“திரும்பவும் ஸ்கூலுக்குப் படிக்க வந்ததுபோல் இருந்தது” – ‘விக்ரம்’ ஷூட்டிங் பற்றி கமல்ஹாசன்

“திரும்பவும் ஸ்கூலுக்குப் படிக்க வந்ததுபோல் இருந்தது” – ‘விக்ரம்’ ஷூட்டிங் பற்றி கமல்ஹாசன்

கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து நேற்றைக்குத்தான் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அவரது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் நேற்றைக்குக் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து கமல்ஹாசன் தனது டிவீட்டர் பக்கத்தில் இன்றைக்கு எழுதியிருக்கிறார்.

அதில், “இன்று விக்ரம் முதல் நாள். உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் இணைந்ததைப் போல உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் நான் திரைப்பட படப்பிடிப்பிலிருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுவாகும். பல திரைப்பட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தங்களது பணியைச் செய்ய முடியவில்லை.

எனது சக தோழர்கள் அனைவரையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வரவேற்கிறேன். குறிப்பாக திரு.லோகேஷ் கனகராஜ், அவரது உற்சாகமான குழுவினர் மற்றும் எனது திறமையான சகோதரர்களான திரு. விஜய் சேதுபதி மற்றும் திரு. ஃபஹத் பாசிலையும் வரவேற்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அதே டவீட்டரிலேயே பதில் அளித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “உங்களுக்கும், உங்களது முழு நட்சத்திர அணிக்கும் எனது வாழ்த்துக்கள் ஸார். இத்திரைப்படம் உங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய விருந்தாக இருக்கும்! என்னால் இதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புரிதல் இந்தப் படம் முடியும்வரையிலும் இருவருக்கும் இருக்க வேண்டுமென நாம் வேண்டிக் கொள்வோம்.

Our Score