full screen background image

“தேசிய விருதுகளைத் திருப்பியனுப்ப மாட்டேன்…” – கமல்ஹாசன் பேட்டி..!

“தேசிய விருதுகளைத் திருப்பியனுப்ப மாட்டேன்…” – கமல்ஹாசன் பேட்டி..!

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்த பிறகு மதச்சார்பின்மைமிக்க எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

இதனைக் கண்டித்து சாகத்ய அகாடமி, மற்றும் மத்திய அரசின் பத்ம விருது பெற்றவர்கள், சிறந்த கலைஞர்களுக்கான தேசிய விருதினைப் பெற்ற சில நாடக, சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாங்கள் வாங்கிய விருதினை மத்திய அரசுக்கே திருப்பி அளித்து தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு எழுத்தாளர்களிடையே கடும் மனக்கசப்பு உண்டாகி வழக்கம்போல இரு பிரிவாக பிரிந்துவிட்டனர். ஒரு சாரார் விருதினைத் திருப்பிக் கொடுப்பதுதான் சரி என்றும், இன்னொரு பிரிவினர் இது இந்திய அரசு நமக்குக் கொடுத்தது. இதனைத் திருப்பிக் கொடுப்பதென்பது முட்டாள்தனம். அதே நேரம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகளை நாங்களும் கண்டிக்கிறோம். இப்போதைய சகிப்புத்தன்மையற்ற மத்திய அரசினை எதிர்கொள்ள நாம் வேறு வழிகளைக் கையாளலாம் என்றும் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களும், தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு இது பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று ‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பிரமோஷனுக்காக ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம் இந்த விருதினை திருப்பி வழங்கும் எதிர்ப்புணர்வு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

kamal-madhushalini

அப்போது, “நீங்கள் வாங்கியிருக்கும் தேசிய விருதுகளை திருப்பி அனுப்புவீர்களா..?” என்று கமல்ஹாசனிடம் கேட்டதற்கு, “சகிப்புத் தன்மை இல்லாமை 1947–ல் இருந்தே இருக்கிறது. அதனால்தான் இந்தியா–பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, வர்த்தகம் உள்பட அனைத்து துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இருக்கலாம்.

அப்போது வேண்டுமானால் இது நாட்டை பிரித்திருக்கலாம், அது மீண்டும் நாட்டை பிரிக்காது. சகிப்புத் தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேவை.

நான் சகிப்பின்மைக்கு எதிரானவன். பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் அனைத்து மதங்களையும் சகித்துக் கொள்கிறேன். கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன், அவ்வளவுதான். அது என் உரிமை.

விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது கொடுத்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. கவனத்தை திருப்பலாம், கவனத்தை ஈர்க்க இதைவிட பல வழிகள் உள்ளன.

அவர்கள் மிகவும் திறமையானவர்கள். விருதுகளை திருப்பி கொடுப்பதைவிட, அவர்கள் ஒரு கட்டுரை எழுதுவதன் மூலம் அதிகமாக கவனத்தை ஈர்க்க முடியும். விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளச் செய்கையே அது. அவர்களது இந்த செயலை நான் காயப்படுத்த மாட்டேன்.

நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன், இந்த விஷயத்தில் பணத்தையும்கூட. நான் விருதுகளை திருப்பி அளிக்கலாம். ஆனால் என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாமல் போகலாம். நான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் பணம் நிறைய இருந்தாலும் நான் அதனை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

படைப்புபூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. படைப்பு, மனம் இவைகள் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

நான் குல்சார் போன்ற கவிஞர்களிடம் இருந்து அகத்தூண்டுதல் பெறுகிறேன். அவரைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம் அவரது கவிதைகளே என் நினைவுக்கு வரும். நான் அவரை சீக்கியர் என்றோ அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறியவர் என்றோ கருதுவதில்லை. இதேபோல்தான் கே.பாலச்சந்தர் பற்றியும் நான் கூறமுடியும். அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை.

இங்கு இப்போது நடப்பது எல்லாமே அரசியல்தான். காந்தி, நேரு போன்ற விவேகமான அரசியல் தலைவர்கள் இப்போதும்கூட இருக்கிறார்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். நாட்டுக்கு எந்த கட்சி நன்மை செய்கிறதோ, அந்த கட்சிக்கு நான் பயனுள்ளவனாக இருப்பேன், அப்படித்தான் நான் ஓட்டு போடுகிறேன்.

‘ஹே ராம்’, ‘விஸ்வரூபம்’ படங்கள் வெளியாகும்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லை. காங்கிரசோ, பா.ஜனதாவோ அல்லது வேறு எந்த கட்சியோ, அமைப்பாகவோ இருந்தாலும் அனைவரும் சம அளவில் சகிப்புத்தன்மையில்லாமல் தான் இருக்கின்றன. ஆனால் அனைவரும் நான் சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், எனது படங்களில் காட்சியை கத்தரிக்கவும் எதிர்பார்க்கின்றனர். எனது படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் வேறு வகையான பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களை நான் தனியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.

மோடியின் ஆதரவாளர்களுக்கு இது நிச்சயம் ஆறுதலான ஆதரவுதான்….!

Our Score