கடந்தாண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘வஜ்ரம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இந்த நிலையில், இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று சுவாதியின் தந்தையான சந்தான கோபாலகிருஷ்ணன் கடந்த மே 31-ம் தேதியன்று சென்னையில் டி.ஜி.பி.யிடம் புகார் மனுவை அளித்தார்.
இது தொடர்பாக படத்தின் இயக்குநரான எஸ்.டி.ரமேஷ் செல்வன் நேற்று பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அவர் பேசும்போது, “இந்த ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் சுவாதியின் கதாபாத்திரத்தை நாங்கள் தவறாக சித்தரிக்கவில்லை. இப்படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளேன்.
சுவாதி கொலை நடந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்வரை அதன் தீவிரம் தமிழகத்தில் யாருக்கும் புரியவே இல்லை. ஆனால், அடுத்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு அதுதான் தமிழகத்தின் சென்சேஷனல் பிரச்னையாக இருந்தது. அப்படியிருந்தும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சி.சி. டிவி கேமராவை சமீபத்தில்தான் பொருத்தினார்கள்.
இப்படி ஒரு கொலைக்குப் பின்னரும் நம் சமூகத்தில் எந்தளவுக்கு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது என்பதுதான் என் படம் எழுப்பும் கேள்வியாக இருக்கும். மற்றபடி, நான் பெயர் சம்பாதிக்கவோ, பணம் சம்பாதிக்கவோ இந்தப் படத்தை உருவாக்கவில்லை.
இந்தப் படம் இனியொரு சுவாதி கொல்லப்படக் கூடாது; அதேபோல் இனியொரு ராம்குமாரும் சாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை.
சுவாதி கொலையில் பொதுமக்களுக்கு இன்னமும் சில கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குள் நாங்கள் செல்லவில்லை. ஆணவக் கொலை, ஜாதி பிரச்னை போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை. நடந்ததை நடந்தபடியே காட்டி, நாங்களும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
இந்தப் படம் சம்பந்தமாக சுவாதியின் பெற்றோரிடம் நான் இதுவரை எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவர்களிடமிருந்து ஆட்சேபணை எழுந்தால், படம் எடுத்ததற்கான காரணத்தை விளக்கி, திரைப்படத்தை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய பிறகுதான் சென்சாருக்கே அனுப்புவேன்.
அவர்கள் எந்தக் காட்சியை நீக்கச் சொன்னாலும், அதை கண்டிப்பாகச் செய்வேன். ஆனால், அதற்கு முன், படத்தின் தேவை மற்றும் திரைக்கதை குறித்து முடிந்த அளவுக்கு அவர்களுக்குப் புரிய வைப்பேன்..!
அதேபோல் காவல்துறையினருக்கும் திரையிட்டுக் காட்டுவோம். அவர்கள் அனுமதியளித்த பின்புதான் படத்தை வெளியிடுவோம். படம் வெளியாகி லாபம் சம்பாதித்தால் அதிலிருந்து சுவாதி, ராம்குமார் குடும்பத்திற்கு எங்களாலான உதவிகளைச் செய்வோம்…” என்றார்.