‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை படத்தைத் தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் செய்து வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புக் குழுவினருக்கு மருத்துவ ரீதியிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக வழங்கப்படும் என்று ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை அதிகாரியான செம்பியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவிகித படப்பிடிப்பையும் முழுக்க, முழுக்க ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லாமே இண்டோர் ஷூட்டிங்தான். அதற்காக பிரம்மாண்டமான செலவில் செட் அமைக்கப்படுகிறது.
இங்கிருந்து ஹைதராபாத் செல்ல ரஜினி சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் கொண்டு வரவுள்ளோம்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி’க்கு செய்த அதே ‘பயோ பபுள்’ ஏற்பாடுகள்தான் இந்த ‘அண்ணாத்த’ படக் குழுவினருக்கும் செய்யப்படவுள்ளது.
அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஹோட்டல், படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் ‘பயோ பபுளில்’ இருப்பவர்கள் யாரும் வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.

சன் ரைசர்ஸ் அணி, ‘பயோ பபுளில்’ இருந்தபோது சன் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளான சண்முகம், கண்ணன் என்பவர்கள்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள்தான் இப்போது ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்கும் பொறுப்பு வகிக்கப் போகிறார்கள்.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். இப்படி, தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 40 நாள்கள் ரஜினி சார் நடிக்கவிருக்கிறார். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.