full screen background image

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைப்புலி எஸ்.தாணு

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைப்புலி எஸ்.தாணு

தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், மற்றும் V கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் முத்திரை பதித்துள்ளது.

தமிழ்த் திரைப்பட துறையில் 1971-ல் விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு.

தமிழ்ச் சினிமா துறைக்குள் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பயணிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த கால் நூற்றாண்டுகளாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்ச் சினிமா உலகமே இவரை சுற்றித்தான் சுழல்கிறது என்றே கூறலாம்.

நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் நடிக்க பல கதாநாயகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்று அந்தப் பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி எஸ்.தாணு.

தற்போது இவர் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67-வது பொதுக் குழுவில் அந்த அமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

1971-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஒரு விநியோகஸ்தராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்கள் இந்தாண்டு தனது ஐம்பதாவது ஆண்டு திரைப் பயணத்தைத் தொடுகிறார்.

இந்த நேரத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத் துறையின் சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்று சொன்னால் அது மிகையில்லைதான்.

தற்கு முன்பாக தமிழ்த் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்களான எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71-வது தலைவராக வரும் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்.

இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக C.கல்யாண், C.P.விஜயகுமார், N.M.சுரேஷ், ஆனந்தா L.சுரேஷ், T.P.அகர்வால் ஆகியோரும் பொறுப்பேற்க உள்ளனர். செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோரும் பதவி ஏற்க உள்ளனர்.

2021 ஜனவரி முதல் தேதி முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு கலைப்புலி எஸ்.தாணு தலைவர் பதவியை வகிப்பார்.

Our Score