full screen background image

கடம்பன் – சினிமா விமர்சனம்

கடம்பன் – சினிமா விமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இது இவரது 89-வது தயாரிப்பாகும். நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது.

படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கேத்தரின் தெரஸா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, எத்திராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார், இசை – யுவன்சங்கர் ராஜா, படத் தொகுப்பு – தேவ், கலை – A.R.மோகன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, இணைத் தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு  – ஆர்.பி.சௌத்ரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராகவா.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கடம்பவனம் என்னும் மலைக் கிராம்ம்தான் படத்தின் கதைக் களம். அங்கே வாழும் மண்ணின் மைந்தனான ஆர்யா எதற்கும் பயப்படாத ஆனால் மண் மணம் மாறாத, பாசம் கொண்ட மனிதன்.

அதே ஊரில் வசிக்கும் ராஜசிம்மனின் தங்கையான கேத்தரின், ஆர்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். முதலில் இதனை ஏற்காக ஆர்யா பின்பு தனக்கும் ஒரு துணை வேண்டுமே என்பதற்காக கேத்தரினின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த நேரத்தில் பிரபலமான கார்ப்பரேட் நிறுவனமான ஒரு சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தயாரிப்புக்கான தாதுப் பொருள்கள் இயற்கையாக எங்கே கிடைக்கிறது என்பதை தேடுகிறது. அவர்களது பார்வையில் இந்தக் கடம்ப வனம் கிராமம் சிக்குகிறது.

அங்கேயுள்ள மக்கள் மொத்த பேரையும் மலையில் இருந்து கீழே இறக்கிவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் இயற்கை வளங்களை அள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார் சிமெண்ட் நிறுவனத்தின் அதிபரான ராணா.

அந்தப் பகுதி வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்.. அரசு அதிகாரிகள் என்று அனைவருமே அந்த கார்ப்பரேட் நிறுவனம் அள்ளி வீசும் காசுக்காக அடிபணிந்து போக.. மலைவாழ் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பலிக்கவில்லை. வேறு வழியில்லாமல் சூழ்ச்சியால் மக்களை வெல்ல நினைக்கிறார் தீப்ராஜ் ராணா.

ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி இருவரையும் சமூக சேவகர்கள் என்ற போர்வையில் கடம்பவனத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து கிராம மக்களை மூளை சலவை செய்கிறார்கள். மலையடிவார ஊருக்கு மக்களை அழைத்து வந்து அங்கேயிருக்கும் சொகுசு வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டி “இதேபோன்ற வாழ்க்கையை நீங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது…” என்று தூபம் போடுகிறார்கள்.

ஆனால் கடைசி நேரத்தில் முழித்துக் கொள்ளும் ஆர்யா, இது பற்றி தனது மக்களுக்கு எடுத்துரைக்க.. ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தியின் சூழ்ச்சி தோல்வியடைகிறது. இதையடுத்து காவல்துறையை வைத்து அடக்குமுறையை ஏவுகிறார்கள். இதனால் அந்தக் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிப்படைய.. சிலர் இறந்தும் போகிறார்கள்.

அந்த ஒரே இரவில் அந்த ஊர் மக்கள் துரத்தப்பட்டு.. அவர்களது இருப்பிடங்கள் இடிக்கப்பட்டு, குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு.. ஊரே துடைத்து எடுக்கப்படுகிறது. மறுநாளே கனிம வளங்களை தோண்டியெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது.

தாக்குதலினால் மக்களை பிரிந்து அல்லாடும் ஆர்யா.. சில நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தையும், மக்களையும் சந்திக்கிறார். திரும்பவும் தனது ஊரான கடம்பவனத்தை எப்பாடுபட்டாவது தான் கைப்பற்றுவேன் என்கிறார். இதனை எப்படி அவர் சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் பிற்பாதியின் திரைக்கதை.

இதற்கு முன்பு திரைக்கு வந்த காடு சார்ந்த படங்களின் பாதிப்பு, இந்தப் படத்திலும் இருப்பதால் கதை எந்தவிதத்திலும் பார்வையாளனை கவரவில்லை என்பது இந்தப் படத்திற்கு நேர்ந்த சோகம்.

ஆர்யா மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். தனது முறுக்கேறிய உடல் வாகுக்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. படத்திலும் அதனை காட்டியிருக்கிறார். தேனெடுக்க அத்தனை உச்சியில் இருந்து கீழே குதித்து, அபாயகரமான ஷாட்டுகளிலும் நடித்திருக்கிறார்.

சண்டை காட்சிகள் அனைத்துமே ரியலிஸமாக இருப்பதை போலவே படமாக்கியிருப்பதால் ஆர்யாவின் பங்களிப்பு இதில் அதிகம்தான். இத்தனை செய்தும் எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டதுதான் கொடுமையான விஷயம்.

கேத்தரின் தெரசா இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டோம் என்பதே தெரியாமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து யோசித்துக் கொண்டிருந்ததாக ஆர்யா பேசியிருந்தார். ஆனால் கேத்தரினுக்கு இதுவொரு நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

படம் முழுக்க செருப்புகூட அணியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் ஓடியாடி நடித்திருக்கிறார். இவருடைய முதல் அறிமுக ஷாட்டே அழகு. ஒளிப்பதிவாளரின் திறமையினால் கேத்தரினை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள். ஆனால் நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயம் இருப்பதை மறந்துவிட்டதால், அந்தக் காட்டுவாசி பெண்ணாக அவரை நினைக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

சாதாரணமான தரையில் இருக்கும் மனிதர்கள் பற்றிய படங்களில் இருக்கும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை மூட நாகரிகம் இன்னமும் தொடாத இந்த மக்களிடத்திலும் இருக்கிறது என்பது காட்டியிருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆர்யாவை காதலிப்பதாகச் சொல்லி விரட்டும் கேத்தரினின் திரைக்கதை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

முருகதாஸ், ஜானகி குடும்பக் கதை ஏற்கெனவே ‘புலி முருகன்’ என்ற மலையாளப் படத்தில் வந்த கதை. அதில் லால் அனாசயம் செய்திருப்பார். இதிலும் அந்தக் கதையை அப்படியே வைத்திருக்கிறார்கள். சிந்தனை திறன் கோ இன்சிடென்ட்ஸ் போலிருக்கிறது.

மற்றபடி மூப்பனாக நடித்த சூப்பர் சுப்பராயன், கேத்தரினின் அண்ணனாக நடித்த ராஜசிம்மன், அம்மாவாக நடித்த எலிசபெத், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி அருண் என்று பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ராஜசிம்மனின் கடைசி கட்ட பல்டி எதிர்பாராதது.

இத்தனை மெகா பட்ஜெட் படத்திற்கேற்றபடியான தொழில் நுட்பக் கலைஞர்களும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் அழகான ஒளிப்பதிவுதான் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான விஷயம்.

முதல் காட்சியிலேயே ஆர்யா தேனெடுக்க அந்த மலையுச்சியில் இருந்து கீழே குதிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்த காட்சிகளுமே படத்தின் பிரம்மாண்டத்தை சொல்லாமல் சொல்லிவிட்டன. அழகான கிராமத்து குடியிருப்புகள்.. நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டம், கேத்தரினின் அழகு.. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம்.. இறுதியான சண்டை காட்சிகளை படமாக்கிய கஷ்டம்.. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாருக்கு மிகப் பெரிய ரோஜா பூ மாலையை காணிக்கையாக்க வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள் ஸார்..

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஒத்த பார்வையில்’ கேட்கவும், பார்க்கவும் சிறப்பு. ‘உச்சிமலை அழகு’ காடுகளின் அழகையும், கிராம மக்களின் வாழ்க்கையையும் காட்டியது. ‘சாமக் கோடங்கி’ தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களைத் தட்டியெழுப்பி பார்க்க வைத்தது. ‘ஆகாத காலம்’ சோகத்தைப் பிழிந்தெடுத்த்து. ‘இளரத்தம் சூடேற’ அடுத்தது என்ன என்பதற்கான ‘ஹிப்’பை ஏற்றிவிட்டது.. ஆனால் பின்னணி இசையில்தான் காதைக் கிழித்துவிட்டார் யுவன்.

படத் தொகுப்பாளர் கொஞ்சம் கருணை வைத்து கிளைமாக்ஸில் கை வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இத்தனை நீண்ட பரபரப்பான சண்டை காட்சியில் யதார்த்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருந்ததால், அதனை குறைவுபடுத்தியிருந்தால் கொஞ்சம் நிறைவாகவே இருந்திருக்கும்..!

இத்தனை நடிகர், நடிகைகளையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படம், அதற்கான முழு தகுதியுடைய கதையுடன் வெளிவரவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

முந்தைய ஷாட்வரையிலும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யா, ஒரேயொரு விஷயத்தைக் கேட்டவுடன் பட்டென்று பொங்கியெழுந்து “எங்க ஊரை நாங்களே காப்பாத்திக்கிறோம்…” என்று போர்க்குரல் கொடுப்பதெல்லாம் திரைக்கதையின் ஓட்டையைத்தான் காண்பிக்கிறது.

இந்த மண்ணைவிட்டு அகல மாட்டோம் என்று கிராம மக்கள் சொல்வதையும், இதற்காக வில்லன் அனுப்பி வைக்கும் ஆட்கள் செய்யும் ரவுடித்தனத்தையும் சரியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டிய இயக்குநர் கோட்டைவிட்டிருப்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.

அந்தக் காட்டுக்குள் வில்லன்கள் கையில் மெஷின் கன்னோடு வந்து நிற்பதை பார்த்த மாத்திரத்திலேயே தியேட்டரில் சிரிப்பலைகள் எழும்புகின்றன, இயக்குநர் எத்தனை வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்று..!? ஹீரோ ஆர்யா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறாரே.. அவராவது அட்வைஸ் செய்திருக்கக் கூடாதா..? கிளைமாக்ஸே சொதப்பலாகியிருப்பதால் படம் எந்தவொரு பாதிப்பையும் ரசிகனுக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

“நிரம்பப் கஷ்டப்பட்டு தாய்லாந்துவரையிலும் சென்று கிளைமாக்ஸில் 100 யானைகளை வைத்து படமாக்கினோம்…” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்கள். ஆனால் அந்த அளவுக்கான காட்சிகள் படத்தில் இல்லை என்பது அதிர்ச்சியான விஷயம். 100 யானைகள் கொண்ட பிரம்மாண்டத்தை படத்தில் எதிர்பார்த்து காத்திருந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. இதை சி.ஜி.யிலேயே செய்திருக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

படத்திற்கு அதிக செலவு செய்வது முக்கியமல்ல. எந்தக் கதைக்காக செய்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இனிமேல் ஆர்யா இதனைக் கவனித்தில் கொண்டு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்..!

கடம்பன் – பெருத்த ஏமாற்றம்..!

Our Score