‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இதில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன், ஜக்குபாண்டி. மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் SY.கௌதமராஜ் இயக்கியுள்ளார். பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், டீம் எய்ம்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தெக்குப்பட்டி கிராமம். மேலத் தெரு, கீழத் தெரு என்ற பாகுபாட்டுடன் இப்போதும் இருக்கும் ஊர். இந்த ஊரின் கீழத் தெருவில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ‘பூமிநாதன்’ என்ற சந்தோஷ் பிரதாப்பும், மேலத் தெருவில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ‘மூர்க்கன்’ என்ற அருள்நிதியும் பள்ளிப் பருவத்திலிருந்தே உயிர் நண்பர்கள்.
இப்போது வளர்ந்து வாலிப வயதில் இருக்கும்போதும் அந்த நட்பைவிடாமல் தொடர்கிறார்கள். பூமிநாதனுக்கு ஏதாவது ஒன்றென்றால் உடனடியாக மூர்க்கன் களத்தில் இறங்கிவிடுவான். பூமிநாதன் மீது யாராவது கை வைத்தால் அது தனது சொந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் சரி புரட்டி எடுத்துவிடுவான் மூர்க்கன்.
இந்த நேரத்தில் மாநிலத்தின் எதிர்க்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக ‘முனியராஜ்’ என்ற ராஜசிம்மன் நியமிக்கப்படுகிறார். வரும் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்க நினைக்கும் ராஜசிம்மன், தெக்குப்பட்டி உட்பட அனைத்து கிராமங்களிலும் கட்சி விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடுகிறார்.
இந்தப் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை கீழத் தெருவில் ஓட்டப் போகும்போது தகராறு ஏற்படுகிறது. இதில் பூமிநாதனுக்கு ஆதரவாக மூர்க்கனும் களமிறங்கி கட்சிக்காரர்களை அடித்து, உதைத்து அனுப்புகிறான்.
தொடர்ந்து ஊருக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்கும்போது போஸ்டர்களையும், பேனர்களையும் கிழித்தும், அதன் மேல் சாணியடித்தும் வைத்திருக்க ராஜசிம்மனின் பதவி பறி போகிறது. மேலும் தங்களது ஊரில் கட்சிக் கூட்டம் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் மூலமாகத் தடையும் வாங்குகிறார் பூமி.
இதனால் கோபமாகும் ராஜசிம்மன் பூமி-மூர்க்கன் இருவருக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த காய் நகர்த்துகிறார். அதற்கேற்றாற்போல் திடீரென்று பூமி கொல்லப்பட அந்தப் பழி மூர்க்கன் மீது விழுகிறது.
இதனால் மூர்க்கனை தேடி போலீஸ் அலைகிறது. சுடவும் உத்தரவு வந்தாகிவிட்டது. இன்னொரு பக்கம் மூர்க்கனின் அப்பாவான ‘யார்’ கண்ணன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கட்சிப் பதவியை வாங்க நினைக்கிறார். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் கதை.
இதுவரையிலும் தொடர்ச்சியாக நகர்ப்புற இளைஞனாகவே பல படங்களில் நடித்திருக்கும் அருள்நிதி, இந்தப் படத்தில்தான் முதல்முறையாக முரட்டு முறுக்கு மீசையுடன் கிராமத்து இளைஞனாக வேடம் சூட்டியுள்ளார்.
‘மூர்க்கன்’ என்ற பெயருக்கேற்றவாறு மூர்க்கத்தனத்தோடு பாயும் புலியாய் சீறுகிறார். சண்டைக் காட்சிகளில் தெறிக்கவிடுகிறார். காதல் உணர்வை புரிந்து கொள்ளவே தெரியாத தத்தியாகவும், புரிந்து கொண்ட பின்னர் காதலில் கிரேடு வாங்கும் அளவுக்கு காதலையும் காட்டியிருக்கிறார்.
“ஒரு நிமிஷம் கண்ணைச் சிமிட்டாமல் என் கண்ணைப் பாரு…” என்ற நாயகியின் கேள்வி புரியாமல், ஊர்க்கார பொம்பளைங்களிடம் இதைச் செய்து பார்த்து புரியாமலேயே விழிக்கும் மூர்க்கனின் நடிப்பு மிக இயல்பாக அமைந்துவிட்டது.
தன்னைச் சுற்றி நடக்கும் குழப்பங்களையும், சதியையும் முதலில் புரிந்து கொள்ளாதவராக இருந்து, பின்னர் தாய் மாமன் முனீஷ்காந்தினால் வேப்பிலை அடிக்கப்பட்டு தெளிந்த பின்னர் தன் உயிரை பணயம் வைத்து எதிரிகளைத் தீர்த்துக் கட்டும் வெறியைக் காண்பித்திருக்கிறார் அருள்நிதி.
நாயகியான துஷாரா விஜயன் வாய்த் துடுக்கு மிகுந்த பெண்ணாகவும், அதே சமயம் நாயகனை பழி தீர்க்க நினைத்து காதலித்து, கல்யாணம் செய்து அதை நிகழ்த்திக் காட்ட விரும்பும் காதலியாகவும் செட்டாகியிருக்கிறார். அந்தக் குறும்புத்தனம், “வாடா”, “போடா” என்று ரகளையாக நாயகனை கலாய்ப்பது என்று அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தன்னை மட்டுமே கவனிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவிக்கு ரொம்பவும் முக்கியத்துவம் இல்லையென்றாலும் இருக்கின்ற காட்சிகளில் அந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாகவே கண்ணில் படுகிறார். பூமியின் இறப்புக் காட்சியில் ஓடி வந்து விழுந்து அழும் காட்சியில் கண் கலங்க வைத்திருக்கிறது இவரது நடிப்பு.
பூமிநாதனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தனது சாந்தமான கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சாயாதேவியை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்பதை வெளிப்படுத்தும் காட்சியில் நம்மைப் பெரிதும் கவர்கிறார்.
வில்லன் ராஜசிம்மன் வழக்கம்போல தனது முரட்டு முகத்தாலும், முழிக்கும் விழிகளாலும் நடித்துள்ளார். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத வில்லனான ‘யார்’ கண்ணன் குணச்சித்திர நடிப்பில் ஒரு வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.
முனிஷ்காந்தின் வேலையே மூட்டிவிடுறதுதான் என்பதாக சொல்லப்பட்டாலும், மாவட்ட கண்காணிப்பாளரிடம் சட்டம் என்றால் என்ன.. சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன.. காவலர்களின் வேலை என்ன என்று 2 நிமிடத்திலேயே அட்டகாசமான லெக்சர் கொடுத்துவிட்டு சேரை இழுத்துத் தள்ளிவிட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறும்போது கை தட்டாமல் யாருமே இருக்க முடியாது. வெல்டன் இயக்குநரே..!
படம் சாதி அரசியலை பேசுகிறது என்பதால் அதை மையப்படுத்தியே பல வசனங்களும் அமைந்துள்ளன.
“மீசைன்றது வெறும் முடிதான” என்று மூர்க்கன் பூமியிடம் சொல்வதும்,
“நாம என்னைக்கும் அடிவாங்குறவன் பக்கத்துலதான் நிக்கணும். அப்படி நின்னு அவன மேற்கொண்டு அடி வாங்காமல் பாத்துக்கிறணும்..” என்று பூமி பேசும் வசனமும்,
“நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கீங்கன்னு நெனைக்குறீங்க. ஆனா உண்மையா நீங்க இன்னொருத்தன் காலுக்கு கீழதான் இருக்கீங்க..” என்று பூமி சொல்லும் வசனமும் படத்தின் கதையை சார்பில்லாமல் சொல்லியிருக்கிறது.
இதேபோல் கீழத் தெருவுக்குள்ளேயே வர முடியாத அளவுக்கான வேறொரு அடிமை சாதியும் இங்கே உண்டு என்பதை சாயா தேவியின் குடும்பம் வாயிலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு பணி சிறப்புதான். அடிக்கடி ஏரியல் ஷாட்டுக்களில் காண்பிக்கப்படும் கருவேல மரங்களின் அடர்த்தியும், வறண்ட நிலப் பகுதிகளும் அது ராமநாதபுரம் மாவட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது.
மேலத் தெருவில் இருக்கும் கார்த்திக் ரசிகர் மன்றம், கீழத் தெருவில் இருக்கும் பிரசாந்த் ரசிகர் மன்றம், ஊருக்குள் தேமே என்றிருக்கும் அம்பேத்கர் சிலை.. ஒரு குறியீடாக எதிர்க்கட்சித் தலைவரின் கிழிந்த பேனருக்குப் பின்பு அம்பேத்கர் சிலை தெரிவது.. கழுவேத்தி மரத்தின் அமைப்பு என்று பல விஷயங்களையும் கலை இயக்குநர் பார்த்துப், பார்த்து செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.
டி.இமானின் இசையில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் மட்டுமே முணுமுணுக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை சண்டைக் காட்சிகளின்போது இரைச்சலை கூட்டியிருக்கிறது.
கே.கணேஷ்குமாரின் சண்டைக் காட்சிகள் முரட்டுத்தனம். மூர்க்கனின் கேரக்டருக்கேற்ப சண்டை காட்சிகளை அமைத்து புழுதியை பறக்க விட்டிருக்கிறார் சண்டை இயக்குநர்.
படத்தின் நீளம் அதிகம்தான். படத் தொகுப்பாளர் கொஞ்சம் மனம் வைத்து கத்திரி போட்டிருந்தால் படம் இன்னமும் இறுக்கமாக இருந்திருக்கும்.
கழுவில் ஏற்றுவது என்பது மிகக் கொடுமையான மரண தண்டனை. அரசர்கள் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது. மதுரையில் சமணர்களை கூண்டோடு கழுவில் ஏற்றிய வரலாறெல்லாம் உண்டு.
சாதிய ரீதியில் மக்களை இம்சிக்கும் அரசியல் தலைவர்களை கழுவில் ஏற்றலாம் என்று இந்தப் படத்தின் மூலமாக நீதி வழங்கியிருக்கிறார் இயக்குநர் சை.கெளதமராஜ். இது ஒன்றுதான் நமக்குத் தவறாகப்படுகிறது. அதோடு இது அந்தக் காலத்திற்கு சரி. ஒரு குற்றத்திற்கு தண்டனை அதே குற்றம் என்பதெல்லாம் இப்போதைய ஜனநாயக உலகத்திற்கும், எதிர் காலத்திற்கும் விரோதமான செயல்.
இயக்குநர் முதல் பாகத்தை மிக மெதுவாக நகர்த்தி வந்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் மின்னல் வேகமாக திரைக்கதை நகர்ந்திருக்கிறது. இரண்டாம் பாதி போலவே முதல் பாகத்திலும் இயக்குநர் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்த சாதிய உணர்வு பரம்பரை, பரம்பரையாக ஜீன் வழியாகவே வந்து கொண்டேயிருக்கிறது. சாதிய ஒழிப்பும், வெறுப்பும் ஒரு தலைமுறையில் முடியக் கூடிய விஷயமல்ல என்பதை மூர்க்கனுக்கு நேரும் கதியின் மூலமாக பட்டவர்த்தனமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!
மாதந்தோறும் வரும் சாதி ஒழிப்பு பற்றிய படங்களில் இந்த மாதத்திய படம் இது என்று சொன்னாலும், அருள்நிதிக்கு இது நிச்சயமாக பெயர் சொல்லும் படமாகும்..!
சாதிகளைக் கழுவில் ஏற்ற வேண்டிய அவசியத்தை சொல்லியிருக்கிறது இந்தக் கழுவேத்தி மூர்க்கன் படம்..!
RATING : 3.5 / 5