“நடிக்கும்போதுதான் அந்தக் கஷ்டம் தெரிஞ்சது..” – கள்ளப்படத்தின் நடிகர்-ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் அனுபவம்..!

“நடிக்கும்போதுதான் அந்தக் கஷ்டம் தெரிஞ்சது..” – கள்ளப்படத்தின் நடிகர்-ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் அனுபவம்..!

முதன் முறையாக நான்கு முதன்மை தொழில் நுட்பக் கலைஞர்கள், முதன்மை கதாப்பாத்திரங்களாக நடிக்கும் திரைப்படம் ‘கள்ளப்படம்’. இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷும், படத்தின் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார்.

பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் அவர்களின் உதவியாளரான ஸ்ரீராம் சந்தோஷ்  கலையுலகிற்கு பல ஜாம்பவான்களை தந்த கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர்.

Cinematographer Sriirama santhosh

“பல்வேறு வடிவங்களை வண்ணத்துடன், எண்ணத்திலும் கொண்டிருந்த நான் ஒளிப்பதிது துறையில் மாணவப் பருவத்திலேயே ஆர்வம் கொண்டவன். திரையுலகம்தான் இனிமேல் எனக்கு வாழ்க்கை என்று முடிவாக இங்கே வந்தபோது முதலில் PC ஸ்ரீராம் அவர்களிடம்தான் உதவியாளனாக  சேர்ந்து ஒளிப்பதிவைக் கற்றுக் கொண்டேன்.

நானும், இயக்குநர் வடிவேலுவும் நெருங்கிய நண்பர்கள்.  எங்களது  பதிமூன்று வருட நட்பில் நாங்கள் அதிகம் பகிர்ந்துக் கொண்டது சினிமாதான். புதிய பரிமாணத்தில் சினிமாவை எடுத்து செல்ல வேண்டும் என்று எங்களுக்குள் எழுந்த சிறிய சிந்தனைதான் இந்த ‘கள்ளப்படம்’.

நான் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிற ‘கள்ளப்பட’த்தில் நடிகனாகவும் அறிமுகமாகிறேன். நடிப்பில் எனக்கு பரிட்சியமும் இல்லை, ஆசையும் இல்லை.. எனினும் இப்படத்திற்கு, இக்கதாப்பாத்திரங்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டும் என்று எண்ணிதான் இப்படத்தில் நாம் நாமாகவே நடிக்கலாம் என்று வடிவேலிடம் கூறினேன். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் புதிதாக இருக்க உடனேயே ஒப்புக் கொண்டார்…” என்றார் ஸ்ரீராம் சந்தோஷ்.

மேலும் தனது ஒளிப்பதிவு பற்றி கூறுகையில்,  “கேமரா முன் நடிப்பதும், கேமராவிற்கு பின் நின்று ஒளிப்பதிவு செய்வதும் மிக கடினமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் லைட்ஸ், ஆங்கிள், ஷாட் என ஒளிப்பதிவு வேலைகளை அமைத்துவிட்டு பின் மேக்-அப் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும் என்ற பரபரப்பு கடைசிவரையில் இருந்து கொண்டே இருந்தது. இப்படத்தில் நடித்தாலும், திரைக்கதைக்கு வேகம் கூட்டும் வகையில் ஒளிப்பதிவில் பல புதிய காட்சி அமைப்புகளை முயற்சி செய்துள்ளோம்.  ஒரு ஒளிப்பதிவாளன் என்பதால் நடிக்கும்போதும் கேமரா எப்படி நகர்கிறது, ஷாட் எப்படி வரப் போகிறது என்ற ஆவலும் எனக்குள் பற்றிக் கொண்டது..” என்றார்.

நடிப்பு அனுபவம் பற்றி கூறுகையில்,  “இதுநாள் வரையில் நடிப்பு என்பது சாதாரணமானது. இயக்குநர் சொல்வதை மட்டும் செய்தால்  போதும் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். நடிப்பு என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை.. அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்துவதே நடிப்பு என்று இப்படத்தில் நடிக்கும்போதுதான் உணர்ந்து கொண்டேன்..”  என்றார் தெளிவாக.

“படம் வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 20-ம் தேதியன்று வெளிவருகிறது எனினும் இன்று எனக்கு முக்கியமான நாள் எனது குரு PC ஸ்ரீராம் சார் எங்களை வாழ்த்தி மெசேஜ் அனுப்பி இருந்தார். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. PC சார் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு திரையுலகில் உயரங்களை அடைவதே எனது குறிக்கோள்..“ என்று முத்தாய்ப்பாகக் கூறினார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான ஸ்ரீராம் சந்தோஷ்.

Our Score