full screen background image

திருட்டு டிவிடி வேறு வடிவத்தில் விற்பனை – தயாரிப்பாளர்கள் அந்தோ பாவம்..!

திருட்டு டிவிடி வேறு வடிவத்தில் விற்பனை – தயாரிப்பாளர்கள் அந்தோ பாவம்..!

ஏற்கெனவே சினிமா தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை. “ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாவதால் அதுவரைக்கும் காத்திருந்து பார்த்துக் கொள்ளலாம்…” என்று ரசிகர்கள் காத்திருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் சொல்கிறார்கள்.

“தியேட்டர் டிக்கெட் கட்டணம் மற்றும் கேண்டீனில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக உள்ளது. ஒரு குடும்பம் படம் பார்க்க வந்தால் அவர்களுக்கே மொத்தமாக 1000 ரூபாய் செலவாகிறது. நடுத்தரக் குடும்பத்திற்கு இது தாங்குமா? அப்புறம் எப்படி நாங்கள் தியேட்டருக்கு வருவது…?” என்கிறார்கள் பொது மக்கள்.

தயாரிப்பாளர்களோ “யார் சொல்வதை நம்புவது..? இதில் நாம் என்ன செய்வது.. சொல்வது..?” என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இன்னொரு பிரச்சினையும் தயாரிப்பாளர்களைத் தொற்றியிருக்கிறது.

இதுநாள்வரையிலும் திருட்டு டிவிடிக்கள் வெளிநாடுகளில் வெளியான பிரிண்ட்டுகளில் இருந்து காப்பி செய்யப்பட்டு தமிழகத்திற்கு விமானம் மூலமாகக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன. பிறகு இணையத்தளங்களில் இருந்து திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்யப்பட்டு காப்பி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இணையத்தளங்களின் அதீத வளர்ச்சியால் கடந்த சில மாதங்களாக திருட்டு டிவிடி விற்பனையும் கொஞ்சம் மந்தமாக இருந்தது. இந்த நிலையில் புத்தம் புதிய வடிவத்தில் திருட்டு டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அதாவது ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான திரைப்படங்களை ஓடிடி தளங்களின் அனுமதி பெற்று டிவிடிக்களில் காப்பி செய்திருப்பதாக வெளிப்படையாக அறிவித்தே தமிழகத்தின் சில ஊர்களில் சில படங்களின் டிவிடிக்கள் விற்பனையாகி வருகின்றனவாம்.

இந்தப் பட்டியலில் ‘டெடி’, ‘ஈஸ்வரன்’ ஆகிய திரைப்படங்களும் உள்ளன. இவற்றை டிவிடியாகவும், தேவையெனில் டேட்டா கார்டில் காப்பி செய்தும் தருகிறார்களாம்.

ஓடிடிக்கு கொடுக்கும் படங்கள் அந்தத் தளத்தில் மட்டுமே வெளியாக மட்டுமே..! டிவிடியாகப் போட்டு விற்பனை செய்ய வேறு ஒரு உரிமை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான அனுமதியை ஓடிடி தளங்களால் தர முடியாது.

ஆனால், இந்த வீடியோ கடைக்காரர்கள் எந்த உரிமையில், யாருடைய அனுமதியில் இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை..!

ஆக மொத்தத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்களை சுற்றி வளைத்து பல தரப்பினரும் தாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

யார் அவர்களைக் காப்பாற்றப் போவது..?

Our Score