‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்

‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்

திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைப்பது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.  அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றிதழ் கிடைப்பது அரிதான விஷயம்.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது.

இந்தப் படத்தை Maple Leafs Productions நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபுவே தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபுவே இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேனும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கரன், இசை – இலக்கியன், கலை இயக்கம் – பி.கிருஷ்ணமூர்த்தி, லோகு, நடன இயக்கம் – மெட்டி ஒலி சாந்தி, பாடல்கள் – கவிஞர் முத்துலிங்கம், மக்கள் தொடர்பு – சதீஷ்.

பிரபல படத் தொகுப்பாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான பி.லெனின் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். நாயகன் இ.வி.கணேஷ் பாபுவே இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இப்போது இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதிலும் படத்திற்கு ஒரு ‘கட்’ கூட சென்சாரில் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு பேசும்போது, “எனது திரைப்படத்திற்கு   “கட்டில்” என்று பெயர் வைத்தவுடன் சிலர் வேறு மாதிரி பார்த்தார்கள்.. இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது இந்திய கலாச்சாரத்தின் உன்னதத்தை, தமிழக பாரம்பரிய நுட்பத்தை, குடும்ப உறவுகளின் மேன்மையை தெரிவிக்கும் விதமாக ஜனரஞ்சகத்தோடு கட்டில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று பல முறை கூறி வந்தேன்.

இந்தக் கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்விதமாக ‘கட்டில்’ திரைப்படத்திற்கு clear ‘U’ தணிக்கை சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியிருப்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டு திரைப்படத் துறையில் அறுபது ஆண்டுகளாக பயணித்து வரும், B.லெனின் அவர்கள் இந்தக் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத் தொகுப்பையும்  செய்திருக்கிறார் என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்…” என்றார்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இருக்கிறார்கள்.