full screen background image

கயிறு – சினிமா விமர்சனம்

கயிறு – சினிமா விமர்சனம்

ஸ்கைவே பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக எஸ்.ஆர்.குணாவும், நாயகியாக காவ்யா மாதவ்வும் நடித்துள்ளனர். மேலும் ‘ஹலோ’ கந்தசாமி, சேரன் ராஜ், பிந்து தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – பிரித்வி, விஜய் ஆனந்த், ஒளிப்பதிவு – ஜெயன் உன்னிதன், படத் தொகுப்பு – கார்த்திக், எழுத்து, இயக்கம் – கணேஷ். நேரம் – 2 மணி 8 நிமிடங்கள்.

இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய், ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக் பஸ்டர் படமான  ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இது தவிர ‘கண்ணுக்குள் நிலவு’ மற்றும் ‘ஒரு நாள் ஒரு கனவு’ போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துக்கிறது.

தினமும் காலையில் ஒரு இளம் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது இத்திரைப்படம். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால் தன்னுடைய தொழிலை விடவேண்டும் என்கிற சூழலுக்கு அவன் தள்ளப்படுகிறான். தான் மிகவும் விரும்பும் காளை மாட்டையும் அவன் இழக்க வேண்டும்.

இழக்க வேண்டியது அவன் தொழிலை மட்டுமல்ல, தன் தந்தை வழியாக தன்னிடம் வந்த பாரம்பரியத்தையும்தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நம் கலாச்சாரத்தின் ஒரு பழக்க வழக்கத்தையும் கைவிட்டாக வேண்டிய சூழல். இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

இப்படம் நம் கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதன் தேவை குறித்தும் பேசுகிறது. நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளது திரைப்படம்.

பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதையும் இன்னொரு பக்கம் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைத்திருக்கிறது.

மிக முக்கியமாக விலங்குகளும், பறவைகளும் தாங்கள் உயிர் பிழைத்திருக்க மனிதர்களை சார்ந்திருக்கிறது. நாம் அவற்றை துன்புறுத்த கூடாது. மாறாக, நாம் அவற்றின் மீது அன்பையும், கனிவையும் காட்ட வேண்டும் என்ற ரீதியில் பல்வேறு சமூக கருத்துக்களை இத்திரைப்படம் தன்னுள் கொண்டிருக்கிறது,

இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற ‘தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழா’வில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த ‘7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற ‘யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா’, ‘கொலம்பியா சினிமே லேப்’ மற்றும் ‘இரான் சர்வதேச திரைப்பட விழா’வில் சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலிலும் இந்தக் ‘கயிறு’ திரைப்படம் இடம் பெற்றது.

அதுமட்டுமல்ல. ‘லண்டன் சர்வதேச திரை விருது விழா’, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ‘மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா’  மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ‘மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா’ உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையைப் பதிவு செய்திருக்கிறது.

நாயகன் ‘சின்ராசு’ என்னும் குணா தன்னுடைய குடும்பம் வழி, வழியாக செய்து வந்த பூம்பூம் மாட்டினை வைத்து குறி சொல்லும் வேலையை தன்னுடைய தந்தையின் இறப்புக்குப் பிறகு தானே செய்து வருகிறார்.

குணா ஒரு வீட்டில் சொன்ன குறி வார்த்தைகள் தவறிப் போனதாகச் சொல்லி அந்த ஊரின் மிராசுதார் குணாவைக் கடுமையாகத் திட்டுகிறார். கையோடு அந்த ஊரைவிட்டுப் போகச் சொல்கிறார். இல்லையெனில் அந்தத் தொழிலையே கைவிடச் சொல்கிறார்.

இதனால் கோபமடையும் குணா தனது ‘கந்தன்’ என்னும் தனது மாட்டை அழைத்துக் கொண்டு கண் போன போக்கிலே நடந்து வருகிறார். வந்தவர் புதிதாக ஒரு ஊரில் தங்க முடிவு செய்து அந்த ஊரின் முக்கியப் பிரமுகரான ஞானவேல் பண்டிதரிடம் உதவி கேட்கிறார். பண்டிதரும் கந்தசாமிக்கு உதவி செய்ய… அவருடைய நிலத்திலேயே குடிசை போட்டு தங்கிக் கொண்டு ஊருக்குள் மாட்டை ஓட்டிக் கொண்டு போய் குறி சொல்லி வருகிறார் கந்தசாமி.

அதே ஊரில் வசிப்பவர்தான் நாயகி ‘தாமரை’ என்னும் காவ்யா மாதவ். தந்தையை இழந்த காவ்யா, தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இருவருமே பூ கட்டி விற்கும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

நாயகனும், நாயகியும் ஊருக்குள் சந்தித்துக் கொள்கிறார்கள். தனக்கு வரும் மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்கிற கற்பனையில் இருக்கும் காவ்யாவிடம் அவளுக்குச் சீக்கிரமாக கல்யாணமாகப் போகிறது.. மாப்பிள்ளையும் வரப் போகிறான் என்று நிஜமாகவே குறி சொல்கிறார் குணா.

நாயகியும் ஆசையுடன் இருக்க.. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மாப்பிள்ளை குணாதான் என்று காவ்யாவின் உள் மனது சொல்கிறது. இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ள.. காதல் வளர்கிறது.

இதையடுத்து தனக்கு ஊருக்குள் இருக்க அனுமதித்த ஞானவேல் பண்டிதர் மூலமாக நாயகியின் தாயிடம் பெண் கேட்கிறார் நாயகன். நாயகியின் தாயோ மாப்பிள்ளை பூம் பூம் மாட்டை விற்றுவிட்டு.. வேறு தொழில் செய்ய முன் வந்தால் தனது மகளைக் கட்டிக் கொடுப்பதாக சொல்கிறார்.

ஆனால், இதனை நாயகன் ஏற்க மறுக்கிறார். இது தனது குலத் தொழில் என்றும்.. இந்தக் கலாச்சாரத்தை அடுத்துத் தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு பணியில் தான் இருப்பதாகவும், இது தன்னோடு முடியக் கூடாது என்பதால் இந்த குறி சொல்லும் வேலையைவிடவே முடியாது என்று தீர்க்கமாக மறுக்கிறார்.

நாயகியின் தாயும் தன் நிலையில் உறுதியாய் நிற்க.. கடைசியில் இருவரின் திருமணமும் நிற்கிறது.. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஞானவேல் பண்டிதரும் முயற்சிக்கிறார். நாயகியும் முயற்சிக்கிறாள். கடைசியில் என்னாகிறது என்பதுதான் இந்தக் ‘கயிறு’ படத்தின் சுவையான திரைக்கதை.

சின்ராசாக நடித்திருக்கும் நாயகன் எஸ்.ஆர்.குணாவிற்கும், தாமரையாக நடித்திருக்கும் காவ்யா மாதவிற்கும் இது முதல் திரைப்படம். இந்தக் குறையே திரையில் தெரியாதபடி இருவரையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

சில காட்சிகளில் மனதில் நின்றிருக்க வேண்டிய இடத்தில் நாயகனின் நடிப்பு அந்த அளவுக்கு ஒர்த்தாக அமையவில்லை என்பது குறைதான். குறிப்பாக மாடு காணாமல் போன காட்சியிலும், மாடு அவனது கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் காட்சியிலும் ஏனோ வெகு சாதாரணமாக நடித்திருக்கிறார் நாயகன். இதனாலேயே  மனதைத் தொட வேண்டிய காட்சிய தொடாமலேயே தூரத்திலேயே நின்றுவிட்டது.

இதைபோல் கிராமத்து எளிய பெண்ணாக தோற்றத்தில் நம் மனதில் இடம் பிடித்த நாயகி காவ்யா மாதவன்.. நடிப்பிலும் குறையில்லை என்றாலும், இயக்குதலில் இருக்கும் சிறிய குறையினால் நிறைவை எட்டவில்லை. இருந்தும் பல காட்சிகளில் நாயகனை நடிப்பில் மிஞ்சியிருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் ‘உதார்’ கணேசனாக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி சிரிக்க வைக்கவில்லையென்றாலும் போரடிக்காமல் இருக்கவும், புன்னகைக்கவும் வைத்திருக்கிறார்.

கதாநாயகியின் அம்மா வள்ளி மயிலாக பிந்து தேவி நடித்திருக்கிறார். ஞானவேல் பண்டிதர் என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவரும் தனது பாத்திரத்துக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சால் இந்தப் படத்திற்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ஜெயன் உன்னதனின் ஒளிப்பதிவில் மீடியம் பட்ஜெட் படங்கள் எப்படியிருக்குமோ அப்படியேதான் இத்திரைப்படமும் அமைந்திருக்கிறது. படத்தில் பாராட்டத்தக்க விஷயம்.. படத்தின் கதை நடக்கும் இடமாக தேர்வு செய்யப்பட்டிருந்த அந்த அழகான கிராமம்தான்.

ஒரு பக்கம் ஓடும் ஆறு.. இன்னொரு பக்கம் வடிகாலாய் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஊருணி.. இன்னொரு பக்கம் பச்சை வயல் வெளிகள்.. அழகான வீடுகள்.. வயல் வரப்புகள் என்று கண்ணுக்குள் குளுமையாய் இருக்கும் இடங்களையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

‘அடியே’ பாடல் மனசுக்கு இதமான மெலடி. ‘நாடோடி’ பாடல் இனிமேல் கிராமப் புறங்களில் பொங்கல் தினத்தன்று ஒலிபரப்பக் கூடிய மாடுகளைப் போற்றும் பாடலாக அமைந்திருக்கிறது. ‘நிலவு’ பாடல் இன்னொரு பக்கம் காதலைத் துள்ளிக் கொண்டு சொல்கிறது.. இசையமைப்பாளர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!

கிட்டத்தட்ட தமிழகமே மறந்து போயிருக்கும் ஒரு கலாச்சார பழக்கம் பூம் பூம் மாட்டின் மூலமாக குறி சொல்வது.. இதனை ஒரு படிப்பாகவே பரம்பரை பரம்பரையாக படித்து வந்து வெறுமனே அரிசிக்கும், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்குமாக யாரும் சொல்வதில்லை.

அருள் வாக்கு சொல்வதுபோல அந்த வீட்டின் முன்னால் வந்து நின்றவுடன் கையில் இருக்கும் குடுகுடுப்பையை அடித்தவுடன் அந்த மாட்டுக்காரனின் வாயில் இருந்து வந்து விழும் வார்த்தைகள் அவரறியாமல் வருவதுதான். இதனால்தான் அக்காலத்தில் கிராமப்புறங்களில் இந்தக் குறி சொல்லும் வார்த்தைகளை வேத வாக்காக நம்பினார்கள் நமது முன்னோர்கள்.

அப்படிப்பட்ட அந்தக் கலாச்சாரம் இன்றைக்கு அழியும் நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது இத்திரைப்படம். அதோடு கூடவே கிளி ஜோசியம், வெத்திலையில் மை போட்டுப் பார்ப்பது முதலியவை இந்த மண்ணின் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டியது நமது சமூகத்தின் கடமை என நாயகன் சின்ராசு கதாபாத்திரம் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கணேஷ்.

ஒரு மாட்டுக்கும், அதனை தெய்வமாக வணங்கி, பாதுகாத்து வளர்த்து வருபவருக்கும் இடையிலான நட்பை, பழக்கத்தை, அன்பை, பாசத்தை, நேசத்தை இத்திரைப்படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சின்ராசுவும், கந்தன் என்னும் அந்த மாடும் பேசும் காட்சிகளில் ஒரு அழகுணர்ச்சி தென்படுகிறது. நம் வீிட்டில் ஒரு உறுப்பினர் என்கிற முறையில் அந்த மாட்டை அவர் கவனித்துக் கொள்ளும் போக்கையும் டீடெயிலாக விளக்கியிருக்கிறார் இயக்குநர்.

தமிழ்ச் சமூகத்தின் ஒரு கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு அழகான காதல் கதையையும் இணைத்து பார்க்கத் தகுந்த வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ்.

பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றிருக்கும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.

2020-ம் வருடத்தில் அவசியம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட்டில் இப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

Our Score