full screen background image

“மாஸ்டர்’ மட்டுமே பொங்கலுக்கு வெளியாக வேண்டும்” – தயாரிப்பாளர்களின் ‘மாஸ்டர்’ பிளான்..!

“மாஸ்டர்’ மட்டுமே பொங்கலுக்கு வெளியாக வேண்டும்” – தயாரிப்பாளர்களின் ‘மாஸ்டர்’ பிளான்..!

“நடிகர் விஜய்யின் மாஸ்டர்’ படம் பொங்கல் விடுமுறைக்காக வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக் கூடாது” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்களாம்.

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தப் படம் ‘மாஸ்டர்.’ இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கம் செய்து இருக்கிறார். படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முதலில் இந்தப் படத்தை ‘ஓ.டி.டி’யில் வெளியிடத்தான் முயற்சிகள் நடந்தன. தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் கேட்டுக் கொண்டதன் பேரில், ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் பிரிட்டோவும், லலித் குமாரும் சம்மதித்தார்கள்.

ஆனால், இது குறித்து இந்தத் தயாரிப்பாளர்கள் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட ஒரேயொரு முக்கிய நிபந்தனையை விதித்திருக்கிறார்கள்.

“மாஸ்டர் படம் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு வேறு படங்களை தியேட்டர்காரர்கள் திரையிடக் கூடாது” என்பதுதான் அவர்களின் நிபந்தனை. அதிசயமாக இந்த நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக் கொண்டார்களாம்.

இது பற்றி இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஒரு தியேட்டர் அதிபர் பேசும்போது, “கொரோனா பயம் காரணமாக இப்போதும் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. 10, 15 பேர்கள் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். இதற்கு அறிமுகம் இல்லாத நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாவதும் ஒரு காரணம்.

பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும். வெறும் 10, 15 பேர்களை வைத்து காட்சிகளை நடத்த முடியாது. இவர்களால் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் தியேட்டரின் மின்சார கட்டணத்துக்குக்கூட போதாது. தியேட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. இந்தப் பிரச்சினை காரணமாக திறக்கப்பட்ட வேகத்திலேயே 400 தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டு விட்டன.

அதனால்தான் விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படங்களை எதிர்பார்க்கிறோம். பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே கூட்டம் வரும் என்று நம்புகிறோம். இதனால்தான் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்கள் விதித்த நிபந்தனையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்..” என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் வரும் 2021 பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தமிழகத்தில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Our Score