தற்போது தமிழகத்தில் திறந்திருக்கும் தியேட்டர்களில் கூட்டமே வரவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர்தான் வருகிறார்கள். சில தியேட்டர்களில் கூட்டம் வராமல் ஷோக்கள் கேன்ஸலாகி வருகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இன்னொரு பக்கம் கேரவன் வேன்கள் வாடகைக்குக் கிடைக்காத சூழல். அந்த அளவுக்குத் திரும்பும் பக்கமெல்லாம் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறதாம். புரொடெக்சன்ஸ் வேன்கள்கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள்.
என்ன நடக்கிறது தமிழ்ச் சினிமாவில்…? உண்மையில் நம்பவே முடியாத அளவுக்கு படத் தயாரிப்புகள் மட்டும் வேக, வேகமாக கோடம்பாக்கத்தில் நடந்து வருகிறது என்பது மட்டும் உண்மை.
ஒரு படம், இரண்டு படங்கள் தயாரிப்பதெல்லாம் இப்போது பேஷன் இல்லையாம். அதிகப்பட்சமாக 10, 22 படங்கள் என்று அலட்சியமாகச் சொல்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். இதைக் கேள்விப்பட்டு தலை சுற்றிப் போய் கிடக்கிறார்கள் மூத்தத் தயாரிப்பாளர்கள்.
அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரமேஷ் பி.பிள்ளை 2021-ம் ஆண்டில் 10 படங்களைத் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.
இவருடைய தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
மோகன்லால்-திரிஷா நடிப்பில் மலையாளத்தில் ‘ராம்’ என்ற படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார்.
ரெஜினா கேஸண்ட்ரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு படத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பூஜை போட்டிருக்கிறார்.
பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து 2 படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தை ‘மஞ்சள் பை’ படத்தை இயக்கிய இயக்குநர் ராகவன் இயக்கவிருக்கிறார். இன்னொரு படத்தின் பெயர் ‘பிளாக் மேஜிக்’. இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான ராம் இயக்குகிறார்.
மேலும், இவருடைய தயாரிப்பில் காஜல் அகர்வால் 2 படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர் ‘ரவுடி பேபி’. இந்தப் படத்தை சுந்தர்.சியிடம் உதவியாளராகப் பணி புரிந்த சரவணன் என்னும் அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளார்.
இவர் “பத்து படங்களைத் தயாரிக்கப் போகிறேன்…” என்று சொன்னால்.. இன்னொரு தயாரிப்பாளர் “22 படங்களைத் தயாரிக்கப் போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
‘நிபுணன்’ படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம்தான் அந்தத் தயாரிப்பாளர்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் ‘பூமிகா’ என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இவர் தயாரிக்கும் அடுத்தடுத்த பல படங்களின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “எப்படி இது சாத்தியமானது…?” என்று கேட்டால்.. “முதலில் நல்ல கதை.. சிறந்த இயக்குநர்.. இரண்டும் கிடைத்துவிட்டால் அவர்களிடமே பட்ஜெட் கேட்டு.. முதல் காப்பி அடிப்படையில் அவர்களிடத்தில் பணத்தைக் கொடுத்து ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துத் தரும்படி சொல்லிவிடுவேன். இதுதான் சிறந்த வழி. எளிய வழி. இதைச் செய்தால் எந்தப் பிரச்சினையும் வராது..” என்கிறார் சுதன் சுந்தரம்.
இதேபோல், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா பிரபுதேவாவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் மூன்று படங்கள் கைவசம் இருக்கின்றன.
இடையில் சுந்தர் சி., எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கப் போவது அமிர்தா ஐயர்.
இப்படி ஒரு பக்கம் லாக் டவுன்.. தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதியில்லை என்ற சூழ்நிலை நிலவி வந்தாலும் புதிய படங்கள் தயாரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் தமிழ்ச் சினிமா ஓடிக் கொண்டிருப்பது நிச்சயமாக ஆச்சரியமான விஷயம்தான்.