full screen background image

திரையுலகில் இருந்து ஓய்வு – கானா பாலாவின் திடீர் அறிவிப்பு

திரையுலகில் இருந்து ஓய்வு – கானா பாலாவின் திடீர் அறிவிப்பு

‘மஞ்சள்’ படம் பற்றிப் பேசுவதற்காக வந்தமர்ந்த பாடகர் கானா பாலா, திடுக்கென்று தான் திரையுலகை விட்டு கொஞ்சம்,கொஞ்சமாக விலகப் போவதாக தெரிவித்தது அதிர்ச்சியளித்த்து.

‘அட்டக்கத்தி’க்கு முன்பாக ஒரு திரைப்படத்தில் கானாபாலா பாடியிருந்தாலும் ‘அட்டக்கத்தி’தான் அவரை தமிழகம் முழுவதிலும் பிரபலமாக்கியது. அதன் பின்பு சின்ன பட்ஜெட், மீடியம் பட்ஜெட் படங்களில் டாஸ்மாக்கும், கானா பாலாவும் கன்பார்ம் என்று சொல்லும் அளவுக்கு அடித்து ஆடியிருந்தார்கள்.

அவருடைய குரல் இதுவரையில் கேட்டிராத ஒரு புதுமையான ஈர்ப்பானவகையில் இருந்த்தாலும், டாஸ்மாக் பாடல்களுக்கு கிக் ஏற்றுவதுபோல த்த்துவ முத்துக்களை தானே எழுதி பாடியதாலும் குக்கிராமத்தில்கூட கானா பாலாவுக்கென்றே சில ரசிக குஞ்சுகள் உருவாகிவிட்டார்கள்.

இந்த நேரத்தில் இப்படி திடுக்கென்று இந்த முடிவையெடுக்க என்ன காரணமாம்..?

மஞ்சள் படம் பற்றியும், அந்தப் படத்தில் தான் பாடியிருக்கும் ஒரு தலைக் காதல் பற்றிய பாடலையும் விவரித்துவிட்டுத்தான் தன்னுடைய ரிட்டையர்ட்மெண்ட் செய்திக்கு வந்தார் கானா பாலா.

“நான் இதுவரைக்கும் 75 படங்களில் நடித்திருக்கிறேன். 300-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறேன். இதில் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருக்கிறேன்.

நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதே இல்லை. வந்த வாய்ப்புகளைத்தான் பக்குவமாக பயன்படுத்திக் கொண்டேன். அப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக மேலே வந்தேன். கொடுப்பதை கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். டிமாண்ட் செய்து யார்கிட்டேயும் எதையும் வாங்கியதில்லை.

இப்பவும் பக்கத்திலேயே அம்மா, அக்கா குடும்பத்தினருடன்தான் இருக்கிறேன். எந்தக் கெட்டப் பழக்கமும் என்கிட்ட இல்லை. சினிமா நிகழ்ச்சிகளைத் தவிர வேற எங்கேயுமே நீங்க என்னை பார்த்திருக்கவே முடியாது. ஹோட்டல்களுக்கு சினிமா பங்ஷன்களுக்காக மட்டுமே உள்ளாற நுழைஞ்சிருக்கேன்.

சினிமால நான் பாடின பாடல்கள்ல பெண்களை மட்டம் தட்டியோ, காதலர்களை வாழ வைக்குற மாதிரியோ.. காதலுக்கு ஜே போடுற மாதிரியோ நான் பாடலை. காதலும் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் போய் உன் பொழைப்பையும் பாருப்பான்ற மாதிரிதான் பாடல்களை பாடியிருக்கேன்.

இப்போ சமீப காலமா ஒரு எண்ணம் எனக்குள்ள.. போதுமே.. இவ்ளோ பாடினதும், ஆடினதும் போதும்ன்னு மனசு சொல்லுச்சு. அதான் கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம்னு நினைச்சிருக்கேன். நான் ஒதுங்குறதால கானாவே காணாம போயிராது.. எனக்குப் பின்னாடி பாடுறதுக்கு நிறைய கானா பாடகர்கள் இருக்காங்க. அவங்கள்லாம் வருவாங்க. அவங்களுக்கு ஒரு வகைல வாய்ப்பு கிடைக்கணும்னுதான் நானே விலகிக்கலாம்னு நினைக்கிறேன்.

நானே சில பாடகர்களை சில இசையமைப்பாளர்கள்கிட்ட கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தி வைச்சு இவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டிருக்கேன். சொல்லியிருக்கேன். அவங்க அதை பயன்படுத்தி மேல வந்தாங்கன்னா எனக்கும் சந்தோஷம்தான்..

நான் விலகுறேன்னு சொன்னதால முற்றிலும் ஒதுங்கி போறதா இல்லை. என்னை மட்டுமே.. நான்தான் இதை பாடணும்.. இதுல நடிக்கணும்னு தேடி வர்ற வாய்ப்புகளை மட்டும் விட மாட்டேன். நிச்சயமா அதுல நடிப்பேன். ஆடுவேன். பாடுவேன்..

நான் வருஷா வருஷம் வேளாங்கண்ணிக்கு நடந்து போவேன். அந்த மாதாவை பத்தி ஆல்பம் ஒண்ணு இப்போ போடப் போறேன். ஏற்கெனவே மாதாவை பற்றி நிறைய ஆல்பங்களை வெளியிட்டிருக்கேன். கர்த்தர் மகிமைகள்ன்னு ஒரு ஆல்பம் போட்டிருக்கேன். இது மாதிரியான விஷயங்கள்லேயும் அதிகமா கவனம் செலுத்தப் போறேன்..!” என்று நான் ஸ்டாப்பாக பேசி முடித்தார் கானா பாலா.

கடைசியாக “அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித்துதா்ன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். அதில் நீங்கள் இருக்கிறீர்களா…?” என்று கேட்டதற்கு, “அது என்னன்னு தெரியலை ஸார்.. ரஞ்சித் ஸாரின் வீட்டுக்கெல்லாம் போறேன். வர்றேன்.. பேசுவேன்.. ஆனா இது பத்தி நான் எதுவும் கேட்டதில்லை. அவரும் சொன்னதில்லை. கேட்டா நாகரிகமில்லை பாருங்க. அதுனால நான் இதுவரைக்கும் கேக்கலை. வாய்ப்பு வந்தால் நிச்சயம் விடமாட்டேன்..” என்றார் உறுதியாக.

எது எப்படியிருந்தாலும், சினிமாவை நீங்க விட்டாலும் அது உங்களை விடாதுங்கோ கானா பாலா ஸார்..! உங்க வாய்ஸ்ல வேற ஆள் இருந்தா நீங்களே அவரை இங்க கோர்த்துவிட்டுட்டு கிளம்பிப் பாருங்க.. அப்போ தெரியும்..? முடியுமா? முடியாதான்னு..!?

Our Score