full screen background image

கங்கை அமரன், ரஜினி பற்றி கஸ்தூரியிடம் என்னதான் சொன்னாராம்..?

கங்கை அமரன், ரஜினி பற்றி கஸ்தூரியிடம் என்னதான் சொன்னாராம்..?

“சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு எப்படி அனுமதி கிடைத்தது..?” என்று நடிகை கஸ்தூரி டிவீட்டரில் கேள்வியெழுப்பி ஒரு பதிவு போட திரையுலகமே அதிர்ச்சியானது.

தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நடிகரான ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்றுதான் மொத்த திரையுலகமும் எண்ணி வருகிறது. இந்த நேரத்தில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றதை திரையுலகத்தில் இருக்கும் ஒருவரே பிரச்சினையாக்குகிறாரே என்று கஸ்தூரி மீது திரையுலகத்தினர் பலரும் வருத்தமடைந்தனர்.

ரஜினியின் ரசிகர்களோ மிகவும் கோபமடைந்து கஸ்தூரியின் டிவீட்டர் பக்கத்தில் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை சொன்னார்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்…” என்று எழுதினார்.

சரி.. ரஜினியின் வீட்டில் இருந்து யாரோ பேசியிருப்பார்கள். கஸ்தூரி திருப்திப்படும் அளவுக்கு தங்களது தரப்பு நியாயத்தை அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர்.

அடுத்த சில மணி நேரத்தில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் அதே ட்வீட்டரில், ‛‛தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை. எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பதுதான் நிஜம்…” என்று பதிவிட்டார்.

இதையடுத்து பெரும் குழப்பத்திற்குள்ளான ரஜினி ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்தப் பிரச்சினையில் என்னதான் நடந்தது என்பது தெரியாமல் முழித்தனர்.

இதற்குப் பதிலளித்த கஸ்தூரி, “ரஜினியின் வீட்டில் இருந்து பேசினார்கள் என்று நான் குறிப்பிடவே இல்லை. எனக்கு நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் எனக்குத் திருப்தியளித்ததாகத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி. இந்த ஒரு ட்வீட்டே பல விஷயங்களை மறுக்கிறது..” என்று மறுபடியும் அந்த அமெரிக்க பிரச்சினை அப்படியே நீடிப்பது போலவே பதிவிட்டிருந்தார் கஸ்தூரி.

இதையடுத்து மீண்டும் ரஜினி ரசிகர்கள் ட்வீட்டரில் கஸ்தூரியிடம் காரசாரமாக வாதாடத் துவங்கினார்கள்.

சில மணி நேரங்கள் கழித்து கஸ்தூரி மீண்டும் தனது டிவீட்டர் பக்கத்தில் ‛‛நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவி‌ல்லை. என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன். இடம் பொருள் கருதி பெயரை சொல்லாமல் பொது பதிவிட்டது பொய் என திரிந்தது மேலதிக வருத்தம். தவறு புரிதலில். கேள்வியில் அல்ல..” என்று யாருக்குமே புரியாத மொழியில் எழுதியிருக்கிறார்.

கஸ்தூரியிடம் கங்கை அமரன் சொன்னது என்ன..? ரஜினி அமெரிக்கா சென்ற விஷயத்தில் கங்கை அமரனின் பங்களிப்பு என்ன என்பதெல்லாம் தெரியாமல் மீண்டும் ஒரு குழப்பத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது இந்தப் பிரச்சினை..!

Our Score