‘கன்னி ராசி’யால் விமல் படும்பாடுதான் படத்தின் கதை..!

‘கன்னி ராசி’யால் விமல் படும்பாடுதான் படத்தின் கதை..!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ஷமீம் இப்ராகிம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார். மேலும் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக் களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். 

இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், "படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். 

இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்..." என்றார்.