சென்ற வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ‘காளிதாஸ்’.
நடிகர் பரத்தின் நடிப்பில் அறிமுக இயக்குநரான ஸ்ரீசெந்தில் எழுதி இயக்கியிருந்த இப்படத்தை DINA STUDIOS, INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளுவேல் எண்டர்டயின்மண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில், தயாரிப்பாளர் மணி தினகரன் பேசியதாவது, “இயக்குநரின் ப்ளானிங் நேர்த்தி, மற்றும் பத்திரிகைகளின் பாராட்டு தான் எங்களை பெரிய வெற்றி அடைய வைத்தது. அனைவருக்கும் நன்றி…” என்றார்.
Blue Whale Entertainment அபிஷேக் பேசும்போது, “பெரிய டென்சனில் இருந்த ஒரு சமயம்தான் இந்தப் படத்தை போய்ப் பார்த்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு என் டென்சன் விலகியது. படத்தின் மேக்கிங் என்னை படத்தை பெரிய அளவுக்குக் கொண்டு போக வேண்டும் என்று தூண்டியது. அது இப்போது நடந்தே விட்டது…” என்றார்.
சக்திவேல் பெருமாள்சாமி பேசியதாவது, “அரவிந்த் என்பவர்தான் இந்தப் படத்தை பார்க்க வைத்தார். ஒரு முக்கியமான டிஸ்டிப்யூட்டரோடு அமர்ந்துதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. பிறகு நானே துணிந்து வெளியிடலாம் என்று முடிவெடுத்தேன்.
எங்களுக்கு பத்திரிகையாளர்கள் கான்பிடண்ஸ் கொடுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். பைரஸியில் படம் பார்ப்பவர்களால் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதையும் தாண்டி நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. மேலும் இந்தப் படம் இந்த வாரமும் ஓட வேண்டும். அப்போதுதான் வசூலில் நாங்கள் அடுத்த நிலையை அடைய முடியும். அதற்கு அனைவரின் ஆதரவு வேண்டும். மேலும் இந்த வாரம் மூன்று பெரிய படங்கள் வருகின்றன. அந்தப் படங்களோடு எங்கள் படமும் ஓட வேண்டும். அதற்கு மீடியா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்…” என்றார்.
நடிகர் தங்கத்துரை பேசும்போது, “படத்தைப் பத்தி மீடியா நல்லா எழுதி இருந்தாங்க. அவ்வளவு பேருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் அனைவருக்கும் நன்றி. பரத் சார் என்னை சூட்டிங் ஸ்பாட்டில் நல்லா என்கிரேஜ் பண்ணார். அவருக்கும் நன்றி.
இன்றைய வாழ்க்கை ரொம்ப வேகமாக போவதால் நாம் யாரும் வீட்டில் நேரம் செலவிடுவதில்லை. ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்பதை படம் மிக அழகாக பதிவு செய்திருந்தது. இந்தப் படத்தை பார்த்த பிறகு நான் மனைவியோடு இரண்டு நாள் நேரத்தை செலவு செய்தேன். நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வீட்டிற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்…” என்றார்.
நடிகர் ஆதவ் கண்ணதாசன் பேசும்போது, “இந்தக் கதைக் கருவை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. இயக்குநர் ஸ்ரீசெந்தில் சார் ஒரு சைடாக யோசிக்க மாட்டார். இந்த காளிதாஸ் மூலமாக பரத்திற்கு பெரிய ப்யூச்சர் கிடைக்கும். பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் இந்தப் படத்தைப் பெரிதாக கொண்டு போய் சேர்த்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி. அதே ஆதரவை இன்னும் ஒரு வாரம் இந்தப் படத்திற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும்போது, “ஒரு நல்ல படத்தைதான் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒரு வழியாக கொண்டு வந்தோம்.
படம் ப்ரிவியூ ஷோ போடும்வரை எனக்குள் பயம் இருந்தது. ஆனால் ப்ரிவியூவில் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நிறைய நல்ல மனங்கள்தான் இந்தப் படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.
படம் துவங்கியதற்கான காரணமாக இருந்த தினா சாருக்கு பெரிய நன்றி. அவர் எனக்காக இந்தப் படத்தை எடுத்தார். முழு உழைப்பை போட்டால் இந்த பிரபஞ்சம் நமக்கு சப்போர்ட் பண்ணும். அது மெய்யாகி இருக்கிறது.
சிவநேசன் சார் சொன்ன ஒன் லைன்தான் இந்தக் கதை. இது 30 நாட்களில் எழுதப்பட்ட கதை. எழுதியதும் பரத் சாரை மீட் பண்ணி கதை சொன்னேன். அதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் இந்தப் படம் முடிவாகிவிட்டது.
இந்தப் படத்திற்காக பரத் சார் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கிறார். படம் மீது மக்களுக்கு நம்பகத் தன்மை வருவதற்கு நடிகர்கள் ரொம்ப முக்கியம். அந்த வகையில் பரத் சிறப்பாக செய்திருக்கிறார். ஆன் ஷீத்தல் டூப் இல்லாமலேயே நடித்தார்.
என்னோட டெக்னிஷியன்ஸ் எல்லாருமே நல்லா வேலை செய்தார்கள். புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டர் என்பதையும் தாண்டி இப்போது எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். எனக்குள் பெரிய எனர்ஜியை ஏற்றியவர் அவர்தான். சக்திவேல் ராமசாமி, அபிஷேக், சிவகுமார் ஆகியோர் படத்திற்குள் வந்த பிறகு எங்கள் நம்பிக்கை பெரிதாகி விட்டது. ஜெயவேல் அண்ணன்தான் என்னை சினிமாவிற்குள் கொண்டு வந்தார். அவர் படம் மூலமாகத்தான் நான் உள்ளே வந்தேன். இந்த நேரத்தில் அவருக்கும் மிகப் பெரிய நன்றி…”என்றார்.
நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசும்போது, “இயக்குநர் ஸ்ரீசெந்தில் சாருக்குத்தான் நான் பெரிய நன்றியை சொல்லணும். அவர் என்னை நடிக்க அழைத்தபோது நான் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னால் டேட் கொடுக்க முடியாத சூழல் இருந்தது. ஆனாலும் எனக்கு உதவி பண்ணி என்னை நடிக்க வைத்தார்.
பரத்தோடு நடித்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இப்படியான ஒரு கேரக்டர் எனக்கு கொடுத்ததன் மூலமாக எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நல்லவிதமாக படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி…” என்றார்.
நடிகர் பரத் பேசும்போது, “வெற்றி நாயகன்’ என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் சூட்டிங்கில் இருக்கும்போது காளிதாஸ் சக்ஸஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும்தான். ஆனால் என்றாவது ஒரு நாள் நமக்கு ஒரு நல்ல படம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது.
சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்ல படங்களில் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ஒரு நடிகனுக்கு மிகவும் முக்கியம். இது 2017-ம் ஆண்டு உருவான திரைப்படம். சினிமா துறையில் நிறைய பேர் இந்தப் படத்தை பார்த்து விட்டார்கள். நிறைய பேர் ‘படம் நல்லாருக்கு. ஆனால் பரத் நடித்திருக்கிறார். இவருக்கு மார்க்கெட் இல்லையே’ என்று சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது.
ஆனால், இந்தப் படத்தை முதலில் பார்த்த பத்திரிகையாளர்கள் நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் இந்தப் படத்தைத் பெரிதாக கொண்டாடினார்கள். நெகட்டிவ் ரிவியூ ஒன்றுகூட இல்லை. இதற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இப்போது ஒரு நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியீட வேண்டும், அதற்கு தியேட்டர்ஸ் எப்படி போட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார்.
எல்லாருமே இந்தப் படத்தை பெரிதாக்க வேண்டும் என்று மொத்தமாக உழைத்தோம். அடுத்த வாரமும் இந்தப் படத்தை நாங்க கொண்டு போகணும். ஏன்னா அடுத்த வாரம் ‘ஹீரோ’, ‘தம்பி’, ‘தபாங்-3’ ஆகிய மூன்று படங்கள் வெளிவருகின்றன. அவைகளோடு நாங்கள் தியேட்டர்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் ஜெயித்துவிட்டார். தமிழ்ச் சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருடங்கள் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இதை நினைத்தாலே எனக்குள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..” என்றார்.














