கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர், நடிகைகளும் படத்தில் நடிக்கிறார்கள்.
கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத் தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதியிருக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனித்திருக்கிறார்.
படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், ஜி.தனஞ்செயனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘சத்யா’, ‘சைத்தான்’ படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் இது.
கன்னடத்தில் ‘கவலுதாரி’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தக் ‘கபடதாரி’ திரைப்படம்.
40 ஆண்டுகளுக்கு முன்பாக கொலையான 3 பேரின் வழக்கினை தனது அதீத ஆர்வம் காரணமாக விசாரிக்க நினைக்கும் ஒரு போக்குவரத்து காவல் துணை ஆய்வாளரின் கதைதான் இந்த ‘கபடதாரி’ திரைப்படம்.
சென்னையில் போக்குவரத்துக் காவல் பிரிவில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் ‘சக்தி’ என்னும் சிபிராஜ். ஒரு நாள் அவர் பணியாற்றும் இடத்தின் அருகே மெட்ரோ ரயில் வேலைக்காக பள்ளம் தோண்டுகிறார்கள். தோண்டிய இடத்தில் 3 வெவ்வேறு வயதுடையவர்களின் எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன. போலீஸ் வருகிறது. விசாரணையும் தொடர்கிறது.
க்ரைம் பிரிவில் தீவிர ஆர்வமுடைய சிபிராஜ் இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறார். இதற்காக தன்னை கிரைம் பிரிவுக்கு மாற்றும்படி கமிஷனரிடம் கோரிக்கை வைக்கிறார். கமிஷனர் அதை நிராகரிக்கிறார்.
ஆனாலும், தளராமல்.. போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றியபடியே இந்த வழக்கை தானே தனியாக விசாரிக்கத் துவங்குகிறார் சிபிராஜ். இதற்காக போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் உள்ளவர்களும் அவருக்குத் தனித்தனியே உதவுகிறார்கள்.
கொலையுண்ட அந்த 3 பேர் யார்.. யார்..? அவர்கள் கொலை செய்யப்பட்டது எப்படி..? அவர்களைக் கொலை செய்தது யார்..? இதனை சிபிராஜ் எப்படி கண்டறிகிறார்…? என்பதுதான் இந்தச் சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.
காவல்துறையின் துணை ஆய்வாளர் கேரக்டரில் நடித்திருக்கும் சிபிராஜ் போலீஸ் கேரக்டருக்குப் பொருந்துகிறார். கிரைம் டிபார்ட்மெண்ட் மீதான தனது தனி ஆர்வத்தை சரியான முறையிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவருடன் நடித்த ஜெயப்பிரகாஷ், நாசர் அளவுக்கான பெர்பார்மன்ஸை அவரால் கொடுக்க முடியவில்லை.
குறிப்பாக டென்ஷனை ஏற்ற வேண்டிய இடங்களிலும், கூடுதல் கவனத்தை ஈர்க்க வேண்டிய இடத்திலும் அவர் நடிக்க வைக்கப்படவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும்.
இவரிடத்தில் நடிப்பை வரவழைப்பது போன்ற கதாபாத்திரங்களை எந்த இயக்குநர் தரப் போகிறாரோ தெரியவில்லை..? அதோடு இந்தப் படத்திற்குத் திரைக்கதைதான் நாயகன் என்பதால் இவருடைய பங்களிப்பு பற்றி இயக்குநரே கவலைப்படவில்லை என்பது போலத்தான் பல காட்சிகளில் தோன்றுகிறது.
சிபிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் கன்னடத்தில் நடித்த நடிகரே இதேபோல்தான் அந்தப் படத்திலும் தெரிந்தார் என்பதால் இது சிபிராஜின் தவறில்லை என்றே சொல்லலாம்.
‘நாயகி’ என்று சொல்லப்பட்ட நந்திதாவுக்கு இந்தப் படத்தில் அதிக வேலையில்லை. டூயட், காதல் போன்றவைகள் இந்தப் படத்திற்குத் தேவையில்லை என்பதால் நாயகியின் பங்களிப்பும் தேவையில்லாமல் போய்விட்டது. இந்தக் கதாபாத்திரத்தையும் படத்தின் மையக் கதையோடு இணைந்து வருவதுபோல மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவர் நடித்த சில காட்சிகளில் அவருடைய கேரக்டருக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார். குறைவில்லை.
சந்தேகமே இல்லாமல் படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ‘ரஞ்சனாக’ நடித்த நாசரும், பத்திரிகையாளர் ‘குமாராக’ நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷூம்தான்.
நாசர் தான் அறிமுகமான காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது பண்பட்ட நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். துப்பாக்கிச் சுடுதலோடு அறிமுகமாகி மதுவின் தள்ளாட்டத்தில் அவர் பேசும்விதமும், பின்பு சிபிராஜூக்காக இந்த வழக்கில் கால் பதித்து அவருக்கு அறிவுரை சொல்லி வழி நடத்துவதிலும்தான் படத்தின் பின்பாதி கொஞ்சமேனும் சுவாரஸ்யமாகியிருக்கிறது.
இதேபோல் அந்த ரிசார்ட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்று கேட்டு நாசர் செய்யும் அலப்பறை மிக சுவாரஸ்யம். கொஞ்சம், கொஞ்சமாக டிவிஸ்ட்டுகளை விடுவித்துக் கொண்டே வந்த திரைக்கதையில் நாசரின் பங்களிப்பு மிக அதிகம் என்றே சொல்லலாம்.
இவருக்கு அடுத்து மூத்தப் பத்திரிகையாளராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ். துவக்கத்தில் இருந்தே அவரிடத்தில் ஒரு மர்மம் இருக்கிறது என்பதை பூடமாக உணர்வதைப் போல காட்சிகள் இருப்பதால் அவர் மீதான கவனம் பார்வையாளருக்கு அழுத்தமாக கிடைத்திருக்கிறது.
தனது பரிதாபமான வாழ்க்கையை அவர் கடைசியாக சொல்லும்விதமும், தன் முடிவை தானே தேடிக் கொள்ளும் பரிதாபமும் படத்தை சோகமாக முடிக்க வைக்க உதவியிருக்கிறது.
இந்தப் படத்தின் மூலமாக கன்னட படத்தில் வில்லனாக நடித்திருந்த அதே சம்பத் மைத்ரேயா என்ற நடிகரே இந்தப் படத்திலும் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவருடைய நடிப்பு புதுமையான அனுபவம் என்றாலும், கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட்டது. இவருக்குக் கொடுத்த இரவல் குரலும் இடையூறாகிவிட்டது.
மேலும் நடிகை ரம்யாவாக, சுமா ரங்கநாத் சில காட்சிகளே வந்து போயிருக்கிறார். இவருடைய நடனக் காட்சியை பாதியோடு நிறுத்தியதில் தமிழ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான். இவருடைய நடிப்புக்கேற்ற ஸ்கோப் உள்ள காட்சிகளை கட் செய்திருப்பதால் வீணான கேரக்டராக போய்விட்டது.
பிளாஷ்பேக்கில் வரும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், டிவி சேனல் ஓனரான தனஞ்செயன், இளம் வயது ராயுடுவாக நடித்த யாசர் என்று மற்றவர்களும் தங்களுடைய பங்களிப்பை எளிமையாக செய்திருக்கிறார்கள்.
ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். சின்ன பட்ஜெட்டில் குறுகிய கால படப்பிடிப்பில் இத்தனை வேகமாக லைட்டிங் செய்து இதனை சாதித்திருக்கிறார் என்றால் இது நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான்.
படத்திலேயே பாராட்டத்தக்கது என்று முதலிடத்தில் இருப்பது படத்தின் பின்னணி இசைதான். சைமன் கே.கிங்கின் அந்த தீம் மியூஸிக் ரம்மியம். படத்தின் கதையின் ஊடாக நம்மை அழைத்துச் செல்வதும் அந்த பின்னணி இசைதான்.
‘கபடதாரி’ பாடல் கவனிக்க வைக்கிறது. மாண்டேஜ் காட்சிகளாகவே பாடல் காட்சிகளை நகர்த்தியிருப்பதால் பாடல்கள் முக்கியத்துவம் பெறவில்லை.
முதல் பாதியில் இருந்த தொய்வினை, இரண்டாம் பாதியில்தான் நிவர்த்தி செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன். இந்தக் கச்சிதமான நறுக்குதலை முதற் பாதியிலும் செய்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்..?
சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்றாலே ரசிகர்களுக்கு முதல் காட்சியில் இருந்தே ஒருவித திகில் மனப்பான்மையைக் கொடுக்க வேண்டும். அதுதான் படத்தின் இறுதிவரையிலும் ரசிகனை படத்துடன் ஒன்ற வைக்கும்.
இந்தப் படத்தில் அந்த ஒன்ற வைப்பு ஜஸ்ட் மிஸ்ஸிங். எதனாலோ என்று தெரியவில்லை. படத்தின் துவக்கத்தில் இருந்தே படம் ஜெட் வேகத்தில் பறப்பதுபோல தெரிந்தாலும் நடிப்பும், கதையும் தெரியாமல் தேவைக்கதிகமாக 3 பேரின் கொலை சம்பவம் டிவிஸ்ட்டான திரைக்கதையாலும், தெளிவில்லாத வசனங்களினாலும் சொல்லப்பட்டு பார்வையாளர்களை டயர்டாக்கியுள்ளது.
நல்ல வேளையாக படத்தில் காதல், டூயட் என்று படத்தை வெளியே நகர்த்தாமல் கதைக்குள்ளேயே நகர்த்தியற்கு முதற்கண் இயக்குநருக்கு நன்றி. ஒரிஜினல் கதைக்கு சேதாரம் இல்லாமல் தமிழிலும் திரைக்கதையை அமைத்தவர்கள் அதைவிடவும் லாஜிக் எல்லை மீறல்கள் இல்லாமல் மாற்றியமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சிற்சில காட்சிகளின் முடிவில் வெளிப்படும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தை பேச வைக்கிறது. அதிலும் கடைசியாக சிபிராஜின் தந்தையை கதையுடன் தொடர்புபடுத்தும் அந்த டிவிஸ்ட் எதிர்பாராதது.
என்னதான் மர்மக் கதை என்றாலும், பல இடங்களில் லாஜிக் எல்லை மீறி போயிருக்கிறது என்பது உண்மைதான். கன்னட மூலத்திலும் இப்படியேதான் இருக்கிறது என்பது ஒரு சுவையான விதிமீறல்.
படத்தில் காண்பிக்கப்படுவதுபோல ஒரு சாதாரண எஸ்.ஐ.யை கமிஷனர் நேரில் கூப்பிட்டு கண்டிப்பதெல்லாம் நடக்காத காரியம். எஸ்.ஐ.க்கு மேலே இன்ஸ்பெக்டர், ஏ.சி., டி.சி., என உயரதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் பேசவே முடியும்.
கிரைம் டிபார்ட்மெண்ட்டுக்கு மாறுதல் கோருவதும், கிடைப்பதும்கூட புரோட்டாகால்படிதான் விண்ணப்பிக்கவே முடியும். எடுத்த எடுப்பிலேயே போக்குவரத்து பிரிவில் கிடைக்கவும் கிடைக்காது. விருப்பப்பட்டால்தான் அதுவும் முடியும்.
இந்த ஒரு விஷயத்திலேயே சிபிராஜ் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. அதோடு போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ. வேலையை பார்த்துக் கொண்டே இந்த துப்பறிதல் வேலையையும் தொடர்கிறார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
இந்த வழக்கினை துப்பறிய வேண்டும் என்கிற அவரது ஆசை எப்போது வெறியாகவும், கனவாகவும் மாறுகிறது என்பதற்கான அழுத்தமான காரணமும் இதில் சொல்லப்படவில்லை. போலீஸ் கமிஷனர் போகிற போக்கில் சிபிராஜை கூப்பிட்டு கண்டிப்பதெல்லாம் சினிமாவுக்காக எழுதப்பட்ட திரைக்கதையாகத் தெரிகிறது.
இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்ததற்காக சிபிராஜை சஸ்பெண்ட் செய்து அந்தக் கோபத்தில் அவர் தனித்து செயல்பட்டு உண்மையைக் கண்டறிகிறார் என்றாவது திரைக்கதையை மாற்றியிருந்தால் கொஞ்சமாவது நம்பியிருக்கலாம்.
சிபிராஜை நம்பி இந்த வழக்கிற்கான ஆதாரங்களை பல்வேறு போலீஸ் துறையினர் அவரிடம் வந்து கொடுப்பதும் நம்பகத்தன்மையில்லாதது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கப் போகிறவர் படுகொலை செய்யச் சொல்வது.. நாசரை கட்டிப் போட்டுவிட்டு தனது பழைய கதையை ரீவைண்ட் செய்து சொல்வதெல்லாம் நமத்துப் போன பட்டாசாகிவிட்டது. அந்த இடத்தில் அந்த முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்புதான் ஓரளவு அந்தக் காட்சியை ரசிக்க வைத்திருக்கிறது.
நடிகை ரம்யாவின் கதாபாத்திரத்தை மேலும் முதன்மைப்படுத்தியிருந்தால் திரைக்கதைக்கு வலுவாக இருந்திருக்கும். விசாரிப்பதற்காக ஒரு போலீஸ் எஸ்.ஐ. வந்தவுடன் நடிகையின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை கன்னடத்தில்கூட வலுவாகக் காட்டியிருந்தார்கள். தமிழில் அந்தக் காட்சி ஒட்டவேயில்லை.
அதேபோல் சுமாவை வீட்டில் சிபிராஜ் சந்தித்து பேசும் காட்சியில் சிபிராஜ் இங்கே எதற்கு வந்தார்.. ஏன் திடீரென்று வெளியேறினார் என்பதற்கெல்லாம் விடை சொல்லாமலேயே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் ஒரு சிறந்த கதை, திரைக்கதையை சுவாரஸ்யம் இல்லாத தன்மையுடன் இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே சமயம், இரண்டாம் பாதியில் இருக்கும் அதிரடி டிவிஸ்ட்டுகள் மட்டுமே படத்தை கடைசி வரையிலும் பார்க்க வைக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்..!
திரைக்கதையிலும், நடிப்பிலும் இன்னமும் செப்பனிட்டு வழங்கியிருந்தால் இந்தக் ‘கபடதாரி’ நிச்சயமாக நமது கவனத்தை ஈர்த்திருப்பான்..!