“நான் பச்சைத் தமிழன். எனக்கும் தமிழுணர்வு இருக்கு..” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் உருக்கம்..!

“நான் பச்சைத் தமிழன். எனக்கும் தமிழுணர்வு இருக்கு..” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் உருக்கம்..!

‘கத்தி’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதில் இருந்து சில பகுதிகள்.

“துப்பாக்கி’ படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதைவிட உங்களுக்கு மிகவும் பிடித்த படமா இந்தக் ‘கத்தி’ இருக்கணும்னு ஒரு அழுத்தம் எனக்குள்ள இருந்துச்சு. ஆனால் அது சந்தோஷமான அழுத்தம்தான்.

விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பேப்பரில் இடைவேளைக்குப் பிறகு ‘ஐ யம் வெயிட்டிங்’ என எழுதி இருந்தேன் அவ்வளவுதான். அந்த ஒற்றை வார்த்தை படத்திற்கு மிக பிரம்மாண்டமாக அமைந்தது என்றால் அது விஜய்யால்தான். அவர்தான் தலையை அசைத்து ‘ஐ யம் வெயிட்டிங்’ என்று கூறி ஹைப் கொடுத்தார்.

100 சதவீதம் திருப்தியாக ’கத்தி’ படம் வந்திருக்கிறது.  ஒரு இடத்துல ஷூட்டிங். ஒரு இடத்துல எடிட்டிங். இன்னொரு இடத்துல டப்பிங்.. இன்னொரு இடத்துல ரீரிக்கார்டிங்.. இன்னொரு இடத்துல சிஜின்னு இந்தப் படம் சம்பந்தமா சென்னைல முக்கியமான எல்லா இடத்துலேயும் ஏதாவது ஒரு வேலை நடந்துக்கிட்டேதான் இருந்துச்சு. அவ்ளோ பரபரப்பா இருந்தோம்..

அந்த நேரத்துலதான் திடீர்ன்னு நான்கு நாட்களுக்கு முன்னால் மயங்கிவிழுந்துட்டேன். என்னை ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. டாக்டர்கள் வந்து மயக்கத்தில் இருந்த என்னை எழுப்பி பக்கத்துல நின்னுக்கிட்டிருந்தவரை காட்டி ‘இவர் யாருன்னு தெரியுதா?’ன்னு கேட்டாங்க.. அங்க நின்னுக்கிட்டிருந்த விஜய் ஸார்.. அதுக்கு நான், ‘இவரை தெரியலைன்னு நான் சொன்னா.. என் மகனே என்னை அடிப்பான் ஸார்’ன்னு சொன்னேன். அந்த அளவுக்கு குழந்தைகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று அத்தனை பேரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் விஜய்.

இந்தப் படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன்னு இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். நான் விஜயிடம் ‘துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?’ன்னு கேட்டேன். அதற்கு ‘கதிரேசனை பிடிக்கும்’ என்றார் விஜய். எனக்கும் கதிரேசனைத்தான் பிடிக்கும். அதேபோல் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

நான் அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும்போது டெய்லி 500 ரூபா சம்பளம் வாங்கினேன். அப்புறம் இயக்குநரான ஆன பின்னாடி முதல் படத்துக்கு 10000 ரூபா வாங்கினேன்.. இரண்டாவது படத்துக்கு 25000 ரூபா வாங்கினேன்.. இப்போ.. இந்தப் படத்துக்கும் நியாயமா எனக்கு என்ன கிடைக்கணுமோ அதைத்தான் வாங்கியிருக்கேன். தமிழில் நான் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் தெலுங்கு, இந்தியில் அதிகம்..

நான் பணத்துக்காக இந்தில படம் எடுக்க போகலை. சென்னைக்கு தொலைவில்.. ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் வடக்கே போய் பாலிவுட்டில் என்ன சாதிச்சிர முடியும்னு எல்லாரும் கேட்டாங்க. இதை உடைக்கத்தான் நான் பாலிவுட்டுக்கு போனேன். மற்றபடி நானும் விஜய்யும் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. நானும் ஒரு பச்சை தமிழன்தான். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கு.

இந்தப் படத்தில் என்னோடு முதல் நாளில் இருந்து கடைசிவரையிலும் உழைத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நான் நன்றி தெரிவிச்சுக்குறேன். ஏன்னா அவங்க இல்லாம நான் ஜெயிக்கவே முடியாது..” என்றார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்..

Our Score