full screen background image

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திரைப்பட ஸ்டூடியோ..!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திரைப்பட ஸ்டூடியோ..!

கலை நயத்தோடு மிக பிரம்மாண்டமான செலவில் சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஜி ஸ்டுடியோவை’ நடிகர் கமல்ஹாசன்  திறந்து வைத்தார். 

தமிழ் திரையுலகின் முதுகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் காலப்போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில்  நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான ‘G STUDIO’, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது.

Gokulam-Studios-Inaguration-Function-Stills-12

இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். உலக தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

இசைஞானி இளையராஜா குத்து விளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும்  இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினார். 

கோகுலம் குழுமத்தின் நிறுவனர்  திரு.கோபாலனோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பற்றியும் இந்த விழாவில்  கமல்ஹாசன்  பேசியது குறிப்பிடத்தக்கது.

“எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள்தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை பார்த்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு திரு கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை ‘தர்மா’ என்றுதான் நான் சொல்லுவேன்.

kamal-4

ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ,  அதே போல் இந்த ஜி – ஸ்டுடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது  காதல் இருந்தால்தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்..” என்று பெருமையாக  கூறினார் கமல்ஹாசன். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், திரு கோபாலன் அவர்களை தமிழ் திரைலகிற்கு மேலும் நல்ல திரைப்படங்களை வழங்க வரவேற்றார்.

vishal-1

“சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில், தலை சிறந்த ஸ்டுடியோ ஒன்று தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. இனி மற்றவர்களைவிட நாங்கள் ‘உள்கட்டமைப்பில்’  எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பெருமையோடு சொல்லலாம்” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் விஷால்.

தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “இது போன்ற மிக பிரம்மாண்டமான ஸ்டூடியோ, சென்னையில் நிறுவப்பட்டிருப்பதால் தமிழ்ச் சினிமா துறைக்கு மிகப் பெரிய நன்மையை அளிக்கப் போகிறது..” என்று கூறினார்.

r.k.selvamani

தென்னந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இங்கு உள்ள அறைகள் அனைத்தும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி லைட் மென் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இங்கு இருக்கும் இது போன்ற வசதியை நான் வேறெங்கும் கண்டதில்லை…” என்றார்.

‘ஜி – ஸ்டுடியோஸின்’ நிர்வாக இயக்குநரான பிரவீன் பேசுகையில், “இந்த ஸ்டுடியோ துவங்கும் திட்டத்தை எங்களுக்கு அளித்தவர் கமல்ஹாசன் சார்தான். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். பல ஹாலிவுட் ஸ்டுடியோக்களை நாங்கள் நேரில் போய்  பார்த்து, அதற்கு இணையாக நாங்கள்   ஜி – ஸ்டுடியோஸை எழுப்பி இருக்கின்றோம்…”  என்றார் பெருமையாக..!

“தரத்திலும், அதி நவீன வசதிகளிலும் ஜி – ஸ்டுடியோஸ் சிறந்து விளங்கும்..” என்று உறுதி அளித்தார் கோகுலம் கோபாலன். 

விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில்  பிலிம் சேம்பர் தலைவர் எல்.சுரேஷ், இயக்குநர்கள் சங்கத் தலைவரான விக்ரமன், ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கண்ணன், கலை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான சண்முகம் அங்கமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score