ஹைபர் லிங்க் பாணியிலான இந்தப் படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
அறிமுக இயக்குநரான பிரிட்டோ J.B. இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘நிறம் மாறும் உலகில்‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்‘ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மல்லிகா அர்ஜுன் – மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் –தினேஷ் – சுபேந்தர் –ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார்.
நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
மும்பை – வேளாங்கண்ணி – சென்னை – திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது.
நான்கு விதமான அந்தாலஜி கதைகளின் தொகுப்பு தான் எத்தனை படம்.
உலகத்திலேயே அழகான வார்த்தை அம்மா என்பார்கள். அந்த அம்மாவின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அந்த அம்மா பாசத்தை முன் வைத்துதான் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தில் இருக்கும் நான்கு கதைகளும் அம்மா பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
லவ்லின் சந்திரசேகர் தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டியில் தன்னை சந்திக்க வந்த ஆண் நண்பர்களுடன் கட்டிப் பிடித்து கொஞ்சுகிறார். இதை அவருடைய அம்மா விஜி சந்திரசேகர் பார்த்துவிட்டு லவ்லியை அடித்து விடுகிறார்.
அம்மா தன்னை அடித்ததை மிகப் பெரிய அவமானமாக கருதிய விஜி சந்திரசேகர் உடனடியாக அந்த வீட்டில் இருந்து பேக்கை தூக்கி கொண்டு கிளம்புகிறார். ட்ரெயினில் வரும்பொழுது அவருடைய அம்மா பல முறை போன் செய்தும் போனை எடுக்காமல் தவிர்க்கிறார் லவ்லின்.
இதனை கவனிக்கும் டி.டி.ஆர். யோகிபாபு அம்மாவுடன் சண்டையிட்டு லவ்லின் கோபித்துக் கொண்டு வெளியூருக்கு செல்வதை அறிந்து கொள்கிறார். அப்பொழுது லவ்லினிடம் அம்மாக்களின் அருமை தெரியும் அளவுக்கு நான்கு கதைகளை யோகிபாபு சொல்கிறார். இந்தக் கதைகளை கேட்டுவிட்டு லவ்லி என்ன முடிவெடுத்தார் என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.
மும்பையில் மிகப் பெரிய டானாக இருக்கும் நட்டி நடராஜ் அம்மா பாசத்திற்காக ஏங்குபவர். அவருடைய அம்மா மும்பை காமத்திபுரா பகுதியில் ஒரு விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்து பரிதாபமாக உயிரிழந்தவர்.
அவரை நினைத்து வாடிக் கொண்டே இருக்கும் நட்டி நட்ராஜ் இன்றைக்கு மிகப் பெரிய அளவுக்கு பணம், செல்வத்தை சேர்த்திருந்தாலும் இன்னமும் அம்மா பாசத்திற்காக ங்கிக் கொண்டிருக்கிறார். அந்த அம்மா பாசத்திற்கு ஏங்குவதாலேயே அவருக்கு ஒரு முடிவும் கிடைக்கிறது. அந்த முடிவு என்ன என்பது இந்தக் கதையின் கிளைமாக்ஸ்.
இரண்டாவது கதையில் பாரதிராஜாவும், வடிவுக்கரசியும் தம்பதிகள். இவர்களுடைய இரண்டு மகன்களில் ஒரு மகன் பக்கத்து ஊரில் திருமணம் ஆகி வசித்து வருகிறார். இன்னொரு மகன் வெளியூரில் வசித்து வருகிறான். பிள்ளைகள் இருவரும் மாதாமாதம் பணம் அனுப்புவார்கள். அதை வைத்துதான் இந்த தம்பதிகள் சாப்பிட்டு வருகிறார்கள்.
ஒரு மாதம் பணம் அனுப்ப தாமதமானதால் வீட்டில் உலை வைக்க காசு இல்லாமல் கஷ்டப்படுகிறார் பாரதிராஜா. தான் ஆசை, ஆசையாகப் பெற்று வளர்த்த பிள்ளைகள் கடைசி காலத்தில் தங்களை இப்படி புறக்கணிக்கிறார்களே என்று அந்தத் தம்பதிகள் வருத்தப்படுகிறார்கள். இவர்களின் வருத்தம் தீர்ந்ததா… இல்லையா… என்பதுதான் இந்தக் கதையின் கிளைமாக்ஸ்.
மூன்றாவது கதையில் ரியோ ராஜ் தன்னுடைய அம்மாவின் மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். சிறு வயதிலேயே கணவனை இழந்தாலும் தன் மகனை பொறுப்பாக வளர்த்து பெரிய ஆளாக்கி இருக்கிறார் ரியோ ராஜின் அம்மா ஆதிரா.
ஆனால் அந்த அம்மாவிற்கு திடீரென்று கேன்சர். அந்த கேன்சரை சரி செய்வதற்காக மருத்துவமனை செலவுக்காக 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக தன்னுடைய அம்மாவை தவறான நோக்கத்தோடு சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து வந்த மைம் கோபியிடமே பணம் கேட்க வேண்டிய கட்டாயம் ரியோ ராஜூவுக்கு ஏற்படுகிறது. பண உதவி கேட்டுப் போய் அவமானப்படும் ரியோ ராஜ் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.
நான்காவது கதை நிச்சயமாக இந்த மூன்று கதைகளையும் விடவும் நம் மனதை தொடும் கதைதான்.
ஆட்டோ ஓட்டுநரான சாண்டி அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள் என்று யாருமே இல்லாமல் தனிக்கட்டையாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய ஆட்டோவில் பயணிக்கும் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணைக் காதலிக்கிறார்.
அந்தப் பெண் கொஞ்சம் வசதியான குடும்பம் என்றாலும் அம்மா, அப்பா இல்லாமல் தனித்த நிலையில் இருக்கும் சாண்டி போன்றவர்களை திருமணம் செய்து கொண்டால் தன் எதிர்கால குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வராது என்ற எண்ணத்தில் காதலுக்கு ஓகே சொல்கிறார்.
இந்த நேரத்தில் பெற்ற மகனும், மருமகளும் வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்வதால் தன்னுடைய அம்மாவான துளசியை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள்.
அந்த முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் துளசி, சாண்டியின் ஆட்டோவில் ஏறி காலை முதல் இரவுவரை ஊர் சுற்றுகிறார். நாளைக்கு பெண் பார்க்ரும் படலம் இருப்பதால் தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சாண்டி சொல்ல, கடற்கரையில் இறங்கிக் கொள்கிறார் துளசி.
துளசியை பீச்சில் இறக்கிவிட்டுவிட்டு வந்த சாண்டிக்கு மனம் நிலை கொள்ளவில்லை. துளசியம்மா பீச்சில் தனியாக இருப்பார்களே என்று பதறி அடித்து ஓடி வந்து மறுபடியும் துளசியைப் பார்த்துத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருடைய சோக கதையை கேட்டு “நீங்க என்னுடன் அம்மாவாக இங்கேயே இருங்கள்” என்கிறார்.
மறுநாள் பெண் பார்க்கும் படலத்திற்கும் துளசி அழைத்துச் செல்லும் சாண்டி, “இனிமேல் என்னுடைய அம்மா இவர்தான்.. இனிமேல் என்னுடன்தான் இருப்பார்..” என்கிறார். இதை மணப்பெண் ஏற்காமல் தன் காதலை முறிப்பதாக அறிவிக்க… சாண்டி அதற்குப் பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் இந்தக் கதையின் கிளைமாக்ஸ்.
படத்தில் நடித்தவர்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, வடிவுக்கரசி, துளசி, ஆதிரா கனிகா என்று அம்மாக்கள் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படியொரு அம்மாக்கள் எல்லாம் நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று நம்மை ஏங்க வைப்பதுபோல மிகச் சிறப்பான நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.
நட்டி நடராஜ் தன்னுடைய அம்மா பாசத்துக்காக ஏங்கிப் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான். சுரேஷ் மேனன் மும்பை டானாக வந்து கடைசியில் அல்பாயுசில் செத்துப் போகிறார்.
பாரதிராஜாவின் மகனைவிடவும் பாரதிராஜா மருமகளாக நடித்தவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருடைய ஆக்ரோஷமான பேச்சும், நடிப்பும் யார் இந்த மருமகள் என்று நம்மை கேட்க வைத்திருக்கிறது.
ரியோராஜ், ஆதிரா, விக்னேஷ்காந்த் கதையில் விக்னேஷ் காந்த் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதிலும் ஆதிராவின் பிணத்தைப் பார்த்துவிட்டு விக்னேஷ் காந்த் கதறும் கதறல் நிச்சயம் அவருடைய அவருக்கே ஒரு புதிய நடிப்பாக இருந்திருக்கும். ரியோராஜின் அமைதியான நடிப்பும், ஆதிராவின் அமைதியான அம்மா நடிப்பும் இந்தக் கதையில் மிகையில்லாமல் இருக்கிறது.
துளசி தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்தாமல் தன் மகன் தன்னை விட்டுப் போகிறான் என்ற தெரிந்தும் அவனை கடிந்து கொள்ளாமல் இருக்கின்ற வாழ்க்கையை அப்படியே எதிர்கொள்வோம் என்பது போல அவர் நடந்து கொள்வதும் ஒரு பக்கம் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரோ என்பது போலவே அவருடைய செயல்களும் இருந்தாலும் அவருடைய அந்த அழுத்தமான அம்மா நடிப்பு நம்மை கவர்கிறது.
அதோடு சாண்டியின் துள்ளலான எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம் என்று நினைக்கும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிம்ப்ளி சூப்பர். இவருடைய காதலியாக நடித்தவரும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். அதேபோல் இவருடைய வீட்டில் அப்பா சுரேஷ் சக்கரவர்த்தி, மனைவி லிஸி ஆண்டனி இரண்டு பேரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
நான்கு கதைகளும், நான்கு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு களங்களில் நடப்பதால் நான்குக்கும் வேறு வேறான ஒளிப்பதிவினை கொடுத்து மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
பாடல் காட்சிகளில் அம்மாவை முன் வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல் வரிகளும், இசையும் ஒரு முறை கேட்கும்படியாகவே இருக்கிறது.
அம்மா என்பவள் யார்? அவள் ஏன் அதிக போற்றப்படுகிறாள்?.. அவளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?.. என்பது போன்ற பல கேள்விகளுக்கும் இத்திரைப்படம் விடை சொல்கிறது.
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்தான். அவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்ற நம்புகிறோம். இந்த நேரத்தில் இது போன்ற கதைகளை முன் வைத்து படமெடுப்பது அரிதிலும், அரிதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்த படத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கும் இயக்குநருக்கும், படக் குழுவினருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
RATING : 4 / 5