சிறிய பட்ஜெட் படங்களை ஊக்குவிப்பதற்காக கேரள அரசு சொந்தமாக ஓடிடி தளத்தை ஆரம்பிக்கப் போகிறது.
‘அமேஸான்’, ‘நெட்பிளிக்ஸ்’, ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ போன்ற தனியார் ஓடிடி தளங்களுக்கு மாற்றாக இந்தியாவிலேயே முதலாவதாக அரசுத் தரப்பில் உருவாக்கப்படும் முதல் தளம் இதுதான்.
இது குறித்து கேரளாவின் திரைப்படம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரான ஷாஜி செரியன் பேசுகையில், “பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு ஓடிடியின் அவசியம் தேவையில்லையென்றாலும், சின்ன பட்ஜெட் படங்களின் வளர்ச்சிக்கு ஓடிடியின் உதவி இப்போது அவசியமானதாக இருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் இதற்கான பணிகள் நடைபெறும்.
அதே நேரம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருப்பது போன்று திரைப்படத் தயாரிப்புக்கென்று தனியாக ஒரு நகரம் அமைக்கும் யோசனையும் கேரளா அரசுக்கு உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அனைவரும் கேரளாவை நோக்கி வரும் அளவுக்கு படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கும் திட்டத்திற்கு கேரள அரசு முதலீடு செய்யவுள்ளது..” என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி நடிகரும், இயக்குநருமான சேரன் கூறுகையில், “தமிழ்நாட்டிலும் இது போன்று அரசே ஓடிடி தளத்தை தனியே அமைத்து சின்ன பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் தெலுங்கு திரையுலகத்தின் தயாரிப்பாளரும், கதாசிரியருமான கோனா வெங்கட் பேசுகையில், “கேரள அரசின் இந்த ஓடிடி துவக்கம் என்ற திட்டம் சினிமா துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். இதேபோல் தெலுங்கானாவிலும் ஓடிடி தளங்களைத் துவக்கி தெலுங்கு திரையுலகத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்..” என்று அந்த மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.