சென்ற வாரம் ‘செய்தித் தாள்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை TAKEN ENTERTAINMENT என்ற பட நிறுவனம் வெளியிட்டிருந்தது.
படத்தில் நசீர், யோகி, துரை, சதன் ஆகிய நால்வரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பஞ்ச் பரத் என்பவர் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் உருவாக்கத்திற்காக தான் 30 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பில் தனக்கு எந்தப் பெயரும், பங்களிப்போ தராமல் தன்னுடைய படம் போல இயக்குநர் ‘பஞ்ச்’ பரத் படத்தை வெளியிட்டுவிட்டதாகவும், தான் கொடுத்தப் பணத்திற்கு இப்போதுவரையிலும் பதில் சொல்லாமல் தன்னை ஏமாற்றுவதாகவும் இயக்குநர் பஞ்ச் பரத் மீது அந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் சதன் புகார் கூறியிருக்கிறார்.
இது குறித்து நம்மிடம் நடிகர் சதன் பேசும்போது, “நான் தற்போது வெளியாகியுள்ள ‘செய்தித் தாள்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நசீர், துரை, யோகி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே அவர்களால் முடிந்த அளவுக்கு பணம் போட்டுத்தான் படத்தை தயாரித்திருக்கிறோம்.
இதே இயக்குநர் இயக்கிய முதல் படமான ‘நீதானா அவன்’ படத்தில் நான்தான் நாயகனாக நடித்திருந்தேன். அந்தப் படத்தில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தார்.
அந்தப் படத்தின்போதும் நான் அறிமுகமாகிற படம் என்பதால் சில லட்சங்களை தயாரிப்புப் பணிக்காக கொடுத்திருந்தேன். ஆனால், அந்தப் படத்தின் வெளியீட்டின்போதும் இயக்குநர் பஞ்ச் பரத் என்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும், தயாரிப்பில் எனக்குரிய பங்கை கொடுக்காமலும் ‘முழு படத்தையே தன்னுடையது’ என்று சொல்லி படத்தை வெளியிட்டார். அந்தப் படத்தின் மூலமாக அவருக்குக் கிடைத்த லாபத்தில்கூட, என்னிடமிருந்து வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை.
முதல் படத்தின் வெளியீட்டுக்குப் பின்பு நான் அவர் பக்கமே போகாமல் இருந்தேன். திடீரென்று அவர் என்னை அழைத்து, “முதல் படத்திற்காக உன்னிடம் இருந்து வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கத்தான் நினைக்கிறேன். அதற்காக இரண்டாவது படத்தைத் துவக்கவிருக்கிறேன். இதில் நீ நடிச்சுக் கொடு…” என்றார். நடிப்பில் ஆர்வமாக இருந்த நான் நடிப்பிற்காக மட்டுமே முதலில் இதை ஒத்துக் கொண்டேன்.
ஆனால் அதன் பிறகு தனது வாய்ஜாலத்தால் “இந்தப் படத்திற்காக ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும். துவக்கச் செலவுக்கு மட்டும் பணம் கொடு…” என்று என்னிடம் கேட்டார். அதனால் என்னுடைய காரை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அப்படி என்னிடத்தில் வாங்கிய பணத்தில்தான் இந்தப் படத்திற்கான அலுவலகமே அமைக்கப்பட்டது.
அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரை ஒப்பந்தம் செய்தபோது ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு வாங்கினார். அப்படி Fund Raising செய்துதான் இந்தப் படத்தைத் துவக்கினார் பஞ்ச் பரத். இடையிடையே.. “படத்தில் எல்லாரும் பணம் போட்டிருக்காங்க. நீயும் போட்டால்தானே நல்லாயிருக்கும்..” என்று என்னை மூளைச் சலவை செய்து என்னிடமிருந்து இந்த ‘செய்தித் தாள்’ படம் முடிவதற்குள்ளாக சிறுகச் சிறுக 30 லட்சம் ரூபாய்வரையிலும் வாங்கிவிட்டார்.
படத்தின் துவக்கத்தில் எங்களிடம் சொன்ன கதை வேறு.. ஆனால் கடைசியில் இவர் எடுத்தக் கதை வேறு. இடைவேளைக்குப் பின்பாக எங்கள் நால்வரின் கதையும் அதிகமாக இடம் பெறாமல்.. அவருடைய பகுதி மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
நடிக்கத்தான் முடியவில்லை. படத்தின் தயாரிப்பிலாவது எனக்கும் பங்கு கொடுப்பார் என்று நினைத்துதான் நானும் கொடுத்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் தனது மகளான பிரியங்காவின் பெயரில் ஒரு நிறுவனத்தைத் துவக்கி அந்தப் புதிய பட நிறுவனத்தின் பெயரில் இந்தச் ‘செய்தித் தாள்’ படத்தை திடுதிப்பென்று வெளியிட்டுவிட்டார்.
“எனது 30 லட்சம் ரூபாக்கு கணக்கு என்ன..?” என்று கேட்டதற்கு இப்போதுவரையிலும் அதற்குப் பதில் அளிக்க மறுக்கிறார். நான் மட்டுமில்லை.. அந்தப் படத்தில் நடித்த அனைவருமே பணம் கொடுத்துதான் நடித்தார்கள். அவர்களுக்கும் இந்தப் படத்தினால் எந்தக் கிரெடிட்டும் கிடைக்கவில்லை. அவர்களும் இப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்திருக்கிறார்கள்.
எங்களை மட்டுமல்ல.. படத்தில் பணியாற்றிய பல பெண்களையும் இதேபோல் இவர் ஏமாற்றியிருக்கிறார்.
ஒரு முறை அல்ல.. இரண்டாவது முறையும் இந்த ‘பஞ்ச்’ பரத்தினால் நான் பாதிக்கப்பட்டதினால்தான் இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர முடிவு செய்தேன். நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால், இவர் மீது எந்தச் சங்கத்திலும் என்னால் புகார் கொடுக்க முடியவில்லை.
இந்த அளவுக்கு பண ஏமாற்றுதல் குற்றச்சாட்டை எதிர் கொள்ளும் இயக்குநர் ‘பஞ்ச்’ பரத் தான் அடுத்து விக்ரம் பிரபுவை வைதது படம் இயக்கப் போவதாக தமிழ்த் திரையுலகத்தில் செய்தியைப் பரப்பி வருகிறார்.
இதனால் இயக்குநர் பஞ்ச் பரத் மீது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்து எனக்கான நியாயத்தைப் பெற நான் தற்போது முடிவு செய்துள்ளேன்..” என்று நீட்டமாய் சொல்லி முடித்தார் நடிகர் சதன்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்..?!