full screen background image

கொஞ்சம் கொஞ்சம் – சினிமா விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மிமோசா புரொடக்ஷன்ஸ் சார்பில்  தயாரிப்பாளர்கள் பெட்டி சி.கே., மற்றும் பி.ஆர்.மோகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். 

படத்தின் நாயகனாக கோகுல், நாயகியாக ப்ரியா மோகன் நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் அப்புக்குட்டி நடித்துள்ளார். மேலும் நீனு, மன்சூர் அலிகான், மதுமிதா, தவசி, சிவதாணு போன்றோரும் நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – பி.ஆர்.நிக்கி கண்ணன், கலை – அபூ சஜன், இசை – வல்லவன், பாடல்கள் -அருண்பாரதி, தேன்மொழி தாஸ், மீனாட்சி சுந்தரம், வல்லவன், நடனம் – தீனா.  

இப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர்,  மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார். ஏற்கெனெவே தமிழில் ‘விருந்தாளி’ படம் இயக்கிய இவருக்கு, இது இரண்டாவது படமாகும்.

அக்கா, தம்பி பாசத்துக்கு எடுத்துக்காட்டாய் வந்திருக்கும் இன்னொரு திரைப்படம் இது.

கேரளாவின் எல்லையோர தமிழக கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. இங்கே பிழைக்க வழியில்லாமல் கேரளாவின் ஒத்தப்பாலம் என்கிற ஊருக்குச் சென்று அங்கே நம்மவரான அப்புக்குட்டி நடத்தும் பழைய இரும்பு சாமான்களை விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து போகிறார்.

இடையில் ஒத்தப்பாலத்தில் இருக்கும் ஒரு கேரளப் பெண்ணுடன் மோதலாகி பின்பு அதுவே காதலாகிவிடுகிறது. இடையில் ஊரில் இவருடைய அக்காவான நீனுவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்து வருகிறது. பெண் பார்க்க வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக தம்பி ஆசையாய் வாங்கிக் கொடுத்த செல்போன் வெடித்துச் சிதற அப்போது ஹியரிங் போனால் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நீனுவின் கேட்கும் திறன் பாதித்து அவர் முழு செவிடாகிறார்.

இதனால் பதறிப் போகும் கோகுல் அக்காவின் மருத்துவ சிகிச்சைக்காக அலைகிறார். பெரிய ஆஸ்பத்திரிக்கு போனால்தான் காது மீண்டும் சரியாகும் என்கிறார்கள். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவருடைய அம்மாவும் திடீரென்று மரணமடைய.. அக்கா, தம்பி இருவருமே அனாதையாகிறார்கள்.

வேறு வழியில்லாமல் தனது அக்காவையும், அழைத்துக் கொண்டு ஒத்தப்பாலத்திற்கே வருகிறார் கோகுல். அங்கே கடையிலேயே அக்காவையும் தங்க வைத்துக் கொள்கிறார். அங்கே காதுக்கு சிகிச்சையளிக்க முற்படும்போது ஒரு லட்சம் ரூபாய் இருந்தால்தான் ஹியரிங் எய்டு கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால் அந்த ஒரு லட்சம் ரூபாயை சம்பாதிக்க முனைகிறார். அது அவரால் முடிந்ததா இல்லையா..? அக்காவுக்கு ஹியரிங் எய்டை வாங்கிக் கொடுத்தாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

நல்ல கதை.. குழப்பமில்லாத திரைக்கதை.. அழுத்தமான நடிப்பு.. அழகான இயக்கம்.. சிறந்த பாடல்கள்.. சிறந்த ஒளிப்பதிவு.. சிறந்த இசை.. என்று பல வகைகளிலும் இந்தப் படம் குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படமாக தோன்றுகிறது.

அறிமுக நாயகனான கோகுல் தனது கேரக்டரை உணர்ந்து, உள் வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். உண்மையான ஊழியனாக அப்புக்குட்டியிடம் விசுவாசமாக வேலை செய்யும் இவர் தனது காதலியை முதல்முறை சந்திக்கும்போது கோபப்பட்டு கத்திக் கூப்பாடு போடுகிறார். அதே காதலி தேடி வந்து பணத்தை முகத்தில் வீசியெறிந்துவிட்டுப் போகும்போது சட்டென்று இளகி பின்னாலேயே போய் மன்னிப்பு கேட்கிறார். இந்த ஒரு காட்சியிலேயே நம்மை படத்திற்குள் இழுத்துவிட்டார் இயக்குநர்.

அக்கா மீது பாசம் கொண்ட தம்பியாக.. அம்மாவை விரும்பும் மகனாக.. தனது நடிப்பில் எந்த இடத்திலும் சோடை போகவில்லை கோகுல். போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கிய பிறகு ஊருக்கே போய்விடலாம் என்று அப்புக்குட்டியிடம் மல்லுக்கு நிற்கும்போதும், பள்ளி மேடையேறி தான் பட்ட அவமானத்தைச் சொல்லி வருத்தப்படும்போதும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் கோகுல். வாழ்த்துகள்.

இதேபோல் இவருடைய அக்காவாக நடித்த நீனுவும் புதுமுகம் போலவே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். அவருக்கு காது கேளாமல் போன பின்பு தலையை ஒரு மாதிரி சாய்த்து அவர் காட்டும் நடிப்பும்.. கடைசிவரையிலும் பாவப்பட்ட பெண்ணாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அவரது நடிப்பும் அபாரம்.

இரும்புக் கடையின் உரிமையாளராக வரும் அப்புக்குட்டி படத்திற்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவர் தாபாவை பார்த்து ஜொள்ளும் விடும் போர்ஷனையும், ஒரு இயக்குநர் கடைக்குள் வந்து ரகளை செய்யும் காட்சியையும் தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கிவிடலாம் இயக்குநரே. இது படத்திற்கு மிகப் பெரிய கரும்புள்ளியாக இருக்கிறது.

அப்புக்குட்டி, மதுமிதா, மாமியார் மோதல் செம ரகளை.. இதேபோல் கோகுலின் புதிய கண்டுபிடிப்புக்காக திடீரென்று வந்து 2 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்துவிட்டு காரையும் தானமாக வழங்கிச் செல்லும் மன்சூரலிகான் இரண்டு காட்சிகள் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கோகுலின் காதலியாக நடித்த ப்ரியா மோகனும், அவருடைய தந்தையாக நடித்த சிவதாணுவும், சித்தி கேரக்டரும்கூட நடிப்பில் சோடை போகவில்லை.

மிக எளிமையான கதை.. அதைவிட எளிமையான திரைக்கதை.. ஆனால் சுவாரஸ்யமானது.. மனதை உருக்கும் கதை.. அக்காவை தாங்கிப் பிடிக்க நினைக்கும் தம்பி.. இதற்கு உதவும் நல்ல மனிதர்கள்.. கடைசியில் போலீஸ் இன்ஸ்பெக்டரே மனமுருக வந்து தனது மகனுக்காக கோகுலை வேண்டுவது என்று மனித மாண்புகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படம் முழுவதுமே கேரளாவில் நடைபெறுகிறது என்பதால் ஒளிப்பதிவுக்கு கேட்கவா வேண்டும்.? நிக்கி கண்ணத்தின் கைவண்ணத்தில் படத்தின் ஒளிப்பதிவு அழகோ அழகு. கோகுலின் சின்ன வீட்டைக்கூட ரசனையாக அமைத்திருக்கிறார்கள். அந்த சாயந்தர வெயில் காட்சியையும், பேருந்து பயணத்தில் கூடவே ஓடி வரும் சூரியனின் பார்வையுமாக ஒளிப்பதிவாளருக்கு பெருமை சேர்க்கும் காட்சிகள்தான் இந்தப் படத்தில் அதிகம்.

வல்லவனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதைவிட பாடல்களை படமாக்கியவிதமும்கூட பாராட்டுக்குரியது. டூயட்டும், சோகப் பாடலும் அந்தந்த நிமிட ரசிக மனப்பான்மைக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் மனதில் பதிகின்றன.

எத்தனையோ பெரிய பெரிய பட்ஜெட் படங்களில் இல்லாத ஒரு இனிமையான இயக்கமும், மனதை ஏதோ செய்த கதை, திரைக்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆகவே, இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை. அந்தக் கடமையை நாம் மறக்காமல் செய்வோம்..!

Our Score