மகாபாரத்தின்‘குருக்ஷேத்திர’ போரினை மட்டும் மையமாக கொண்டு கன்னட மொழியில் மிகப் பெரிய பொருட் செலவில் ‘குருக்ஷேத்ரம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
3-D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பிரபல கன்னட தயாரிப்பாளர் முனிரத்னம் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘பீஷ்மர்’ வேடத்தில் அம்பரிஷ், ‘துரியோதனன்’ வேடத்தில் தர்ஷன், ‘கர்ணன்’ வேடத்தில் அர்ஜுன் சார்ஜா, ‘கிருஷ்ணர்’ வேடத்தில் வி.ரவிச்சந்தர், ‘அர்ஜுனன்’ வேடத்தில் சோனு சூட், ‘திருதராஷ்டிரன்’ வேடத்தில் ஸ்ரீநாத், ‘தர்மராக’ சசிகுமார், ‘பீமனாக’ அக்தர் சாயிப், ‘நகுலனாக’ யாஷாஸ் சூர்யா, ‘சகாதேவனாக’ சந்தன், ‘குந்தி’யாக பாரதி விஷ்ணுவர்த்தன், ‘பானுமதி’யாக மேக்னா ராஜ், ‘உத்தரை’யாக அதிதி ஆர்யா, ‘துச்சாதனானாக’ துஷ்கன்ஸா, ‘காந்தாரி’ வேடத்தில் பவித்ரா லோகேஷ், ‘சகுனி’ வேடத்தில் ரவிஷங்கர், ‘திரௌபதி’ வேடத்தில் ஸ்நேகா, ‘அபிமன்யு’ வேடத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவும் நடித்துள்ளனர்.
மேலும் ஹரிபிரியா, பிரக்யா ஜெய்ஸ்வால், அனுசுயா பரத்வாஜ், ரம்யா நம்பீசன் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோ.நி. ஹர்ஷா படத் தொகுப்பு செய்துள்ளார். கதை, திரைக்கதையை ஜே.கே.பாரவி எழுதியுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு – நர ஜெயதேவி, கிராபிக்ஸ் – துர்கா பிரசாத், கலை இயக்கம் – கிரண் குமார் மானே, சண்டை இயக்கம் – சாலமன்,
மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளருமான முனிரத்னா நாயுடு தயாரித்துள்ளார். கன்னட இயக்குநர் நாகன்னா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படம் 5 நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் கன்னட மொழியில் வெளியாகி பெரும் வெற்றியினைப் பெற்றிருக்கிறது.
இந்தப் பிரம்மாண்டமான படைப்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று இந்தப் படம் தமிழகத்தில் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு வெளியிடுகிறார்.
இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா, தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் அர்ஜூன், தர்ஷன், இயக்குநர் நாகண்ணா, படத் தொகுப்பாளர் ஹர்ஷா, சண்டை இயக்குநரான கனல் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முனிரத்னம் பேசும்போது, “மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம். அந்தவிதத்தில் நாங்கள் இந்தப் படத்தில் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது.
இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி தாணு அவர்களுக்குத்தான்.
இந்தப் படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகளில் ஒன்று கர்ணனாக நடித்திருக்கும் அர்ஜுன் இடம் பெறும் போர்க் களக் காட்சி. மற்றது இறுதியாக துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் நடைபெறும் கதாயுத சண்டை. இதனை பிரமிக்கத்தக்க வகையில் இயக்கம் செய்து கொடுத்திருக்கிறார் சண்டை இயக்குநரான ‘கனல் கண்ணன்’. அவருக்கு எனது நன்றிகள்.
இத்திரைப்படம் இந்த வாரம் கர்நாடகாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது…” என்றார்.
படத்தின் இயக்குநரான நாகன்னா பேசும்போது, “மகாபாரத்தில் நிறைய கதைகள் இருந்தாலும், நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இத்திரைப்படத்தை 3-டி படமாக எடுக்க தயாரிப்பாளர் முனிரத்னாதான் காரணம்.
துரியோதனனாக நடித்திருக்கும் நடிகர் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் இருக்க வேண்டி 35 கிலோ எடையை கூட வைத்து நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் பல நடிகர்கள் மிகுந்த முனைப்புடன் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கர்ணன், துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி…” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி s.தாணு பேசும்போது, “இந்தத் தமிழ்த் திரையுலகத்தில் 1985-ல் நான் தயாரித்த முதல் படத்தில் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன். அந்தப் படத்தின் டைட்டிலில் அவருக்கு ஆக்சன் கிங் என்ற பெயரையும் கொடுத்தேன். இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத் தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது.
கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் ‘கர்ணன்’தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குநர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது. படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும்…” இவ்வாறு அவர் பேசினார் .
நடிகர் தர்ஷன் பேசும்போது, “நான் சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில்தான் படித்தேன். முதன்முதலாக திரையுலகத்தில் நான் ஒரு லைட் பாய் ஆகத்தான் வேலைக்கு சேர்ந்தேன். அந்த வேலையில் இருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மைதலாஜிகள் படத்தினை தைரியமாக தயாரிப்பாளர் கொண்டு வந்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் நான் இப்படத்தை தேர்வு செய்தேன். இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னாதான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம்.
இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவர்கள், அவரின் நடிப்பும் திறமையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக 3டி, 2டி என இரண்டு முறையிலும் நடித்து டப்பிங் செய்துள்ளோம்…” என்றார்.
நடிகர் அர்ஜூன் பேசும்போது, “இந்தப் படம் கன்னடத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.
அஜித் படத்தின் 50-வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50-வது படத்திலும் நான் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் உழைத்ததைவிட தர்ஷன்தான் அதிகம் உழைத்துள்ளார். படத்தில் நான் நடித்ததைவிட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பதில்தான் எனக்குப் பெருமை.
கனல் கண்ணனின் சண்டை பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது. இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம். ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்…” என்றார்.
சண்டை இயக்குநர் கனல் கண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான். இந்தக் காட்சியை பஞ்ச பூதங்களை மையமாக வைத்து படமாக்கினோம். ஆகையால் ஆரம்பம் முதலே பீமனிற்கு பூமி பலம் பெற்றவர் போல் காண்பித்து எடுக்கப்பட்டது. அதே போல், அர்ஜூன் அவர்கள் இந்தப் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த முனிரத்னா, நாகன்னா மற்றும் தாணு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி…” என்றார்.
படத் தொகுப்பாளர் ஹர்ஷா பேசும்போது, “டப்பிங்கிற்கு முன்பு இந்தப் படத்தினை பார்த்தபோதே அருமையான இந்த படைப்பினை பார்த்து வியந்தோம் . படம் எடிட்டிங் செய்த பின்பும் இதேதான் எண்ணிணோம். இந்தப் படம் தாணு அவர்கள் மூலம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை தெரிந்த பின் எங்களுக்கு படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது…” என்றார்.
வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது .