நன்னிலத்தில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது..!

நன்னிலத்தில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சிலை அவர் பிறந்த ஊரான நன்னிலத்தில் திறக்கப்படவுள்ளது. அந்தச் சிலையை கவிஞர் வைரமுத்து தன் சொந்த செலவில் நிறுவப் போவதாக நேற்று அறிவித்தார்.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தமிழ் இணையத்தளத்தின் திறப்பு விழா நேற்று ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து இணையத்தளத்தை துவக்கி வைத்தார்.

vairamuthu-bharathiraja-kamalhasan

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, "நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் முழு வண்ணம் பெறுகிறது.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் தேவிகா பாடும் ‘சொன்னது நீதானா’ பாடல் காட்சி அந்தச் சிறிய அறைக்குள் கேமிராவை வைத்து படமாக்கியது அந்தக் காலத்திலேயே மிகவும் பிரபலமானது. அந்த அளவுக்கு சிறந்த மேதைகள் இந்த்த் தமிழ்ச் சினிமாவில் இருந்திருக்கிறார்கள்.

பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ படத்தில் எழுதிய பாடலுக்காக முதல்முறையாக நான் தேசிய விருதினைப் பெற்றதை இப்போதும் என்னால் மறக்க முடியாது. முதல் காதலைப் போல அதுவும் மறக்க முடியாத தினம்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்த ஊர் என்கிற பெருமையைப் பெற்றது தஞ்சாவூரைச் சேர்ந்த நன்னிலம் என்னும் சின்ன கிராமம். அந்த ஊரில் கே.பி. பிறந்த வீடு இருக்கிறது. அந்த வீடு தற்போது பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

அந்தப் பள்ளியில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சிலையை நிறுவ நான் திட்டமிட்டுள்ளேன். அந்தச் சிலை திறப்பு விழாவுக்கு பாரதிராஜாவும், கமல்ஹாசனும் கண்டிப்பாக வர வேண்டும்.." என்று கோரிக்கை வைத்து முடித்தார்.