புதுமையான தலைப்புகளுடன் திரைக்கு வருவதுதான் தற்போதைய பேஷன். அந்த வரிசையில் அடுத்தப் படம் இது. படத்தின் தலைப்பு ‘எவன்.’
வழக்கமா சினிமாவில் காதலனும், காதலியும் சேருவதற்குத்தான் பெரிய போராட்டமே நடக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு அம்மாவும் மகனும் சேருவதற்கு மகனின் காதலி படும்பாடுதான் இந்த படத்தின் கதைக்களமாம்.
“இந்தப் படம் காதலிப்பவர்களுக்கும் பிடிக்கும். அம்மாவை பிடிக்கிற எல்லோருக்கும் பிடிக்கும். ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றுபவர்களுக்கும் பிடிக்கும். இந்த மூன்று தரப்பினருடைய பிரச்சனைகளையும் கூறுவதே இப்படத்தின் கதை..” என்கிறார் படத்தின் இயக்குநர்.
இந்தப் படத்தில் திலீபன் புகழேந்தி ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் பழம்பெரும் பாடலாசிரியர்-கவிஞரான புலவர் புலமைப்பித்தனின் பேரன். ஹீரோயினாக தெலுங்கு, கன்னடப் படங்களில் ஏற்கெனவே ஹீரோயினாக நடித்திருக்கும் தீப்தி மானே இந்தப் படம் மூலமாக கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிறார்.
மேலும் கானா பாலா, உஜ்ஜயினிராய், ஜே.கே.சஞ்சித், அம்மு மார்ட்டின், பாண்டி ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.கே.சசிதரன் இசையமைத்திருக்கிறார். புலவர் புலமைப்பித்தன், கவிஞர் விவேகா, கானா பாலா, ஏகாராஜசேகர் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் – K.M. துரைமுருகன். இவர் ‘தயா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘கோலிசோடா’ போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இந்தப் படத்தில் கானா பாலாவின் ‘ச்சீ போ நாயே, பொறுக்கி தித்திக்கும’ என்ற பாடல் உலகமெங்கும் காதலர்களுக்கு எப்படி காதல் செய்ய வேண்டும் என்ற டிப்ஸாகவும், காதலர்களின் கைப்பேசியில் காலர் டியூனாகவும் இடம் பெற வாய்ப்புண்டு. அதோடு குறிப்பாக இந்த வருடத்தின் பட்டிமன்றங்களில் மிக சர்ச்சைக்குரிய பாடலாகவும் இந்தப் பாடல் கண்டிப்பாக அமையும். இப்படத்தில் வருகின்ற தாயின் பாசத்தை உணர்த்தும் இன்னுமொரு பாடல் காட்சி பார்ப்பவர்களை கண்டிப்பாக கண் கலங்க வைக்குமாம்.
இப்படத்தின் நாயகனான திலீபன் புகழேந்தி ஒரு மோட்டார் சைக்கிள் விளையாட்டு வீரர். படத்தில் வரும் ஒரு சேசிங் காட்சியில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்களை எந்தவித டூப்பும் இல்லாமல் தானே நடித்துக் கொடுத்துள்ளார். இப்படத்தில் வருகிற ஒரு முக்கிய காட்சியில் படத்தின் கதாநாயகி தீப்தி மானே காட்சியின் தன்மை புரிந்து கிளிசரின் இல்லாமல், இயற்கையாகவே கண் கலங்கி படக் குழுவினர் அனைவரின் பாராட்டையும் பெற்றாராம்.
படம் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்கின்றனர் தயாரிப்புக் குழுவினர்..!