இளைய தளபதி விஜய் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் ‘கூகுள் கூகுள்’ என்ற பாடலை பாடினார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, தான் நடித்த அடுத்தடுத்த படங்களான ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் தொடர்ந்து தனது சொந்த குரலில் பாடினார்.
‘கூகுள் கூகுள்’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’, ‘கண்டாங்கி கண்டாங்கி’, ‘செல்ஃபி புள்ள’ ஆகிய நான்கு மாபெரும் ஹிட் பாடல்களை தொடர்ந்து தற்போது தன்னுடைய நடிப்பில் மிக பிரமாண்டமான செலவில் உருவாகி மிகப் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் ‘புலி’ திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், திரையில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் சுருதிஹாசனே விஜய்யுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளதுதான்.
சமீபத்தில் இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீதேவி பிரசாத் உடன் இருக்க சுருதிஹாசன் இந்தப் பாடலை பாடியது பதிவு செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக ‘மூன்றாம் பிறை’ படத்தில் கமலும், ஸ்ரீதேவியும் இதேபோல தாங்கள் நடித்த பாடலை தாங்களே பாடியிருந்தார்கள். அதன் பின்பு இப்போதுதான் இந்த ஹீரோ, ஹீரோயினே பாடல்களை பாடிய சம்பவம் நடந்திருப்பதாக திரையுலகத்தினர் கூறுகிறார்கள்.
ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது திரை உலகத்தினர் மத்தியிலும் இந்தப் பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.