புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’ திரைப்படம் வருகிற மார்ச் 20-ம் தேதி வெளியாக உள்ளது. எதற்கும் துணிந்த இளைஞர்களை தவறான பாதையில் இட்டு அழிவிற்கு பயன்படுத்தும் சமுதாய இன்னல்களைப் பற்றி கூற வருகிறது இப்படம்.
GK சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் மிதுன், சாம்பால், புலிபாண்டி மற்றும் வைதேகி என புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
“எனது இந்த முதல் படமான ‘பட்ற’ யதார்த்தத்தை மீறாமலும் புதிதாகவும் இருக்க வேண்டும் என உறுதியாக எண்ணினேன். இக்கதைக்கு புதுமுகங்கள் இருந்தால் கதைக்கு எதிர்பார்த்த புத்துணர்வு கிடைக்கும் என்றும் எண்ணினேன். அந்த தேடலில் கிடைத்தவர்கள்தான் எனது கதாநாயகன் மிதுன், வில்லன் நடிகர் சாம்பால் மற்றும் கதாநாயகி வைதேகி. கதைக்கு இவர்களது தோற்றமும், நடிப்பும் மிக உதவியாய் இருந்தது. இதுவரை படம் பார்த்தவர்களும் இதையேதான் கூறினார்கள்.
ஒரு அரசியல்வாதியின் கைக்கூலிகளாக இருக்கும் இரண்டு வில்லன்களைக் காட்ட வேண்டும் என்றபோது புலிப்பாண்டி மற்றும் சாம்பால் எனக்கு கச்சிதமாய் பொருந்தினார்கள். அதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு வசீகரிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாம்பால் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா தன் இசையாலும், ஒளிப்பதிவாளர் சுனோஜ் வேலாயுதன் தன் நேர்த்திமிகு ஒளிப்பதிவாலும் இந்த பரபரப்பான திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்த்த உதவியுள்ளார்கள். இந்த ஆக்சன் கதைக்கு சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வா சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
மார்ச் 20-ம் தேதி வெளிவர இருக்கும் இந்த ‘பட்ற’ திரைப்படம் நிச்சயம் கவரும். படம் பார்த்து எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..” என்று நெகிழ்வுடன் கூறினார் புதுமுக இயக்குனர் ஜெயந்தன்.