full screen background image

கதிர் – சினிமா விமர்சனம்

கதிர் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ், இயக்கம் – தினேஷ் பழனிவேல், இசை – பிரஷாந்த் பிள்ளை, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு – தீபக் துவாரகநாத், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறதுதான் முக்கியம்” என்ற கருத்தைதான் இந்தக் ‘கதிர்’ திரைப்படம் முன்னிறுத்துகிறது.

கிராமத்திலிருந்து நகர  வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி நிற்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு, அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதுதான் இந்தக் ‘கதிர்’ படத்தின் கதைச் சுருக்கம்.

படத்தின் நாயகனான கதிர் பி.இ. முடித்திருந்தாலும் வேலைக்குப் போகாமல் ஊரில் வெட்டியாய் குடித்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மகனின் பொறுப்பற்ற தன்மையை ஒரு நாள் அவரது அப்பா சுட்டிக் காட்டி வருத்தப்படுகிறார்.

தந்தையின் இந்தப் பேச்சில் மனமுடைந்துபோன கதிர் சட்டென சென்னைக்குக் கிளம்பி வருகிறார். சென்னையில் அவனது கல்லூரி தோழனின் அறையைத் தேடி வரும்போதே தெருவில் வாக்கிங் போகும் ரஜினி சாண்டியுடன் கதிருக்கு மோதல் ஏற்படுகிறது.

கடைசியாக தனது நண்பனைத் தேடிப் பிடித்த கதிர் அவனுடனேயே தங்கியிருந்து ஐடி நிறுவனங்களில் வேலை தேட முடிவெடுக்கிறார். அதே நேரம் அவன் சண்டையிட்ட அந்த முதிய பெண்மணியான ரஜினி சாண்டிதான் தான் இருக்கும் வீட்டின் உரிமையாளர் என்பது கதிருக்குத் தெரிய வருகிறது.

கதிர் ஆங்கில அறிவு குறைபாடுடன் இருப்பதால் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் போகிறது. வேலை கிடைக்காத விரக்தியில் கதிர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அலம்பல் செய்ய.. இது ரஜினி சாண்டிக்குப் பிடிக்காமல் போகிறது. ஆனாலும் கதிரின் நண்பனுக்காக அவர் அமைதியாக இருக்கிறார்.

போகப் போக ரஜினி சாண்டியின் அன்பான குணம் கதிருக்குத் தெரிய வர.. இருவரும் நெருக்கமாகிறார்கள். வயோதிகம் காரணமாக ரஜினி ஒரு முறை வீட்டிலேயே மயக்கம் போட்டு விழுக.. அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சேர்க்கும் அளவுக்கு கதிரும் ரஜினியுடன்  அன்பாகிறான். கதிர் தனது வாழ்க்கைக் கதையை ரஜினியிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகுகிறான்.

இந்த நேரத்தில் கதிருக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்க சந்தோஷமாக வேலைக்குக் கிளம்புகிறான் கதிர். போன இடத்தில் அவன் சந்திக்கும் ஒரு பிரச்சினை அவனது அப்போதைய சந்தோஷத்தை சுக்கு நூறாக்குகிறது. மனமுடைந்த கதிர், ரஜினியுடன் ஊருக்குத் திரும்புகிறான்.

வந்த இடத்திலும் கதிரின் உயிர்த் தோழன் ஒருவன்  மனைவி, மகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ள.. கதிர் உடைந்து போகிறான். அந்த நேரத்தில் அவனைத் தேற்றுவதற்காக ரஜினி சாண்டி தனது சொந்த வாழ்க்கைக் கதையை அவனிடத்தில் சொல்கிறார். அந்தக் கதையைக் கேட்ட கதிர், தன் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவுக்கான ஒரு முடிவை எடுக்கிறான்.

அந்த முடிவு என்ன..? இந்த முடிவை எடுக்க வைக்கும் அளவுக்கு ரஜினி சாண்டி, கதிரிடம் சொன்ன கதைதான் என்ன..? கதிரை சென்னையில் இருந்து கிராமத்துக்கே திருப்பியனுப்பும் அளவுக்கு அந்த அலுவலகத்தில் அவன் சந்தித்த சம்பவம் என்ன..? இதற்கான விடைதான் இந்தக் ‘கதிர்’ திரைப்படம்.

நாயகன் வெங்கடேஷூக்கு ஹீரோவுக்கேற்ற முகம். தற்போதைய வழமையான நாயகர்கள் செய்வதைப் போலவே குடி, சிகரெட், அடிதடி, காதல் என்று அனைத்தையும் கச்சிதமாக செய்கிறார். சோகக் காட்சிகளில்தான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறார்.

கல்லூரி காட்சிகளில் அந்த வயதுக்கேற்ற வீரத்தையும், தெனாவெட்டையும் காண்பித்திருக்கிறார். பல காட்சிகளில் மிக இயல்பாக, செட்டுக்கு வரும்போது எப்படியிருந்தாரோ அது போலவேதான் நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

ரஜினி சாண்டி என்ற அந்த முதியப் பெண்மணிக்கு தற்போது வயது 70. மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில்தான் அறிமுகமானார். 70 வயது போலவே இல்லாமலும், மிக நீண்ட வருடங்களாக நடித்து வருபவரைப் போலவும் இருக்கிறது அவரது நடிப்பு. ரொம்பவும் செண்டிமெண்ட் காட்சிகளை வைக்காததால் அழுகை, கண்ணீர் இல்லாமலேயே தனது அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் காண்பித்திருக்கிறார் ரஜினி. பாராட்டுக்கள்.

வெங்கடேஷின் நண்பனாக நடித்தவரும் மிகச் சிறப்பாக படபடப்புடன், பதைபதைப்புடன் நடித்திருக்கிறார். நண்பனால் வரும் ஏழரையை சமாளிக்க அவர் படும் பாட்டை ரசிக்க முடிகிறது. ‘ஏழரை’ என்றே கதிரின் பெயரை செல்போனில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பதும் சாலப் பொருத்தம்.

வெங்கடேஷின் நட்பு வட்டாரத்தில் கொங்கு தமிழ்ப் பேசும் ‘மாமா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அவருடைய வசன உச்சரிப்பும், நடிப்பும், உடல் மொழியும் சிறப்பானது.

அறிமுக நாயகி அத்தனை அழகில்லை என்றாலும் கேமிராவுக்கு ஏற்ற முகம். வெங்கடேஷை முதலில் சில நாட்கள் அலைய விடுவதும், பின்பு தனக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று சொல்லி வெங்கடேஷை டிரையலாக்குவதும் சுவாரஸ்யம்..!

ரஜினி சாண்டி சொல்லும் கதையில் மக்கள் போராளியாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் அந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரும் அவருடன் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அந்தக் கதையைப் படமாக்கியிருக்கும்விதம்தான் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் படத்தின் ஒளிப்பதிவு சுமாராக இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பட்ஜெட்தான் காரணமோ..? ஆனால், கல்லூரி காதல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்டுகள் அழகுறப் பதிவாகியிருக்கிறது. மிக யதார்த்தமான சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இசையும், பாடல்களும் கேட்கும் ரகம்தான் என்றாலும் முணுமுணுக்க வைக்கவில்லை என்பதில் வருத்தம்தான்.

படத்தின் முதல் பாதி எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாத அளவுக்கு மிக மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் பாதி நேரத்தில் இப்படியே சென்று கடைசி அரை மணி நேரத்தில்தான் படமே சூடு பிடிக்கிறது. இந்த வேகத்தை முதலில் இருந்தே கொடுத்திருக்க வேண்டும் இயக்குநரே..?!

கல்லூரி காட்சிகளை சுவையான திரைக்கதையில் படமாக்கியிருந்தாலும், குடிப்பதும், அடிதடியில் ஈடுபடுவதும்.. பெண்களை டார்ச்சர் செய்வதும் தவறு என்று சொல்லாமலேயே காதல் தோல்விக்கு பெண்களையே குற்றம் சொல்வதெல்லாம் ஆணாதிக்கத்தனமான திரைக்கதை.

படத்தில் நம்மை நெகிழ வைப்பது ரஜினி சாண்டி சொல்லும் அவருடைய சொந்தக் கதைதான். இந்தக் கதைக்கான லீட் படத்தின் டைட்டில் காட்சிகளில் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம். அந்த அரை மணி நேரத்தை வைத்தே ஒரு முழு நீளப் படத்தையே கொடுத்திருக்கலாம். ஏன் இயக்குநர் செய்யாமல் போனார் என்று தெரியவில்லை. இவ்வளவு அழகான கதையுடன் கதிர் கனெக்ட் ஆகும் அந்த விஷயம் செம டிவிஸ்ட்டுதான். எதிர்பாராதது..!

ஆனால் கதிருக்கும், ரஜினி சாண்டிக்குமான உறவு அழுத்தமில்லாமல் இருக்கிறது. என்ன காரணத்திற்காக ரஜினி சாண்டியை கதிருக்குப் பிடித்துப் போகிறதோ அதை அப்படியே அவர் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு திரைக்கதை இதில் இல்லாததால் இது ஏனோ, தானோவென்று அமைந்திருக்கிறது.

படத்தின் இறுதியில் சொல்லப்படும் விஷயம்தான் இந்தப் படத்தைத் தூக்கிப் பிடிக்கவும், அவசியம் பாருங்கள் என்று சொல்லவும் வைக்கிறது.

இன்றைக்கு இந்தியா முழுவதிலும் விவசாயிகளின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும். அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகிறது.

இந்தச் சூழலில் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தே நாயகன் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய ஒரு வெப் சைட்டை நிறுவுகிறார். அதனை பிரமோட் செய்யவும், விளை பொருட்களை விற்பனை செய்யவும் அவர் காட்டும் முனைப்புகள் சுவாரசியமானவை. அதிலும் அவர்கள் தங்களது வெப் சைட்டுக்காக எடுக்கும் விளம்பரப் படம் சூப்பரோ சூப்பர்.

“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறதுதான் முக்கியம்” என்ற கருத்தை இந்தக் ‘கதிர்’ திரைப்படம் முன்னிறுத்துவதாக இயக்குநர் சொன்னாலும் கூடுதலாக “எப்படி வாழுறோம் என்பதும் முக்கியம்” என்பதை இயக்குநர் சொல்ல மறந்துவிட்டார்.

“யாருக்காக வாழ்கிறோம்” என்பதைவிடவும் “எப்படி வாழ்கிறோம்” என்பதுதான் இனி வரக் கூடிய தலைமுறையினருக்கு சொல்லித் தர வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

முதற்பாதியில் இளைஞர்களின் தவறான பாதையை தவறென்று சொல்லாத இயக்குநர் பிற்பாதியில் அதே இளைஞர்களின் வாழ்க்கைக்கான புதிய முயற்சியையும், வழியையும் காட்டியிருக்கிறார். இந்த ஒரேயொரு காரணத்திற்காக இந்தப் படக் குழுவினர் பாராட்டினை பெறுகிறார்கள்.

வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!

Our Score