வெப்படை ஜி.செல்வராஜின் தமிழ்க்கொடி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள்ள ‘காதல் காலம்’ படத்தின் டிரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
அப்போது ‘காதல் காலம்’ படக் குழுவினரைப் பாராட்டி கமல்ஹாசன் பேசும்போது, “காதல் காலம்’ தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. காதல் என்பது அனைத்து காலங்களிலும் அனைவராலும் உணரக் கூடியது. அதுவும் இந்த ‘காதல் காலம்’ மிகவும் இளமையாகவும் அழகாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் அனைவரும் ஒரு கூட்டாக இணைந்து அற்புதமாக உருவாக்கியுள்ளார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இந்த டிரெய்லர் மிகவும் நம்பிக்கையை தருகிறது. ‘காதல் காலம்’ நிச்சயம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என்றார்.
புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘காதல் காலம்’ திரைப்படம் முற்றிலும் காதல், நகைச்சுவை கலந்த கிராமத்து கதையாக மிகவும் யதார்த்தமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா திரைக்கதை சிற்பி கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சந்துரு கதாநாயகனாகவும் நித்யா ஷெட்டி, சார்விசெக்குரி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் மதுமிதா, ஜார்ஜ், அசோக் பாண்டியன் இயக்குநர்கள் புவி.என்.அரவிந்த், ரஃபி ஆகியோரும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பி.ஆர்.ஓ. சரவணனின் மகன் அஸ்வத் அறிமுகமாகியுள்ளார்.
ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, படத் தொகுப்பை சண்முகம்வேலுச்சாமி செய்திருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெயானந்தன். இப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, நா.முத்துகுமார், பா.விஜய், சினேகன், இலக்கியன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு நிர்வாகம் ஆர்.ஜி.மாரியப்பன்ராஜா, மக்கள் தொடர்பு என்.சரவணன்.