“கேக் வெட்டுவதைவிட குப்பையை வெட்டுவதை பெருமையாக கருதுகிறேன்” – கமல்ஹாசன் பேச்சு..!

“கேக் வெட்டுவதைவிட குப்பையை வெட்டுவதை பெருமையாக கருதுகிறேன்” – கமல்ஹாசன் பேச்சு..!

இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் ‘தூய்மையான இந்தியா-2014’ என்ற திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி வைத்தார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நேற்று தனது நற்பணி இயக்கத்தினருடன், சென்னை மாடம்பாக்கம் ஏரியில் இருந்து ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த விழா தாம்பரம்- வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு மாடம்பாக்கம் ஏரி அருகில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு கருப்பு ஆடை அணிந்து நடிகர் கமல்ஹாசன் விழா மேடைக்கு வந்தார். பின்னர், ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை அவர் தொடங்கி வைத்து பேசினார்.

கமல்ஹாசன் பேசும்போது, “வழக்கமாக எல்லாரும் பிறந்த நாள் விழாக்களை ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சி அடைவதைவிட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தை உண்மையிலேயே இந்த மண்ணில் விதைப்பவர்கள் நீங்கள்தான். அதற்காக நான் என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.  இது ஒவ்வொரு இந்தியனின் கடமையும்கூட. எனவே இந்த திட்டத்தில் மத, இன, மொழி என எந்த பேதமும் இன்றி செயல்படுங்கள். நமக்குள் எப்போதும் பாகுபாடு இருக்கக் கூடாது, பார்க்கக் கூடாது. நேசம் ஒன்று மட்டும்தான் நம்மிடையே இருக்க வேண்டும்.

இது போன்று நாம் அனைவரும் இந்தியாவை சுத்தப்படுத்த முனைப்பாக ஈடுபட வேண்டும். அப்படி செய்தால், எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாக மட்டுமின்றி, நல்லரசாகவும் மாறும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு, உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.

என்றைக்கும் தனிமரம் தோப்பாகாது. எனவே நாம் அனைவரும் இந்த திட்டத்தில் செயல்பட வேண்டும், நாம் வாழும் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது பிறந்த நாளில் எனக்கு மலர் மாலை, சால்வை அணிவிப்பது, பரிசு கொடுப்பதைவிட, நல்ல புத்தகங்கள், மருந்துகள் கொடுங்கள்.

இல்லையென்றால், இந்த ஏரிப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான கருவிகளை கொடுங்கள். ஏனெனில், உங்கள் அன்பு எனக்கும், நாட்டுக்கும் பிரயோஜனமாக இருக்கட்டும். பல இடங்களில் நான் இருமல் மருந்துகளைகூட பரிசாக வாங்கியிருக்கிறேன்.

இந்த திட்டத்தில் சேரும்படி எனக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து விட்டார் என்பதற்காக மட்டுமல்ல, இந்திய குடிமகனான எனக்கும் இதில் கடமையாற்றும் பங்கு இருக்கிறது என்பதற்காகத்தான் இதில் நான் ஈடுபட்டுள்ளேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே, எனது ரசிகர் நற்பணி இயக்கத்தினர் ரத்த தானம், கண் தானம் என்று  நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்..” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் ஆர்.தங்கவேல் தலைமையில் கமல் ரசிகர்கள் மாடம்பாக்கம் ஏரியை நேற்று சுத்தம் செய்தனர்.

அவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என ஏராளமானோர் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மாடம்பாக்கம் ஏரி புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

Our Score