ஏப்ரல்-11 வெள்ளியன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ‘கோச்சடையான்’ படத்தின் பிரமோஷன் வேலைகள் துவங்கப்பட்டிருக்கின்றன.
சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்துவிட்டு எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்களாம்..! ரத்தச் சகதியையும், போர்க்காட்சிகளையும் கிராபிக்ஸ் அனிமேஷனில் காட்டுவதால் அது சிறார்களின் மனதை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தயாரிப்பாளர் தரப்பில் ‘முன்னமே’யே உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்த ‘மரியாதை’யினால் உறுப்பினர்களும் எதுவும் சொல்லாமல் “தமிழில் இது புதிய முயற்சி.. பாராட்டுக்கள்..” என்று வாழ்த்து தெரிவித்து லைனை கிளீன் செய்துள்ளனர்.
அடுத்தது பிரமோஷன்தான்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்பூரி, மராத்தி, ஒரியா, ஆங்கிலம் என்று பல மொழிகளில் ரிலீஸாக இருப்பதால் அதற்கான டப்பிங் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம்..
இதற்கடுத்து வரும் வாரத்தில் இருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் ஒரு ரவுண்ட் அடித்து பிரமோஷன் செய்ய தீபிகா படுகோனே தயாராம்.. ஆனால் இந்த பிரமோஷனில் ரஜினி கலந்து கொள்ள மாட்டார் என்று தீபிகாவிடமே சொல்லிவிட்டார்களாம். ஒருவேளை தெலுங்கு, கன்னடம், இந்தியில் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் அவர் கலந்து கொள்ளலாம் என்று சந்தேகத்துடன் சொல்கிறார்கள்.
ஆனால்.. பல கோடிகளை கொடுத்து பெட்டியை வாங்கிச் செல்லும் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தை எத்தனை ரூபாய் கட்டணம் வைத்து ரசிகர்களை நோகடிக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை..