகர் ‘திஸ் பிலிம்ல சாங்க்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு’ என்கிறார். இந்தச் சனியன்களை வைத்து என்னடா பண்றது..? நாக்குலகூட தமிழ் சரியா வரலியே.. நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க..?

 புறநானூறு, நான்கு சாதிகள் தவிர வேறில்லை என்று சொல்கிறது. எந்தச் சொல் உன்னை இழிச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லைத்தான் உனது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். பெயரையே மொழியாக வைத்துக் கொண்ட சமூகம் நம் சமூகம்.

 ஜாதி ஒழியாதவரை நம் சமூகம் அடிமையாகத்தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சதி, மத உட்பகைதான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக் கொள்கிறது. ‘சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். அவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகப் போய்விடும்…’ என்றார் முத்துராமலிங்கத் தேவர்.

சாதிய விடுதலை, மத விடுதலை, பொருளாதார விடுதலை எதுவுமே இன்னும் இந்தியா பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும்தான் பெற்றுள்ளோம். மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்த வெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.

கோயில்களில் இருக்கும் சாதி, திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள்தான். நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் இந்த ‘முந்திரிக்காடு’ திரைப்படம்  பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்…” என்றார்.

Our Score