full screen background image

“ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் நான் திரையுலகத்தில் இருந்து விலகி விடுவேன்…” – மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை..!

“ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் நான் திரையுலகத்தில் இருந்து விலகி விடுவேன்…” – மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை..!

வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் சினிமா துறைக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் கமல் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “இப்போது மத்திய அரசு புதிதாக விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் நமது திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும். கேளிக்கை பிரிவில் சூதாட்டத்துடன் நமது சினிமா துறையையும் சேர்த்திருக்கிறார்கள். இதைவிட பெரிய முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமான கலைஞர்களும், தொழிலாளர்களும் உள்ளனர். இதேபோல் சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில மொழிப் படங்களுக்கு விதிக்கக் கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதும் ஏற்கக் கூடியதல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின் தங்கிவிடும். பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம்.

எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அளவிலான ஜி.எஸ்.டி. வரியை இந்தி திரையுலகம், ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த வரியை குறைக்காவிட்டால் நான் இந்த சினிமாவை விட்டு விலக வேண்டி வரும்…” என்றார் உறுதியாக.

Our Score