full screen background image

காவியத்தலைவன் உருவான கதை..!

காவியத்தலைவன் உருவான கதை..!

‘காவியத்தலைவன்’ பிரஸ் மீட்டில் அதிக நேரம் யார் பேசுவது என்று நடிகர் சித்தார்த்துக்கும், இயக்குநர் வசந்தபாலனுக்கும் இடையில் பெரும் போட்டியே நடந்துவிட்டது.

நடிகர் சித்தார்த் ஒரு இயக்குநரை போல படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கூடவே ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இந்தப் படத்தில் இணைந்தார் என்பதையும் விலாவாரியாக தெரிவித்தார்.

கடைசியாக பேச வந்த வசந்தபாலனும் மிக டென்ஷனாக.. உணர்ச்சிப்பூர்வமாக.. தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டிவிட்டார்.. தனது கனவு நனவாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் உணர்வை அன்றைக்கு மேடையில் வசந்தபாலனிடம் காண நேர்ந்தது..

அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள்..

“எனக்கு சினிமாவைத் தவிர வேற எதுவுமே தெரியாது. 1992-ல நான் அஸிஸ்டெண்ட் டைரக்டர், எடிட்டிங் அஸிஸ்டெண்ட்டா சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன். என் வாழ்க்கை , கனவு எல்லாமே சினிமாதான். நல்ல படம் பண்றதுதான் ஆசை. பிளாட் வாங்கி போடறதுலாம் தெரியாது.

சினிமாவைத் தன்னுடைய வாழ்க்கையா நினைச்சு வாழ்ந்தவங்க மண் இது. சத்யஜித்ரே, காந்தி படம் எடுத்த டைரக்டர்.. எல்லாருமே தன்னுடையகுடும்பம்,  குழந்தைகள் எல்லாத்தையும் விட்டுட்டு சினிமாவே வாழ்க்கைன்னு நினைச்சு வாழ்ந்த மேதைங்க..  சினிமாங்கறது வியாபாரமில்லை, ஒரு கலை. மாபெரும் கலைஞர்கள் வாழ்ந்த இடத்துல ஷங்கர் ஸார்.. ரஹ்மான் ஸார் மாதிரி.. இன்ச் பை இன்ச்சா ஒவ்வொண்ணையும் அப்படியே செதுக்கவாங்க. அது மாதிரி நாமளும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சிதான் படங்களை இயக்கிட்டிருக்கேன். ஒரு நல்ல சினிமாவை ஒரு ஃபிரேம்கூட மிஸ் பண்ணாம செதுக்கணும்கறதுதான் பின்னாடி இருக்குற ஒரு வேட்கை, தாகம்.

இந்தப் படம் ஒரு நாள்ல ஆரம்பிச்சது. அங்காடி தெரு கிராப்ட் வொர்க்குக்காக திருநெல்வேலி போயிருந்தேன். ஒரு நாள் ராத்திரி நானும் ஜெயமோகனும் பேசிட்டிருந்தோம். நீண்ட நேரமா பேசிக்கிட்டிருக்கும்போது, ஒளவை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற பயோகிராபி புத்தகத்தை பத்தி பேசிட்டிருந்தேன்.

நிறைய நாடகக் கலைஞர்கள் சம்பந்தமான வாழ்க்கை சம்பந்தமான, சுவாரசியமான தகவல்களை சொன்னாரு. சிவாஜிகணேசன் அவர்கள், எம்.ஆர். ராதா அவர்கள், கிட்டப்பா அவர்கள், கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பத்திலாம்… கே.பி.சுந்தராம்பாள்  நாடகத்திற்கு ஒரு டிரெயினையே விட்டிருக்காங்க. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் வந்து திருவள்ளுவர் அளவுக்கு புகழப்பட வேண்டிய ஒரு மாமனிதர்னு சொன்னாரு. அதெல்லாம் ஒரு கோல்டன் பீரீயட். மதுரையில இருந்ததுன்னு.. நாடகக் கலையை பத்தி ஒரு கனவை விரிச்சாரு.

அன்னைக்கு நிறைய விஷயம் பேசினாலும் இந்த நாடகம் சம்பந்தமா பேசினது மட்டும் மனசுல ஸ்டிக் ஆயிருச்சு. மேற்கத்திய நாடுகள்ல இந்த நாடகம்ன்றது கோல்டன் பீரியட். இப்பக்கூட மேற்கத்திய நாடுகள்ல ஸ்டேஜ் ஷோக்கள் ஹவுஸ்புல்லா போயிக்கிட்டிருக்கு. ஆனா இந்தியால அந்த மொமண்ட்டே இல்லை.. மதுரையை மையமா வச்சி, நிறைய நாடகக் குழுக்கள் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கிப் படிச்சேன். அது 1974-ல வந்த கடைசிப் பிரதி.

அதைப் படிக்கிறப்ப எனக்கு நிறைய கலர் கலர் கனவுகள் வந்துச்சி. ராஜபார்ட்டாகவும், கள்ள பார்ட்டாகவும், ஸ்திரீபார்ட்டாகவும், தன் மொத்த வாழ்க்கையைம் அடமானம் வச்சி ஒரு குருகுலமா வாழ்ந்த மனிதர்கள். நடிப்பு, பாட்டு தவிர அவர்களுக்கு வேற கண்ணே தெரியாது. ஒரு இருண்ட வாழ்க்கை வாழ்ந்தவங்க. தினம் தினம் பாட்டுதான். தினமும் காலையில 6 மணி வரைக்கும் நடிச்சி கத்தி, கூப்பாடு போட்டு பொத்துன்னு போய் விழுந்தாங்கன்னா, பார்த்துக்காங்க. கிட்டப்பா எட்டுக் கட்டைல பாடினாருன்னா ஊரு முழுக்க அப்படி கேக்குமாம்..!

அதைப் படிக்க, படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தது. தமிழ்ல பெரிய அளவுல நாடகம் சம்பந்தமான படம் வரலை. நாடக நடிகர்கள் படம் பற்றி எந்த படமும் வரலை. இங்கிலீஷ்ல ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வந்திருக்கு. தமிழ்ல ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மட்டுமே வந்திருக்கு. 1970-ல வந்துச்சு. அண்ணன், தம்பி பாசத்தைப் பத்தி எடுத்த படம். நல்ல நடிப்பை யார் நடிச்சாலும் பார்க்கிற உலகம் இருக்கு, நானும் இருக்கிறேன். அப்படி ஒரு நடிப்பு சம்பந்தமான கதை எழுதணும்னு ஆசைப்பட்டேன். அப்ப நான் எழுதன கதைதான் இந்தக் ‘காவியத் தலைவன்’.

அவ்வளவு இண்ட்ரஸ்ட்டிங்கா இருந்துச்சு.. ஒவ்வொரு சீன்.. ஒவ்வொரு டயலாக்கையும் எழுதும்போது சுவாரஸ்யமா இருந்துச்சு.. அங்காடிதெருவுக்கு அடுத்தே இதை பண்ண வேண்டியது.. மாஜிக்கலா தொடர்ந்து பண்ண வேண்டாம்னு நினைச்சேன். இப்போதைக்கு அதைத் தொட வேணாம்னு நினைச்சிருந்தப்ப ‘அரவானு’க்கு அப்புறம் திரும்பத் திரும்ப தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தான் ராத்திரி.. 2 வருஷத்துக்கு ஒரு தடவைதான் படம் பண்றோம். அரிதாத்தான் படம் பண்றோம். ஒரு மேஜிக்கலான மொமண்ட்டை ஸ்கிரீன்ல பிரஸண்ட் பண்ணனும்.. ஆடியன்ஸுக்கு புதுசா ஒரு விஷூவலை கொடுக்கணும்ன்ற வேட்கைல சரி.. எப்படியாவது இந்த படத்தை எடுத்துடணும்னு முடிவு பண்ணினேன்…” என்றார்.

காத்திருக்கிறோம் ஸார்.. உண்மையான உழைப்பும், சிறந்த நோக்கமும் என்றைக்கும் சோடை போகாது..! நிச்சயம் பலனளிக்கும்..!

Our Score