மலையாளத் திரையுலகத்தைக் காப்பாற்றிய நடிகர் மம்மூட்டி..!

மலையாளத் திரையுலகத்தைக் காப்பாற்றிய நடிகர் மம்மூட்டி..!

கேரளாவில் இருக்கும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது ஒட்டு மொத்தமாக நடிகர் மம்மூட்டிக்கு ‘ஜே’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘The Priest’ என்னும் திரைப்படம் தியேட்டர்களுக்கு கூட்டத்தை அழைத்து வந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.

மம்மூட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல், சானியா ஐயப்பன் ஆகியோரின் நடிப்பில் ஜோபின் டி.சாக்கோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘The Priest’. இத்திரைப்படம் கடந்த மார்ச் 12-ம் தேதியன்று கேரளாவில் வெளியாகியது.

இரண்டாம் சுற்று கொரோனா பரவலினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் அங்கே தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருந்தது. அதோடு இரவு நேரக் காட்சிகள் முழுமையாக அனைத்துத் தியேட்டர்களிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் ஏதாவது ஒரு பெரிய படம்.. பெரிய நடிகர்கள் நடித்த படம் தியேட்டர்களுக்கு வந்தால் ஒழிய ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க முடியாது என்று தியேட்டர்காரர்கள் நினைத்தார்கள்.

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடைய ‘The Priest’ படத்தைத் தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று நடிகர் மம்மூட்டியும் படத் தயாரிப்பாளர்களிடத்தில் கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க கடந்த மார்ச் 12-ம் தேதி இத்திரைப்படம் கேரளாவில் திரையிடப்பட்டது. இதனால் மம்மூட்டியின் ரசிகர்களும் சந்தோஷப்பட்டார்கள்.

மம்மூட்டியின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியானால் வழக்கமாக அவரது ரசிகர்களால் என்ன மாதிரியான வரவேற்பினைக் கொடுப்பார்களோ.. அது அத்தனையும் இந்தப் படத்தின் ரீலீஸின்போதும் கிடைத்தது. போதாக்குறைக்கு மலையாள சூப்பர் ஸ்டாரினி நடிகையான மஞ்சு வாரியரும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இன்னொரு பக்கம் அவரது ரசிகர்களும் சேர்ந்து கொள்ள படம் தியேட்டரில் நன்றாகவே கல்லா கட்டியிருக்கிறது.

படத்தின் துவக்க நாளிலேயே கேரளா முழுவதும் 2.2 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது இத்திரைப்படம்.

முதல் 7 நாட்களிலேயே கேரளாவில் மட்டும் 11 கோடியே 38 லட்சம் ரூபாயை வசூல் செய்திருக்கிறது. உலகம் தழுவிய ஒட்டு மொத்த வசூல் முதல் வாரத்திலேயே 15 கோடியைத் தாண்டிவிட்டதாம்.

இதனால் பெரிதும் சந்தோஷப்பட்ட கேரளா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் மம்மூட்டியை அவரது வீட்டில் சந்தித்து நன்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெற்றியைக் கொண்டாட தனியாக ஒரு வீடியோ பதிவையும் தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Our Score