full screen background image

“நான் தமிழ்ப் பொறுக்கிதான்…” – ஒளிப்பதிவாளர்கள் சங்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

“நான் தமிழ்ப் பொறுக்கிதான்…” – ஒளிப்பதிவாளர்கள் சங்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(South India Cinematographers Association) சார்பில் அதன் தமிழ் இணையதளத்தின் திறப்பு விழா நேற்று காலை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைபெற்றது.

unnamed (19)

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து இணையதளத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், பொதுச் செயலாளர் பி.கண்ணன், ராஜிவ்மேனன், பாரதிராஜா, கமல்ஹாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசு தொகுத்து வழங்கினார். 

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு http://www.thesica.in/ என்ற முகவரியில் ஆங்கில இணையதளம் ஏற்கனவே உள்ளது. இன்றைக்கு, அந்தத் தளத்தின் ஒரு பகுதியாக தமிழிலும் http://thesica.in/tamil/ என்ற முகவரியில் தமிழில் இணையம் தொடங்கப்பட்டது.

unnamed (14) 

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “குழந்தை பருவத்தில் இருந்தே நான் சினிமாவைப் பார்த்து வருகிறேன். நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.

சினிமாவில் தொழில் நுட்பக் கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் திடீரென்று நடிகனாகிவிட்டேன். நான் என்ஜீனியராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் எனக்கு இப்போதும் மகிழ்ச்சிதான். கலெக்டராகி இருந்தால் இந்நேரம் அலங்காநல்லூரில் மக்களிடம் கெஞ்சிக் கொண்டுதான் இருந்திருப்பேன்.

unnamed (18)

அப்போதெல்லாம் நடிகர்களைவிடவும் தொழில் நுட்பக் கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். உலகத் தரத்தை மிஞ்சும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாரும் நம்மிடையே இருக்கிறார்கள.

சினிமாவில் எல்லாவிதமான கலைகளும் மிக முக்கியமானது.  ‘விருமாண்டி’யில் வரும் மீசை எல்லாம் நானே வைத்துக் கொண்டது. கொஞ்சம் நாவிதமும் தெரியும் என்பதால். ஒளிப்பதிவும் அதுபோலத்தான். வைரமுத்து பேசும்போது தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றார். நிச்சயம் இருக்கிறது. 

unnamed (5)

’நிலாவத்தான் கையில பிடிச்சேன்’ என்று நீங்கள் எழுதவில்லை என்றால் காமிராவின் கைகளை நிலாவோடு காட்டியிருக்குமா..? மழைக்காட்சி என்றுதான் ‘ராஜபார்வை’யில் நாங்கள் சொன்னோம். அதை ‘அந்திமழை’யாக்கியது உங்கள் பேனாதானே..? அதற்கு டோன் கொடுத்தது அந்த வார்த்தைதானே. காலை மழையாக இருந்தால் கூலர் டோன் ஆகிருக்கும்.  

நானும் பாரதிராஜாவும் ‘16  வயதினிலே’ எடுக்கும்போது Ryan’s Daughter படம் பற்றியெல்லாம் நெனைச்சுகிட்டு இருப்போம். அப்போது அந்த அளவுக்கு பணம் போட்டு எடுக்க வசதி கெடையாது. நானும் தயாரிப்பாளர்ங்கறதால ஜாக்கிரதையா பேசறேன்.. உங்களுக்கு ‘கொஞ்சம்’ பட்ஜெட்டை கூட்டிக் கொடுத்தா, உலகத் தரம் என்னான்னு இங்கயே காட்டிடுவீங்க. எல்லா வல்லமையும் இங்கே இருப்பது எனக்குத் தெரியும். நான் இங்கே பெற்றுக் கொண்ட விஷயங்களை அப்படியே சொன்னால்கூட பாடமாக இருக்கும் அளவுக்கு பெரிய, பெரிய குருமார்களுடன் நான் பழக நேர்ந்திருக்கிறது.

unnamed (7)

வின்செண்ட் மாஸ்டர் பத்தி அவர் மகன் ஜெயனன்கிட்ட பேசிகிட்டிருந்தேன். ஷுட்டிங் டைம்ல, கை ஜாடைல எதோ காட்டுவார். ஜெயனன் ஓடுவார். என்ன மாஸ்டர்னா.. ‘ரிம்… ரிம்’னு ஓடுவார். ஒரு சந்தேகம் கேட்டா, ‘அப்பறம் சொல்றேன்’னு அவர் வாயில இருந்து வராது. வேலைய விட்டுட்டு வந்து ‘அந்த ரிம் லைட்ங்கறது எப்டின்னான்னு விளக்க ஆரம்பிச்சிடுவார் வின்செண்ட் மாஸ்டர். வரைஞ்செல்லாம் காட்டுவார். அந்த மாதிரி இடத்துல நிற்க எனக்கு வாய்த்திருந்தது.   

Marcus Bartleyதான் ‘செம்மீன்’ படத்துக்கு ஒளிப்பதிவு. அவர்கிட்ட ‘செம்மீன்’ நைட் ஷூட்டிங் பத்தி பேசிட்டிருக்கறப்போ, ‘நாளைக்கு நைட் சீன் எடுக்கப் போறோம். வர்றீங்களா?’ன்னு கேட்டார். வேற எங்க இருந்தோ அதப் பார்க்கப் போனேன். எனக்கு காட்சிகள் இல்லைன்னாலும். மதியம் 12 மணிக்கு எடுத்தார் நைட் சீனை. கொஞ்சம் கேமராவை இந்தப் பக்கம் திருப்பினா பகல் தெரிஞ்சுடும். அந்தக் கேமராவை அப்படியே நெளிச்சு.. நெளிச்சு அவர் கொண்டு போன விதம், இன்னைக்கும் எனக்கு பாடமாக இருக்கிறது.

actor kamalhasan

இப்பவும் நான் சில யோசனைகள் சொன்னேன்னா,  ’உங்களுக்கு எப்படித் தெரியும்’பாங்க.  Marcus Bartley பெயரைச் சொல்லாமல் விட்டால், நான் திருடன். அதுனால ஒவ்வொரு முறையும் சொல்லுவேன்.

அதே போலத்தான். பி.எஸ்.லோகநாத் அவர்கள். சாயங்காலம் நாங்க உட்காந்து பேசிட்டிருப்போம். ‘இன்னைக்கு என்ன சார் ஷாட்’னு கேட்டா போதும். கேமராவைக் கொண்டான்னுடுவார். ‘ஏன் சார் டைட்டில் ஆடிச்சு’ன்னு ஒரு கேள்வி வந்தா போதும், கேமராவைப் பிரிச்சு ரெண்டு ‘க்ளா’ இருக்கற கேமராலதான் எடுக்கணும்பா. இதுல ஒண்ணுதான் இருக்கு’ம்பார். டைரக்டர்கிட்ட சொல்லும்பார். பாலசந்தர் சார்கிட்ட சொன்னா ‘அப்டியா.. சொல்லிருக்கலாமே’ம்பார். ‘மன்மதலீலை’ல பார்த்தீங்கன்னா டைட்டில் அவ்ளோ ஸ்டடியா இருக்கும். 

இவற்றையெல்லாம் நான் கற்றுக் கொண்டது ஒளிப்பதிவாளர்கள்கிட்டதான். அதுனாலதான் இந்த இணையம் ஒளிப்பதிவாளர்களுக்கு மிக, மிக முக்கியமானதென்பேன். நான் புரியாமல் கேட்டவற்றில் இருந்தே அத்தனை கற்றுக் கொண்டிருக்கிறேன் எனும்போது புரிந்து கொண்டவர்கள் எழுதினால் எத்தனை உபயோகமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

unnamed (20)

நான் Babubhai Mistry அவர்கள் டிரிக் ஷாட் பண்றப்ப கிட்ட இருந்து பார்த்திருக்கேன். ஜி.கே. ராமு சார், ப்ரசாத் சார்.. இவங்கள்லாம் பண்ணும்போது வியப்பா இருக்கும். கோவத்துல கைய எல்லாம் கிழிச்சுட்டு பண்ணுவாங்க. அதுனாலதான் ‘அபூர்வ சகோதரர்கள்’ மாதிரி படம்லாம் பண்ற துணிச்சல் எனக்கு வந்தது. நானெல்லாம் சும்மா. சிங்கிதம் சீனிவாசராவ் கத்துகிட்டது மாயாபஜார்ல. அதுல அசிஸ்டெண்ட் டைரக்டர் அவர். 

இந்தக் களஞ்சியத்துல இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியது நெறைய இருக்கு. இப்போ யாரோ தமிழ்ப் பொறுக்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன். என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்.

இன்றைக்கு  வெப்சைட்டின் பலத்தையும், இணைய உலகின் பலத்தையும் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழில் இணையம் என்பது மிக முக்கியமானத் தேவை. அதை சரியான நேரத்தில் துவங்கியிருக்கிறார்கள்.  

நான் என்னைவிட வயது குறைந்தவர்களிடம்கூட பாடம் கற்றுக் கொண்டிருகிறேன். ‘ஐ.வி.சசி எப்படி ஷாட் வெச்சார்’னு பாலசந்தர் என்கிட்ட கேட்பார்.  நான் குழந்தைல இருந்து இந்த விளையாட்டைப் பார்த்துட்டிருக்கேன். எனக்கு நடிக்கணும்கறதவிட, டெக்னீஷியனாகறதுதான் ஆசை. அவங்களுக்கு ரொம்ப லேட்டாதான் போஸ்டர்லாம் வெச்சாங்க. பெரும் ஜீனியஸ்லாம் டெக்னீஷியன்ஸா இருக்காங்க.

ஒரு சமயம் அழுக்கு வேட்டி, சட்டையோட ஒருத்தர் கதை சொல்ல ஆஃபீஸ் வந்தார். அந்த உடையப் பார்த்து நான் முடிவு பண்ணிருந்தா, நான் இப்ப இங்க இருந்திருக்கவே முடியாது. அவர்தான் பாரதிராஜா. ‘பதினாறு வயதினிலே’ படத்தோட கதை சொல்ல வந்தார். கதையைச் சொல்லி முடிச்சப்பறம்தான் இவர் எவ்ளோ பெரிய ஜீனியஸ்னு உணர்ந்தேன்.

நான் கால்ஷீட் குடுக்காம ஓடிப் போய்டுவேனோனு பயந்துபோய் வெறும் கேமராவ எல்லாம் வைச்சு ஓட்டிட்டிருந்தார். அந்த மாதிரி படம் எடுக்கணும்கற உணர்வெல்லாம் உள்ள இருந்தாலும் வெளில தெரியாது. இந்த மாதிரியான ஒரு விழாவில், என்னையும் உங்களில் ஒருவனாக அழைத்து கலந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி..!” என்றார்.

Our Score