கவிப்பேரரசு வைரமுத்து மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார்கள்..!

கவிப்பேரரசு வைரமுத்து மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார்கள்..!

‘கவிப்பேரரசு’ வைரமுத்து. தமிழ்த் திரையுலகத்தில் ஒரு அறிமுகக் கவிஞராக வலம் வந்து பின்பு இளையராஜா என்னும் இசைஞானியின் உதவியால் பல பாடல்களை ஹிட்டடிக்க வைத்து கொஞ்சம் வளர்ந்த பின்பு தனக்குத்தானே ‘கவிப்பேரரசு’ என்று பெயரையும் சூட்டிக் கொண்டு இப்போதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் தனித்த ஆளுமையாக இலக்கிய உலகத்திலும், சினிமா உலகத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுவரையிலும் 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும், 6 முறை மாநில அரசின் விருதையும், இன்னும் கலைமாமணி, பத்மஷ்ரி, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றிருக்கும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவுக்கு இப்போது வயது 64.

vairamuthu

தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள், குற்றங்கள் இவைகளை அம்பலப்படுத்தும் #MeTooMovement ஹேஸ்டேக்கில் இந்திய அளவிலும் சில, பல பிரபலங்கள் சிக்கிய வண்ணம் இருந்த நிலையில் திடீரென்று ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவும் தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.

நேற்று முன்தினம் டிவீட்டரில் சந்தியா மேனன் என்னும் பெண் பத்திரிகையாளருக்கு ஒரு பெண் வைரமுத்துவை அவரது வீட்டில் வேலை விஷயமாக சந்தித்தபோது தன்னிடம் வைரமுத்து அத்துமீறி நடந்து கொண்டதாக டிவீட் செய்தியை அனுப்பியிருந்தார். அதனை சந்தியா மேனனும் டிவீட் செய்திருந்தார்.

அந்த டுவிட்டர் செய்தியில், “நான் 18 வயதில் இருந்தபோது, வைரமுத்துவின் வீட்டுக்கு சென்றிருந்தேன்… அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். நான் வைரமுத்து மீது மிகுந்த, மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். அவர் இப்படி செய்வார்  என நான் எதிர்பார்க்கவில்லை…” என குறிப்பிட்டிருந்தார் அந்தப் பெண்.

vairamuthu-harrasment-twitter-news-3 

இதைத் தொடர்ந்து இசைத் துறையை சார்ந்த பெண், இதேபோல் வைரமுத்துவை அவரது பெசண்ட் நகர் வீட்டில் ஒரு நாள் சந்தித்தபோது வைரமுத்து திடீரென்று தன்னைக் கட்டிப் பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும் கூறினார். இத்தனைக்கும் இந்தப் பெண்ணின் குடும்பமும் வைரமுத்துவின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள்தானாம். வைரமுத்துவின் மனைவியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவும் நெருங்கிய நண்பிகளாம். வைரமுத்துவின் மனைவி மீதிருந்த அபிமானம் காரணமாக அப்போது அதனை யாரிடமும் சொல்லாமல் தான் விட்டுவிட்டதாக…” இப்போது சொல்லியிருக்கிறார்.

vairamuthu-harrasment-twitter-news-5

3-வதாக ஒரு பெண் எழுதியுள்ளதில், “என் தாத்தா வயதுள்ள அவரை ஒரு வேலை விஷயமாக சந்திக்கச் சென்றேன். அவர் வீட்டுக்குச் சென்றபோது வீட்டுக் கதவை அடைத்துவிட்டு என்னிடம் அத்து மீறி நடந்து கொண்டார். நான் ஓடி வந்துவிட்டேன்.

இதற்கடுத்து ஒரு நாள் எனக்கு போன் செய்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். அவருடைய மனைவி எனது குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். இதனால் நான் அப்போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டேன். அப்போது இதைச் சொல்ல தைரியமில்லை. இப்போது வந்திருக்கிறது. அதனால் சொல்கிறேன்..” என்று எழுதியிருக்கிறார்.

4-வதாக எழுதிய ஒரு பெண், “எனக்கு 17 வயதாக இருந்தபோது வைரமுத்து எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்காக எங்களை அழைத்துச் சென்றனர். ‘பாவாடை, தாவணியில்தான் அனைவரும் வர வேண்டும். வருகின்ற பெண்களும் அழகானவர்களாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்ததால் எங்களை அது போலவே அலங்கரித்து அழைத்துச் சென்றனர்.

எங்களை அழைத்துச் செல்லும்போதே ‘அவர் அப்படி இப்படி இருப்பார். செய்வார். நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்’ என்று எங்களிடத்தில் சொல்லித்தான் அழைத்துச் சென்றார்கள். அந்த நேரத்தில் எனக்கு வேறு வழியில்லாததால் சென்றேன். வைரமுத்து மனிதத் தன்மையே இல்லாதவர். அவர் மீது வைத்திருந்த மதிப்பே போய்விட்டது..” என்று கதறியிருக்கிறார்.

5-வதாக ஒரு பெண், “கோடம்பாக்கத்தில் அவருக்குச் சொந்தமான ஒரு பெண்கள் விடுதி இருக்கிறது. அங்கே என் போன்ற ஏராளமான இளம் பெண்கள் தங்கியிருந்தோம். இதில் பலரை அவர் சீரழித்துவிட்டார். அவர் விடுதிக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பெண்ணை சீரழிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

6-வதாக ஒரு பெண், “நான் ஒரு ரேடியோ ஜாக்கி. ஒரு பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்டேன். தன்னுடைய பெசண்ட் நகர் வீட்டுக்கு வரச் சொன்னார். அதனால் எங்களது குழுவினருடன் அவரது வீட்டுக்குச் சென்றேன்.

பேட்டியெடுப்பதற்காக நான் மட்டுமே அவரது அருகில் இருந்தேன். அதைப் பதிவு செய்வதற்காக மற்றவர்கள் தள்ளி நின்றிருந்தனர். அந்தச் சமயத்தில் அவர் என்னுடன் பேசியபடியே என் தலைமுடியைக் கோதிவிட்டார். சில்மிஷங்களும் செய்தார். அவரைப் பற்றி முன்பே நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அன்று நேரில் சந்தித்தபோது அவரின் நிஜ முகத்தைத் தெரிந்து கொண்டேன். அவர் நல்ல மனிதர் அல்ல..” என்று பொங்கியிருக்கிறார்.

டிவீட்டர் உலகத்தில் இந்த டிவீட் செய்திகள் தீயாய் பரவத் தொடங்கிய நிலையில் பிரபல பாடகியான சின்மயி, இந்த டிவீட்டுகளை தொடர்ந்து ரீவிட் செய்து பரப்புரை செய்து கொண்டிருந்தார்.

அதற்கடுத்து வைரமுத்து மீது நேரடியாக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார் பாடகி சின்மயி. “ஐந்து வருடங்களுக்கு முன்பேயே நான் இந்த குற்றச்சாட்டை பேசியிருக்க வேண்டும்…” என்ற முன்னுரையுடன் அந்தக் கதையை டிவீட்டரில் சொல்லியிருக்கிறார்.

chinmayie-vairamuthu-1

“2005 அல்லது 2006-ம் ஆண்டாக இருக்கும். ’வீழ மாட்டோம்’ என்ற ஆல்பம் ஒன்றை இலங்கை தமிழர்களுக்கு பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களுடன் பாடுவதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அது புத்தகமா அல்லது பாடல் வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அதன் வெளியீட்டுக்காகத்தான் சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம்.

இங்கேயே பாடல் ரெக்கார்டிங் முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்று லைவ்வாகப் பாடியும் கொடுத்தேன். எல்லோரும் கிளம்பிய பிறகும், நானும் என் அம்மாவும் மட்டும் அங்கேயே இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.

அப்போது விழா ஏற்பாட்டாளர் என்னிடத்தில் வந்து, ‘உங்களை மட்டும் வைரமுத்து அவர் தங்கியிருக்கும் Lucerne பகுதி ஹோட்டலுக்குச் வரச் சொன்னார் என்றார். நான் “ஏன்.. எதற்காக..?” என்று கேட்டதற்கு, “கொஞ்சம் அவருடன் ஒத்துழையுங்கள்…” என்று சொன்னார்.

நான் உடனேயே மறுத்துவிட்டு, இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யச் சொன்னேன். “இதனால் எனது எதிர்காலமே பாதிக்கப்படும்…” என்று அவர் சொன்னார். அதற்கு, நானும் என் அம்மாவும் எழுந்து நின்று “அப்படிப்பட்ட எந்த எதிர்காலமும் எங்களுக்கு வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம்…” என்று சொல்லி, எந்த விமானம் சீக்கிரமாக இருக்கிறதோ, அதிலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்தியா வந்தடைந்தோம்.

இன்னொரு சம்பவமும் இருக்கிறது. ஒரு முறை சூடு வாங்கிய பூனை திருந்தியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை.

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவில் நான்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப் போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதனால் நான் செய்வது அறியாமல் கதறி அழுதேன். இதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள். அதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய். ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை’ எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்…”

இப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு அனைவரது கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டார் சின்மயி.

மேலும் அவர் வெளியிட்ட சில ட்வீட்களில் “கடந்த 17 வருடங்களில் நான் வேலை செய்த தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி மொழித் திரையுலகங்களில் ஒருவர்கூட என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை. ஆபாச மெஸேஜ் அனுப்பவும், என்னைத் தொடவும் முயன்றதில்லை. நான் வேலை செய்யும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவேன். இப்போது வைரமுத்துவை (சார்) நேருக்கு நேராகத் தனியாகவே எதிர்க்கத் தயாராகிவிட்டேன்.

chinmayie-vairamuthu-2

வைரமுத்துவின் அலுவலகத்தில் இருக்கும் வேலையாட்களுக்குத் தெரியும். அவருக்கு நெருங்கியவர்களுக்கும் தெரியும். அவர்களும் இவருக்கு உதவியாக இருந்தவர்கள்தான். உங்களது நேரம் முடிந்துவிட்டது என்பதை மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன். இனி நான் பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் சினிமா துறை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுதான் என் கதை. இதுதான் உண்மை.

5 ஆண்டுகளுக்கு முன்பேயே நான் அவரது முகத்திரையைக் கிழித்திருப்பேன்.. அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன். இப்போது அவரைப் பற்றி வெறும் 0.2 சதவீதமே பேசி உள்ளேன். வைரமுத்துவின் வீட்டு அருகில் உள்ளவர்களிடம் கேட்டாலே அவரின் லீலைகள் வெளிவரும். இனிமேல் தமிழ்ச் சினிமாவில் எனக்கு பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரது லீலைகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்…” என்றும் பாடகி சின்மயி ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இது மட்டுமன்றி, வைரமுத்துவை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதற்காகச் சென்ற பெண்களும்,  தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்களும் வீட்டுக் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

vairamuthu-hostel-haraasement-1 vairamuthu-hostel-haraasement-2 

இதேபோல் கோடம்பாக்கத்தில் வைரமுத்து நடத்தி வந்த பெண்கள் விடுதியில் அவர் அந்தப் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், அங்கே நீண்ட நெடுங்காலமாக வைரமுத்து கொடுத்து வரும் செக்ஸ் டார்ச்சர்கள் குறித்தும் வரிசையாக டிவீட்டரில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் வைரமுத்துவிடம் வேலை பார்த்தபோது, அவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுத்தாராம், அதை தற்போது தைரியமாக டிவீட்டரில் கூறியுள்ளார்.

இதே நேரம் பாடகி சின்மயியின் திருமணத்திற்கு வைரமுத்து நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டி சின்மயியிடம்.நெட்டிசன்கள் சராமரியாக கேள்விகேட்டபோது, “வைரமுத்துவுக்கு நான் கல்யாண அழைப்பிதழே அனுப்பவே இல்லை. ஆனால் என் கணவர் ராகுல் குடும்பத்தினர்தான் நான் சம்பந்தப்பட்ட சம்பவம் பற்றி அறியாமல் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டார்கள். அவரும் வந்திருந்தார். அதனால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது….” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

chinmayie-1

மேலும், இதற்கு அவரது கணவரான ராகுலும் “ஆமாம். உண்மைதான்.. நான்தான் அவருக்கு கல்யாண அழைப்பிதழை அனுப்பியிருந்தேன். சின்மயி அவரால் பாதிக்கப்பட்டது தனக்கு இப்போதுதான் தெரியும்…” என்று சொல்லியிருக்கிறார்.

“சம்பவம் நடந்தபோது சொல்லாமல் இத்தனையாண்டுகள் கழித்து சொல்கிறீர்களே?” என்று பலரும் திருப்பித் திருப்பிக் கேள்வி கேட்க, சின்மயியோ, “அப்போது சொல்லும் சூழல் இல்லை. இப்போது உலகம் எங்களை திரும்பிப் பார்க்கிறது.. இந்த இயக்கம் மிகத் தீவிரமாய் இருக்கிறது. அதனால் இப்போதாவது உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்து சொன்னேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இதேபோல் இந்த நெறிமுறை கேள்விகள் குறித்து டிவீட் செய்த நடிகர் சித்தார்த் “புகார் சொன்னபோது என்ன ஆதாரம், யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டீர்கள். இப்போது புகார் சொல்பவரே வெளியே வந்ததும், உங்கள் பப்ளிசிட்டிக்காக செய்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். உங்கள் பிரச்சினைதான் என்ன?” என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்.

இது குறித்து இன்றைக்கு மதியம்தான் கவிப்பேரரசு வைரமுத்து டிவீட்டரில் தன்னிலை விளக்கமாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

அதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் பழக்கம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்..” என்று சொல்லியிருந்தார்.

வைரமுத்துவின் இந்த டிவிட்டை படித்துவிட்டு பாடகி சின்மயி வைரமுத்துவை “பொய்யர்” என்று அழைத்து இதனை மறுத்திருக்கிறார்.

பிரபல நடிகை சமந்தாவும், பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரானும் இந்த விஷயத்தில் சின்மயியிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்கள்.

மற்றபடி திரையுலகத்தினர் அனைவரும் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

வைரமுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாகவும் இருப்பதால் அந்தக் கட்சியினர் சிலர் நேரடியாகவும், பலர் மறைமுகமாகவும் வைரமுத்து ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சியினர், அமைப்பினர்கள் இது குறித்து இப்போதுவரையிலும் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இனி வரும் நாட்களில் இந்த டிவீட்டர் போர் பெரும் புயலாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

 

Our Score