full screen background image

மாணவப் பருவத்தில் வரும் காதல், காதலே இல்லை – சொல்கிறார் அறிமுக இயக்குநர் ஜனா வெங்கட்.!

மாணவப் பருவத்தில் வரும் காதல், காதலே இல்லை – சொல்கிறார் அறிமுக இயக்குநர் ஜனா வெங்கட்.!

கோட்ராக் பிலிம்ஸ் சார்பில் K.பொட்டால் முத்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘மனதில் ஒரு மாற்றம்’.  

இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.  இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சாய் நந்தா.  இவர் மறைந்த ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் மற்றும் ஹாஜீ அனுமோல் ஆகியோர்களிடம் பணியாற்றியவர். அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். இவருடைய அப்பா பூபதி அவர்கள் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  அண்ணாமலை, உவரி சுகுமார், தென்றல் ராம்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

‘வல்லினம்’ படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற V.J..சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் மயில் கிருஷ்ணன், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியவர். அறிமுக இயக்குநரான ஜனா வெங்கட் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்குநர் சு.பார்த்திபன் அவர்களின் குரு குலத்தில் சினிமா கற்றவர். மேலும் இயக்குநர் சாமி அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.  இவர் இயக்கிய குறும் படமான ‘வின்னிங் ஸ்டார்’ 2004-ம் ஆண்டு கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நடந்த குறும் பட  விழாவில் திரையிடப்பட்டது.  அடுத்ததாக 2007-ல் இவர் இயக்கிய ‘அப்பா என் செல்லம்’ குறும் படமும் பாராட்டினைப் பெற்றது. அதேபோல் இப்போது இயக்கி இருக்கும் இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ படமும் எல்லோராலும் பாராட்டப்படும் என நம்புகிறார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் ஜனா வெங்கட்,  “ஆணுக்கும், பெண்ணுக்கும் வாலிபப் பருவத்தில் ஏற்படுகிற வேதியியல் மாற்றம், அவர்களைப் பொருத்தவரையிலும் காதல் திருவிழா.

ஆனால் இந்தக் காதல்  திருவிழா எத்தனை பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது சதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது என்றுதான் பதில் வரும். ஆகவே, எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு விஷயம்தான் திருவிழா. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும் கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல.  அந்த வகையில் இந்தக் காதலும் திருவிழாவே இல்லை.                                                  

இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும்தான், புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால் ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறோம். இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால் படம் முடிந்து வெளியே போகும்போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மனநிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள் என்று நம்புகிறோம்.

‘புகையிலை புற்று நோயை உண்டாக்கும்’.. ‘குடி குடியைக் கெடுக்கும்’.. ‘சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற எச்சரிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுபோல், காதலினால் ஏற்படுகிற கொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மனதில் ஒரு மாற்றம் திரைப்படம் இளைஞர்களால்மட்டும் இன்றி பெற்றோர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.’’ என்கிறார் டைரக்டர் ஜனா வெங்கட்.                     

பாம்யார்ட் S.சரவணன் இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.  

Our Score