full screen background image

‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவிலும் கசமுசா..!

‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவிலும் கசமுசா..!

வர வர சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழா திருவிழா ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது.. இதனை கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு தகுதியுடைய ஒரு அமைப்பு இன்னமும் சினிமாவுலகிற்குக் கிடைக்காதது வருத்தமான விஷயம்தான்..!

பெரிய நடிகர்கள் சின்ன இடத்திற்கு வந்தாலே பிரச்சினைதான்.. அதிலும் அவரது உயிருக்குயிரான ரசிகர்கள் அத்தனை பேரும் தலைவனை பார்க்க ஒன்று கூடினால் அடித்து விரட்டவா முடியும்..?

கடந்த 15-ம் தேதி ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் சலசலப்போடு நடந்து முடிந்தது. இன்றைக்கு ‘கத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இதே கதிதான்..!

விழா நடைபெற்ற லீலா பேலஸ் ஹோட்டலுக்கு பிரதான சாலையிலிருந்து இரு வழிகள் மூலமாகச் செல்லலாம். சன் தொலைக்காட்சி இருக்கும் சாலை ஒன்று.. அதற்கடுத்த சாலை இன்னொன்று.. இரண்டிலுமே பாதி தூரத்திலேயே போலீஸ் பிளாக் செய்திருந்தது.

‘கத்தி’ படத்தின் எதிர்ப்பாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் ‘இந்த விழா நடைபெறக் கூடாது. அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்று கோரி போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஹோட்டல் நோக்கி முன்னேறவும் முயல..  போலீஸார் படாதபாடுபட்டு அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதாகச் சொல்லி பேருந்தில் ஏற்றிச் சென்றது.

அதற்கு பிறகு இரண்டு சாலைகளிலும் தடுப்பணைகளை போட்டு ‘அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே இதற்கு மேல் அனுமதி’ என்றார்கள். ஆனால் ஒரு அழைப்பிதழை காட்டி ஒரு குடும்பமே ஹோட்டல் நோக்கி வீறுநடை போட்டு சென்றது. காவலுக்கு இருந்த போலீஸாரிடம் மேலதிகத் தகவல்கள் சொல்லவில்லையாதலால் அவர்களும் இதை அனுமதித்துவி்டடார்கள்..

அங்கே லீலா பேலஸின் மெயின் கேட் பூ்டடப்பட்டு இரு புறமும் இருந்த சின்ன வாசல் வழியாகத்தான் அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள். நாம் சென்ற போது மணி 6.30. ‘உள்ளே அரங்கம் ஹவுஸ்புல்லாகிவிட்டதால் யாருக்கும் அனுமதியில்லை’ என்று ஒருவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மற்றும் மலையாளத்தில் கூவிக் கொண்டிருந்தார்.

லீலா பேலஸ் வாட்ச்மேன்களில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை. பாதி பேர் மலையாளிகள். பாதி பேர் வடநாட்டவர்கள். பிரஸ், மீடியாக்காரர்களும் கைகளில் அழைப்பிதழ்களை வைத்துக் கொண்டு உள்ளே போக வழி கேட்க.. அவர்களது நெஞ்சில் கை வைத்து வெளியே தள்ளினார்கள் வாட்ச்மேன்கள். நாம் சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் சொன்னது நமக்குப் புரியவில்லை..

மீடியாக்கள் மட்டுமா நின்றது..? தமிழ்த் திரையுலகத் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, ஹெச்.முரளி என்று பல பிரபலங்களும் இந்தத் தள்ளுமுள்ளில் மாட்டிக் கொண்டு உள்ளே போக முடியாமல் தவித்தார்கள்.

கோபத்தில் தயாரிப்பாளர் முரளிதரன் வெளியேறிப் போனவர், சிறிது நேரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வருவதைப் பார்த்தவுடன் அவருடன் கை கோர்த்து உள்ளே வந்தார். எஸ்.ஏ.சி.யே படாதபாடுபட்டுத்தான் உள்ளே போனார். அவரையே யாரென்று தெரியாமல் உள்ளே இடமில்லை என்று இந்தியில் சொல்லி நிறுத்தினார்கள். மீடியாக்காரர்களும், ரசிகர்களும் கத்திய பின்புதான், விஜய்யின் தந்தைக்கே வழி கிடைத்தது..!

சம்பந்தப்பட்ட பி.ஆர்.ஓ.க்கள் வந்து சொல்லியும் உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள் வாட்ச்மேன்கள். பி.ஆர்.ஓ.க்களுக்கும் வாட்ச்மேன்களுக்கும், மேனேஜரு்ககும் இடையில் கடும் சண்டை.. வாக்குவாதம்.. பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக போனால் போகிறதென்று நிறுத்தி, நிறுத்தி உள்ளே அனுமதித்தார்கள். இதில் சிலருக்கு சட்டை கிழிந்ததுதான் மிச்சம்.. 2 பேர் தங்களது செல்போனை தொலைத்துவிட்டு கத்திக் கொண்டிருந்தது தனி கதை..!

இந்த வாசலில் காத்திருந்த அனைவரின் கைகளிலும் அழைப்பிதழ்கள் இருந்தன என்பதுதான் காமெடியான விஷயம்.. இத்தனை அழைப்பிதழ்களும் வாசலில் காத்திரு்கக உள்ளே அரங்கம் ஹவுஸ்புல் என்றால் எப்படி..?

அரை மணி நேரம் தள்ளுமுள்ளுவெல்லாம் செய்துதான் மீடியாக்காரர்கள் பலரும் உள்ளே சென்றார்கள். ஹோட்டலின் உள்ளேயும் இதே நிலைமைதான்.. மெயின் கேட்டில் வாட்ச்மேன்கள் எனில், உள் கேட்டில் பவுன்சர்கள்.. யாருக்கும் யாரை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை.

அங்கேயும் அளவுக்கதிமாக ரசிகர்கள் வந்து குவிந்துவிட.. ஒரு அழைப்பிதழுக்கு ஒருத்தரைத்தான் விட முடியும் என்று கண்டிஷனாக சொல்லி உள்ளே வழிவிட்டனர் பவுன்சர்கள்..

 அழைப்பிழ்கள் வைத்திருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாமல் பலரும் நடுரோட்டில் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது..! இதில் சில பெரிய பணக்கார வீட்டுப் பெண்களும் சிக்கிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது..!

வெளியே மட்டுமல்ல.. உள்ளேயும் அப்படித்தான். நிற்கக்கூட இடமில்லாமல் அரங்கத்தை நிரப்பியிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.. ஆள், ஆளுக்கு சேர்களில் ஏறி நின்று கொண்டு கூச்சலும், விசில் சப்தத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்க.. ஒரு மாஸ் நடிகரின் விழா மேடை அது என்பதை நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டேயிருந்தது..!

விஜய் வருகிறார் என்றாலே அதற்கேற்றாற்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.. வெளியில் மட்டும் போலீஸை நிறுத்திவிட்டு.. உள்புறம் பாதுகாப்பு உங்கள் பாடு என்று பவுன்சர்கள் மற்றும் வாட்ச்மேன்கள் கையில் ஒப்படைத்தால் இப்படித்தான் நடக்கும்..!

ரசிகர்களை கண்ணை மூடிக் கொண்டு அனுமதித்துவிட்டு அழைப்பிதழ் வைத்திருந்த விருந்தினர்களை இப்படி வாசலிலேயே நிற்க வைத்து திருப்பியனுப்பியதால் இப்போது யாருக்கு கெட்ட பெயர்..?

விழாவின் பி.ஆர்.ஓ.க்கள் சொல்லியும் கேட்க மாட்டோம் என்கிற அளவுககு மரியாதை தெரியாமல் நடத்தும் அந்த ஹோட்டலில் இனிமேல் சினிமா நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதை சினிமா பி.ஆர்.ஓ.க்கள் அனைவரும் சற்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்..!

Our Score