லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாய்தான் வருவார் என்பதை இன்னொரு முறையும் நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ராணாதான் இது.. இல்லை.. இல்லை. சுல்தான் இது.. இல்லை.. இல்லை. இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்ததுதான் என்றெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுதப்பட்ட அத்தனை கிசுகிசுக்களையும் இன்றைக்கு மறக்கடிக்கச் செய்திருக்கிறது கோச்சடையானின் விஷுவல் ட்ரீட்..!
கலிங்காபுரியில் பிறந்து, தனது தந்தையின் கொடூர மரணத்திற்குப் பின்னர் கடலில் குதித்து தப்பி கோட்டைப்பட்டினம் வந்து சேர்கிறான் ராணா. அங்கேயே வளர்ந்து பெரியவனாகி.. அந்த நாட்டு மன்னனின் நம்பிக்கைக்குரியவனாகி போர்ப்படைத் தளபதியாகவும் மாறுகிறான். கோட்டைப்பட்டினத்தில் அடிமைப்பட்டு கிடந்த தனது நாட்டு மக்களை தந்திரமாக போர் வீர்ர்களாக மாற்றி, அவர்களையும் ஒரு போர்க்களத்தில் தனது நாட்டுக்கே அழைத்து வந்து கலிங்காபுரியில் அடைக்கலமாகிறான் ராணா.
கலிங்காபுரி மன்னனுக்கு ராணாவை பார்த்ததும் கலக்கம். இவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்று..!? இடையில் மன்னனின் மகள் ராணாவைப் பார்த்தவுடன் காதல் கொள்ள.. அதையும் ஏற்றுக் கொள்கிறான்.. தனது தங்கையும், பட்டத்து இளவரசனும் காதல் கொள்ள.. அவர்களைச் சேர்த்து வைக்கிறான் ராணா..
கலிங்காபுரி மன்னன் எச்சரிக்கை உணர்வோடு எதை நினைத்து பயந்தானோ, அதையும் ஒரு நாள் ராணா செய்யப் போக பிடிபடுகிறான்.. சிறையில் அடைக்கப்படுகிறான். அவனுக்குள் இருக்கும் அவனது தந்தையைப் பற்றிய ஒரு பிளாஷ்போக் கொஞ்சம் நேரம் திரையையும் நம் மனதையும் வருடுகிறது.. பின் எப்படி தப்பித்து மன்ன்னை பழி வாங்குகிறான் என்பதுதான் இந்தக் கோச்சடையானின் கதை..!
முதல் கால் மணி நேரங்களில் நமக்குக் கண்ணைக் கட்டிய கதைதான்.. இதுவரையில் ஆங்கில டப்பிங் படங்களையே இது போன்ற அனிமேஷன் சூழலில் நாம் பார்த்து பழகியிருப்பதால், முதல் முறையாக சூப்பர் ஸ்டாரையே அப்படி பார்க்க நமது கண்களுக்கு பழக்கமில்லாததால் சில நிமிடங்கள் அது மூளைக்கு உத்தரவிட மறுத்தது.. அதன் பின் கதையின் நாயகன் கே.எஸ்.ரவிக்குமாரின் கைவண்ணத்தில் வழக்கமான தமிழ்ச் சினிமாவின் கதையும், பரபர திரைக்கதையும் நம்மை உள்ளே இழுக்க ஒரு மாய உலகத்தில் சஞ்சரிக்கும் புதுமையான அனுபவத்தை சராசரி ரசிகனால் அடைய முடிகிறது..
‘பொம்மை படம்’ என்றவர்களின் வாயில் நாலு லிட்டர் பெனாயிலை ஊற்றி கழுவச் சொல்லலாம்.. இவர்கள் போட்ட முதலீட்டில் இந்த அளவிற்கு கிராபிக்ஸையும், அனிமேஷனையும் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.. அதிலும் தமிழின் முதல் நேரடி அனிமேஷன் படம்.. இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்க வைத்திருக்கிறது..!
இளைஞனான ராணா கேரக்டரில் அந்தத் துள்ளல் ஸ்டெப்பும், டான்ஸும், சண்டை காட்சியில் இருக்கும் வேகமும் நிஜத்தில் கிடைப்பதுகூட கஷ்டம்.. அனிமேஷனில் இதுதான் மிகப் பெரிய பலம்.. இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செளந்தர்யா.
பிளாஷ்பேக்கில் கோச்சடையான் பற்றிய கதையின் திரைக்கதை செம விறுவிறுப்பு.. அவர் செய்யும் செயல் தவறா, சரியா என்று பட்டமன்றமே நடத்தக் கூடிய அளவுக்கு மிக இயல்பான ஒரு கதையை அவருக்கு எழுதியிருக்கிறார் ரவிக்குமார்.. இதுதான் மனதை தொட்டுவிட்ட திரைக்கதை.. இதனாலேயே அனிமேஷனை தூக்கிக் கடைசியில் போட்டுவிட்டு ரசிக்க வைத்திருக்கிறது.
நாகேஷ் சிலை வடித்து அது உடைந்து போய் பணம் வராமல் போய்விடுமோ என்று தவிக்கும் காட்சியில், ராணா அந்தச் சிலையாக சில நிமிடங்கள் நிற்கும் காட்சியில் திரைக்கதை பலே.. சட்டென்று உணர முடியவில்லை அது ராணாதான் என்று..! இதுவொன்றை வைத்தே உடனடியாக பாடல் காட்சியைத் தொடர்ந்திருப்பது தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கே உரித்தான தனி அறிவு..!
ரஜினியைத் தவிர்த்து சட்டென்று அடையாளம் காண முடிந்த்து நாகேஷ், ஷோபனா, நாசர்தான்.. ருக்மணி, தீபிகா படுகோன், ஷண்முகராஜா, சரத்குமார் கேரக்டர்களை தீவிர விசாரணைக்குப் பின்தான் உணர முடிந்த்து.. தீபிகாவின் முகச் சாயல் ஒட்டவே இல்லை என்பதுதான் இன்றைய ‘கோச்சடையான்’ விமர்சனங்களின் ஒன்றுபட்ட கருத்து. இதில் மாறுபட்ட கருத்தே இல்லை.
நாகேஷின் குரலைக் கேட்டு எத்தனை நாட்களாகிவிட்டது.. அந்த பாடி லாங்குவேஜோடு இதற்கு முகம் கொடுத்த அந்த மனிதர் யாரோ..? அவர் எங்கிருந்தாலும் வாழ்க..! ரஜினிக்கே பல இடங்களில் வேறொருவர் உயிர் கொடுத்திருப்பது தெரிகிறது.. மோஷன் கேப்ஸரிங் அனிமேஷன் படங்களே இப்படித்தானே..! இதில் என்ன தவறு இருக்கிறது..?
நிஜத்தில்தான் ரஜினி இப்படி டான்ஸ் ஆட முடியாது.. ஆனால் அனிமேஷனில் தீபிகாவுடனான டூயட்டுகளில் அசத்தல் ஸ்டெப்ஸ்.. அந்த மயில் தோகையின் பின்னணியில் விரியும் காதல் காட்சிகளுக்கு ஒரு ஷொட்டு..! திருநீலகண்டர் மாதிரியான தோற்றத்தில் வரும் கோட்டைப்பட்டினத்தின் தலைமைத் தளபதி ‘கோச்சடையான்’ ஆடும் சிவதாண்டவ ஆட்டம், படத்தின் பிற்பாதியில் கண்ணை அகற்ற மறுத்தது.
ரஜினியின் முதல் அறிமுகக் காட்சியில் வழக்கம்போல அவருடைய ரசிகர்களை மகிழ்விக்க குதிரையில் வரும் அந்தக் காட்சியும்.. அதற்கு இசைப்புயல் ரஹ்மான் போட்டிருக்கும் பின்னணி இசையும் பலே.. படம் முழுவதும் பல இடங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு 4 கிலோ பொட்டாஷ் யூரியாவையே உரமிட்டிருக்கிறார் ரஹ்மான்.
திரைக்கதையின் அடுத்த படியாக வசனத்தில்கூட கே.எஸ்.ரவிக்குமார் பின்னியிருக்கிறார். “சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்..” “எதிரிகளை அழிக்க ஒரே வழி மன்னிப்பு..” என்றெல்லாம் ரஜினியின் பஞ்ச் டயலாக்போல் வரும் சில வசனங்கள் படத்துடன் ஒன்றுபட வைத்தன.
பிரமாண்டத்தை காட்டுவதெனில் அனிமேஷன் எத்தனை ஈஸி என்பதை இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தமிழகத்து தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். இதே ராணா கதையை அனிமேஷன் இல்லாமல் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பிரமாண்டமாக எடுத்திருக்க முடியுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான்..
போர் வீரர்களின் அணி வகுப்பு.. போர்க்களக் காட்சிகள்.. பாரசீக நாட்டில் இருந்து திரும்பும் கப்பல்கள்.. அந்தக் கப்பல்களில் நடைபெறும் சண்டைகள்.. அரண்மனையின் அழகு.. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தயாரிப்பாளரின் சொத்தை பிடுங்கியிருக்கலாம்.. ஆனால் நம் மனதையும் கொள்ளை கொண்டிருக்கிறது..!
இந்தப் படத்தில் பாடல் காட்சிகளைக்கூட முழுமையாக நீக்கிவிட்டு எடுத்திருக்கலாம். படத்தில் விறுவிறுப்பு இதைவிட கூடியிருக்கும்தான்.. ஆனால் ரசிகர்களின் ரசிக மனப்பான்மையை பார்த்து இயக்குநர்களெல்லாம் இந்த விஷயத்தில் பயப்படுகிறார்கள். பாடல் காட்சிகளை வெறுக்கும் உலக சினிமா ரசிகர்கள் இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தை வாயில் வந்தபடி திட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.. ரசிகர்கள் மனம் மாறினால் இயக்குநர்களும் நிச்சயம் மாறுவார்களய்யா..!
பல ஆங்கிலப் படங்களை பார்த்து, பார்த்து சலித்துப் போன பெருமக்களுக்கு இந்தப் படத்தின் அனிமேஷன் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவம்.. இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் காத்திருக்கின்றன.. எல்லோரும் தமிழ்ச் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தப் போகிறோம் என்றெல்லாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே இந்தப் படத்தின் மூலமாக அதனைச் செய்து காட்டியிருக்கிறார் செளந்தர்யா.
கறுப்பு வெள்ளையில் இருந்து ஈஸ்ட்மென் கலருக்கு மாறவே தமிழ்ச் சினிமாவுக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. ‘அன்பே வா’ வண்ணத்தில் எடுக்கப்பட்டு அதன் பின்பும் சில எம்.ஜி.ஆர். படங்கள் கறுப்பு வெள்ளையிலேயே வெளிவந்தது.. ஈஸ்ட்மென் கலருக்கு மாறுவதற்கே தமிழ்ச் சினிமாவின் படாதிபதிகளுக்கும், இயக்குநர்களுக்கும் 2 ஆண்டுகள் ஆயினவாம். அதன் பின்பு இந்த ஈஸ்ட்மென்னையும் தூக்கிச் சாப்பிட சினிமாஸ்கோப் வந்தபோது.. இதனையும் முதலில் ஏற்க மறுத்து.. பின்பு மெதுவாக அரவணைத்தது கோடம்பாக்கம்.
மாறுதல் மட்டுமே உலகத்தில் மாறாத்து என்பார்கள். இதே டயலாக்கை ராணாவும் படத்தில் பேசுகிறார்.. இந்த மாறுதலுக்கு கோடம்பாக்கம் தன்னை ஆட்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத செளந்தர்யா என்னும் இளம் பெண் செய்து காட்டியிருக்கிறார்.
ரஜினி என்னும் பெரும் வர்த்தக சக்தி.. பெரிய முதலாளிகள்.. உதவிக்கு ஆட்கள் என்று ஆதரவான சூழல் இருந்தபோதிலும், தனியொரு பெண்ணாக அவர் இதை முனைந்து நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரியது..
மிக எளிதான கதை.. தமிழகத்து மக்கள் கேட்ட கதைதான்.. அம்புலிமாமாவில் தொடர்ச்சியாக படித்து வந்த கதை என்பதால் ரசிகர்களால் எளிதில் ஒன்ற முடிந்தது.. கதைத் தேர்வு.. திரைக்கதையின் விரிவாக்கம்.. அனிமேஷன் காட்சிகளில் ரஜினிக்கென்றே இருக்கும் தனி ஸ்டைலை கச்சிதமாகக் கொண்டு வந்தது.. அந்த ஹீரோயிஸத்தை படம் முழுக்க நிரவி வைத்தது.. இது எல்லாமே சேர்ந்து இந்த அனிமேஷன் படத்தை ரஜினியின் வழக்கமான படமாகக் காண்பித்திருக்கிறது.
நிச்சயம் கோச்சடையான் ரஜினி ரசிகனையும் தாண்டி தமிழ்ச் சினிமா ரசிகனையும் வெல்வான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை..!