full screen background image

8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..!

8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..!

தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்குரிய கலைஞர்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தேர்ந்தெடுத்து அரசிடம் தெரிவிக்கும். அரசு அவர்களுக்கு விருதினை வழங்கும். இதுதான் நடைமுறை.

இந்தக் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரையிலான 8 ஆண்டுகளில் வழங்கப்படாமல் இருந்தது. ஆளும் அ.தி.மு.க. அரசு தூங்கி வழிந்த நிலையில், இப்போதுதான் ஒட்டு மொத்தமாக இந்த விருதினை ஒரே நாளில் தேர்வு செய்து வெளியிட்டது.

இந்த விருதினை வழங்கும் விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சபாநாயகர் ப.தனபால் பெற்றுக் கொண்டார்.

விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

விழாவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி விருதினைப் பெற்ற திரைப்படக் கலைஞர்கள் பட்டியல் :

பி.ஆர்.ஓ.யூனியனின் கெளரவ தலைவர் நெல்லை சுந்தர்ராஜன், பி.ஆர்.ஓ. யூனியனின் கௌரவ உறுப்பினரும், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன். தயாரிப்பாளர்கள் கலைஞானம், ஏ.எம். ரத்னம், இயக்குநர்கள் பவித்ரன், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, டி.பி.கஜேந்திரன்,

நடிகர்கள் கார்த்தி, பிரபுதேவா, விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் ஆண்டனி, சந்தானம், பாண்டியராஜன், பிரசன்னா, சூரி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ், பாண்டு, சிங்கமுத்து, சிவன் சீனிவாசன், ராஜசேகர்.

நடிகைகள் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா, பிரியாமணி, ராஜஸ்ரீ, எஸ்.என்.பார்வதி, பி.ஆர்.வரலட்சுமி, ஸ்ரீலேகா ராஜேந்திரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நடன இயக்குநர்கள் புலியூர் சரோஜா, தாரா.  ஸ்டண்ட் இயக்குநர் ஜுடோ ரத்னம், பின்னனி பாடகர்கள் எஸ்.ஜானகி, சசிரேகா, மாலதி, அபஸ்வரம் ராம்ஜி, கிருஷ்ணராஜ், உன்னிமேனன், உலகநாதன், கானாபாலா, வேல்முருகன், பரவை முனியம்மா.

ஒளிப்பதிவாளர்கள் பாபு, ரத்னவேலு, ரவிவர்மன், புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, நாடக நடிகர்களான குடந்தை மாலி, சந்திர மோகன், டி வி வரதராஜன், சுப்புணி,மாது பாலாஜி, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஜெயராமன், பாரதீய வித்யா பவன் ராமசாமி, கீழாம்பூர் , திருப்பூர் கிருஷ்ணன், குட்வில் ஸ்டேஜ் நாடகக் குழுவின் தலைவர் கோவை பத்து, பத்திரிகையாளர்கள் லேனா தமிழ்வாணன், அசோக்குமார், மணவை பொன் மாணிக்கம் ஆகியோரும் விருதுகளைப் பெற்றார்கள்.

நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவாவுக்கான விருதை அவருடைய தந்தையும் பெற்றுக் கொண்டனர். திருநங்கை சுதாவும் ‘கலைமாமணி’ விருது பெற்றார்.

தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கவிஞர் பாலரமணி, டாக்டர் அமுதகுமார், லதா ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு கொடுத்ததற்காக ‘கலைமாமணி’ விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கலைமாமணி’ விருதுடன் தற்போது வழங்கப்படும் 3 பவுனுக்கு பதிலாக இனிமேல் 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கங்களாக வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு ‘கலைமாமணி’ விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.

தற்போது நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்…” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் ‘கலைமாமணி’ விருது அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் பங்கேற்கவில்லை.

Our Score